விசிக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் காட்டுத் தீயாக கலந்து எரிகிறது. வைகோ தன் எதிர்ப்பை கடுமையாக பதிய வைத்திருக்கிறார். தன் பங்கிற்கு ரவிக்குமார் புதுச்சேரி முதல்வரிடம் போய் பாதுக்காப்பு கேட்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ரவிக்குமார் உயிருக்கு உலை வைக்கும் போக்கிற்கு எதிராக கண்டனங்கள் கத்தைக் கத்தையாக வந்து குவிகின்றன. இதற்கு என்ன சொல்கிறார் ரவிக்குமார்?
உங்களுக்கு கொலை மிரட்டலா? உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?
“எனக்கேத் தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறையும், மாநில உளவுத்துறையும்தான் எனக்கே முதலில் தகவல் சென்னது”
இது எவ்வளவு நாட்களுக்கு முன்னால்..?
“சுமார் பத்து நாட்கள் இருக்கும். பிறகு நான் விளக்கம் கேட்டேன். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய புனேவைச் சேர்ந்த பயங்கரவாதி அமோல் காலே என்பவரை கர்நாடக மாநிலச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. அப்போது அவனிடமிருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அந்த‘டைரி’யில் இனி கொலை செய்யப்பட வேண்டியவர்கள் யார்? யார்? என ஒரு குறிப்பு இருந்துள்ளது. ஆதில் மொத்தம் 34 பேரின் பெயர் பட்டியல் ஒன்று இருந்துள்ளது. அதில்தான் என்னுடைய பெயரும் இருப்பதை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது.”
கௌரி லங்கேஷ் கொலையை எப்படி பார்க்குறீர்கள்..?
“கௌரி லங்கேஷ் மட்டுமல்ல; மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் எம்.எம். கல்புர்கி, மற்றும் கர்நாட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரின் கொலையும் 2013-ல் தொடங்கி 2017-க்குள் நடைப்பெற்றுள்ளது. இந்த நால்வர் கொலையும் திட்டமிட்டு ஒரே பயங்கரவாத குழுதான் செய்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த நாலு பேரும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள். சமூகத்தில் மக்களுக்காக போராடுபவர்கள். பன்சாரே சோஷிலிஸ்ட் தலைவர். நரேந்திர தபோல்கர் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிவர். கல்புர்கி ஒரு பேராசிரியர், ஆராய்ச்சியாளர். கௌரி லங்கேஷ் ஒரு பத்திரிகை நடத்தி வந்தவர். இவர்கள் அனைவருமே அடிப்படையில் மக்களுடைய பிரச்னைக்காக குரல் கொடுத்தவர்கள். இவர்கள் யாரும் பெரிய அரசியல் தலைவர்கள் கிடையாது. இவர்கள் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள். இதையெல்லம் குறி வைத்துதான் இந்தக் குழு ஒவ்வொருவராக கொலை செய்து வருகிறது.”
நீங்கள் ஒரு அரசியல்வாதி? பிறகு ஏன் அவர்கள் உங்களை குறிவைக்க வேண்டும்...?
“என்னுடைய அரசியல் என்பது 2006-க்கு பிறகுதான். ஆனால் நான் இங்கு முப்பது வருடங்களாக எழுத்தாளராகதான் அறியப்படுகிறேன். தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன். பல நூல்கள் மெழிப்பெயர்ப்பு செய்துள்ளேன். பல தத்துவார்த்த கருத்துக்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளேன். என்னுடைய அடையாளம் என்பது எழுத்தாளர் என்பதுதான். நான் சட்டமன்ற உறுப்பினர் என்பது, ஒரு கட்சியின் பொதுசெயலாளர் என்பதும் அண்மை காலமாகதான்.”
தலித்துகள் உரிமையை பேசுவதால்தான் உங்களுக்கு இந்த மிரட்டலா?
“இதுவரை கொலை செய்யப்பட்ட நான்கு பேருமே யாருக்கு எதிராகவும் சென்று வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள் இல்லை. கடுமையான விமர்சனம் செய்தவர்கள் இல்லை. கொலை செய்பவர்களின் பார்வையில் ‘இந்து ராஷ்டிரம்’ இந்தியா முழுமைக்கும் அமைப்பதற்குத் தடையாக இருக்கும் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களை தேடிக் கொலை செய்வதே அவர்களின் நேக்கம். இதனால் அவர்களை நாங்கள் கொலை செய்தோம் என பிடிபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்து இருகிறார்கள்.”
பாதுகாப்புக்கோரி புதுவை முதல்வரை சந்தித்தீர்கள்... அவர் தரப்பில் என்ன உறுதிமொழி கொடுக்கப்பட்டது..?
“நானும், எங்கள் தலைவரும் பாதுக்காப்புகோரி 27-ம் தேதி தமிழக முதல்வரை சந்தித்தோம். அதேபோல் 29-ம் தேதி புதுச்சேரி முதல்வரை சந்தித்தோம். தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். புதுவை முதல்வர் எங்கள் முன்னாலேயே காவல்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டார்.”
உங்களுக்கு அரசு சார்பாக ஏதாவது பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா..?
“இதுவரை இல்லை. ஆனால் காவல்துறை என்னை தொடர்பு கொண்டு அதுபற்றி பேசியுள்ளார்கள். விரைவில் அரசு பாதுகாப்பு கொடுக்கும். அதற்கான வேலைகள்தான் நடக்கின்றன.”
கருத்து சொல்பவரை, கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதை விட்டுவிட்டு கொலை செய்வதை எப்படி எடுத்து கொள்வது..?
“குறிப்பாக இந்த மாதியான அமைப்புகள் பல ஆண்டுகளாக செயல்பட்டாலும் கூட, இப்போது இருக்கிற சூழல் இவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. அதும் குறிப்பாக பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின் இந்தச் சூழலை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். யார் மாட்டு இறைச்சி வைத்திருந்தாலும் அடிக்கலாம் என்பதும், முஸ்லிமாக இருந்தாலே அவர்களை கொலை செய்யலாம் என்ற நிலை இப்போது வந்துள்ளது. அதேபோல் தலித்தாக இருந்தாலே அவர்களை கொலை செய்யலாம் என்கிற நிலை இப்போது உருவாகி இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலைதான் இந்த அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.”
இந்த மாதிரியான கொலைகளுக்கு பின் யார் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
“நான் உளவுத்துறை இல்லை. இதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவர்கள் சிவசேனாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதன் பின்னால் இருக்கிறார்கள்.” என்றார்.