வடிவேலு இல்லாத மீம்ஸ்கள்.. நினைத்து பார்க்க முடியுமா!

வடிவேலு இல்லாத மீம்ஸ்கள்.. நினைத்து பார்க்க முடியுமா!
வடிவேலு இல்லாத மீம்ஸ்கள்.. நினைத்து பார்க்க முடியுமா!
Published on

திரைப்படங்களில் நடிப்பது குறைந்தாலும், சோஷியல் மீடியாக்களின் மீம்ஸ்களில் நாள்தோறும் மன்னாதி மன்னனாக நடிகர் வடிவேலு வலம் வருகிறார்.

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தற்போது உள்ள தலைமுறையினரின் அன்றாட நகைச்சுவைகளுள் ஒன்றாக சோஷியல் மீடியா மீம்ஸ் மாறிவிட்டது. இந்த மீம்ஸ்கள் பிரதமர், அதிபர் உட்பட அடித்தட்டு மக்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதன்மூலம் யாரையும், எப்படிப் பட்ட திட்டங்களையும் எளிதில் கலாய்த்து(கிண்டல்) விட முடியும்.

இளைஞர்களின் அன்றாட பொழுது போக்குகளில் முக்கிய பங்கை பிடித்துள்ள இந்த மீம்ஸ்களில், தமிழ் மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுவது யார் என்றால் அது ‘வைகைப் புயல்’ வடிவேலு தான். வடிவேலு இல்லாத மீம்ஸ்களை காணமல் ஒரு நாள் கூட உங்களால் சோஷியல் மீடியாவை கடந்து செல்ல முடியாது. ஏனெனில் 3ல் ஒரு மீம்ஸில் அவர் இடம்பிடித்து விடுவார். அந்த அளவுக்கு மீம்ஸ் கிரியேட்டர்களின் ராஜாவாக வடிவேலு உள்ளார்.

90-களில் தமிழ்த் திரையுலகிற்குள் வந்த வடிவேலு ஆரம்ப கட்டத்தில் சிறு வேடங்களில் நடித்தார். ஆனால் அந்த சிறு வேடங்களுமே மக்களை பெரிதாக கவர்ந்துவிட்டது என்று கூறலாம். கஸ்தூரி ராஜா இயக்கத்தில், ராஜ்கிரன் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடலில் இளையராஜாவின் இசைக்கு ஆட்டம் போட்ட வடிவேலுவை அனைவரும் கவனிக்கத்தொடங்கினர். ஏனென்றால் அவரின் ஆட்டம் அப்படி. அதைத்தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘சின்னக் கவுண்டர்’ படத்தில் ‘சுட்டி சுட்டி’ பாடலிலும் வடிவேலு குட்டி ஆட்டத்தை போட்டார். 

நக்கல் மன்னல் கவுண்டமணி மற்றும் செந்தில் என்ற இரு நகைச்சுவை மன்னர்கள் கொடி கட்டி பறந்த காலத்தில், ஒரு குச்சி போல திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு, சில படங்களில் கவுண்டமணியிடம் அடி மற்றும் மிதியும் வாங்கி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். அவரது இந்த திரைத்துறை பயணத்தில் ஒரு திருப்பம் என்று கூற வேண்டுமென்றால் அது கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் என்ற இரு ஜாம்பவான்களின் நடிப்புக்கிடையே, தனது நடிப்பையும் மக்களிடம் வடிவேலு கொண்டு சேர்த்த ‘தேவர் மகன்’ திரைப்படம் தான். அந்த படத்தில் ‘இசக்கி’யாக திரிந்த அவர், பட்டிதொட்டி வரையில் பரவத் தொடங்கினார். சீப்பு வைத்து சீவ முடியாத கீரித்தலையுடன் அவர் நடித்த ‘சிங்காரவேலன்’ திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரு துணைக்காமெடியான நடித்தாலும், அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது. இவ்வாறு இரண்டு படங்களில் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்ததால் வடிவேலு மேலும் பிரபலம் அடைய தொடங்கினார்.

கோயில்களை படத்தில் கவுண்மணி, செந்திலுடன் சேர்ந்து இளநிக்கடைக் காமெடியில் கலக்கிய வடிவேலு, மீண்டும் ராஜ்கிரண் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ‘எட்டணா இருந்தா’ என்ற பாடலுக்கு ‘மைக்கெல் ஜாக்சன்’ தோற்றத்தில் போட்ட ஆட்டம் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்தது. அதே படத்தில் அவர் செய்த காமெடியும், திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அதில் வடிவேலு கூறும் ஒரு வசனம் (நாங்கலாம் சத்தமே இல்லாம பல கொலைகள பண்ணியிருக்கோம்ன்றது வேற விஷயம்) இன்றளவும் மீம்ஸ்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் கிராமத்து கதைகளில் நடித்து வந்த வடிவேலுவின் காமெடி, மலேசியா, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே அவரை கொண்டு போய் சேர்த்தது. தண்ணிப்பாக்கெட்டை குடித்துவிட்டு, சாராயம் குடித்தது போல் நடித்தது. டீக்கடையில் சிலுக்கு சட்டை அணிந்துவிட்டு சென்று வம்பு வளர்ப்பது. பஸ் ஸ்டாண்டில் நின்று பஸ் வருமா என்று கேட்டது. பிரபுவுடன் சேர்ந்து மோட்டார் ரிப்பேர் செய்து ஷாக் அடித்து கருகியது. சவரம் செய்பவர் போல நடித்து செய்த சேட்டைகள். பெட்டிக்கடையில் சென்று பீடி கேட்கும் போது ‘நம்ப யாரும் வம்பு தும்புக்கும் போறது இல்லனு’ கூறியது. குடித்து பாயில் படுக்க முயன்று செய்யும் ரகளை. செத்து செத்து விளையாடலாம் என்று பயந்தது. ‘குருநாதா இதுக்குமேல தாங்க முடியாது குருநாதா’ என்று கொந்தளித்தது.

முரளிக்கு பெண் பார்க்க சென்று ஒரு ஊரே துரத்தும் போது, ‘தம்பி இப்ப ஒரு குரூப் போனான்களே போய்டாய்ங்களா பாரு’ என்று கேட்டது. குடிக்கவே கூடாது என முடிவெடுத்தபோது எல்லோரும் குடிய ஞாபகப்படுத்துறாங்கனு, டாக்டர் கிட்ட போனா அங்க டாக்டரே ‘எல்லாம் உன் மனப் பிராந்தி அமாவாச’னு சொல்ல கடுப்பாகியது. சான புடிப்பவர் போல வந்து மலைய சான புடிக்க முடியாமல் ஓடியது. அரசியல் வாதியாக வந்து டெல்லிக்கு பக்கத்துல தமிழ்நாட்ட தூக்கிட்டு போய் வைக்க சொன்னது. பஞ்சாயத்துல போய் ‘என்ன வேணும் என்ன வேணும்னு’ கேட்டு நாட்டமைக்கு பைத்தியம் புடிக்க செய்தது. இவ்வாறு வடிவேலுவின் புகழ் பெற்ற காமெடிகளை பட்டியல் போட்டால் அது மேகத்திற்கு ஏணி போட்டது போல சென்று கொண்டே தான் இருக்கும். இந்த காமெடிக்கள் அனைத்தும் இன்று சோஷியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருப்பதை நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

இப்படி கிராமத்து இளைஞனாக வந்த வடிவேலு, துபாய் பில்டிங்க் காண்ட்ராக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபனுடன் சேர்ந்து செய்த காமெடிகள் நினைத்தாலே சிரிப்பை வரவலைக்கும். இதைதொடர்ந்து பல படங்களில் வடிவேலும் பார்த்திபனும் காமெடி கலாட்டாக்கள் பல படைத்துள்ளனர். இதற்கிடையே சுனா பானா என்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதில் காமெடி மன்னனாக மாறிய வடிவேலு, வின்னர் படத்தின் கைப்புள்ள, நகரம் படத்தின் நாய் சேகர், படித்துரை பாண்டி, வண்டு முருகன், அசால்ட் ஆறுமுகம், 23ஆம் புலிகேசி என நகைச்சுவை மன்னாதி மன்னனாக மாறிவிட்டார். 

நகைச்சுவை இவ்வாறு கொடிகட்டி பறந்த வடிவேலுவின் திரைப்பயணத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் தேர்தல். அந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்துக்கு எதிராக, திமுகவுடன் சேர்ந்து தீவிர பிராச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி என்ற இடத்தைக் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அது திமுகவுக்கு மட்டும் பெரும் தோல்வி அல்ல, வடிவேலுவின் திரையுலக சாம்ராஜ்ஜியத்திற்கும் பெரும் தோல்வி ஆகும். அதற்குப்பின் அதிமுக ஆளும் கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாகவும் அதிகாரத்தை கைப்பற்ற, திரைப்படங்களில் வடிவேலுவை காண முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தானம் நகைச்சுவை நாயகனாக வளர்ந்து இன்றைய தலைமுறையினரின் காமெடியில் முக்கிய இடத்தை பிடித்தார். நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு வடிவேலுவை மக்கள் தெனாலிராமனாக மக்கள் பார்த்தனர்.

அந்தப்படம் எதிர்பார்த்த அளவில் செல்லவில்லை. அதே நிலைதான் அவர் நடித்த ‘எலி’ படத்திற்கும். சமீபத்தில் விஜய்யின் மெர்சல் படத்திலும், அதற்குமுன் ஒரு சில படங்களிலும் வடிவேலு தோன்றினார். இருப்பினும் சரிந்த சாம்ராஜ்ஜியத்தை வடிவேலு பிடிக்கவில்லை.

என்ன இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள வடிவேலுவின் காமெடிக்களும், வசனங்களும், கதாபாத்திரங்களும் தான் இன்று தமிழ் மீம்ஸ்களை ஆளுகின்றன. எந்த தலைவரின் பேச்சையும், எந்த அரசு திட்டத்தையும், எந்த செய்தி அறிவிப்பையும், காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற தினங்களையும், வேலைக்கு செல்லாத இளைஞர் நிலை உள்ளிட்ட அனைத்தையும் வடிவேலுவின் ஒரு வசனுத்துடன் கூடிய போட்டோ நகைச்சுவையான ஒரு மீம்ஸ் ஆக மாற்றிவிடுகிறது. மீம்ஸ் கிரியேட்டகர்கள் 90% சதவிகிதம் வடிவேலுவை நம்பித்தான் இருக்கிறார்கள் என்று கூறலாம்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com