பக்திகளில் சிறந்த வழி என்றால் அது “உழவாரப்பணி” தான்!.. இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியுமா?
உழவாரப்பணி
உழவாரப்பணி இப்படி ஒரு வார்த்தையை கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இத்தகைய வார்த்தை ஆலயத்தை தூய்மைப்படுத்தப்படுவதற்காக செய்யப்படும் பணியினை குறிக்கும் வார்த்தை ஆகும்.
அதாவது நம் வீட்டில் ஒட்டடை அடிப்பது, தோட்டம் சுத்தம் செய்வது, அறையை ஒழுங்குபடுத்துவது இப்படி பல வேலைகளைச் செய்து வீட்டை தூய்மையாக வைத்திருப்போம் அல்லவா? அதேபோல் ஆலயத்தில் செய்யப்படும் இத்தகைய வேலைகளைத் தான் உழவாரப்பணி என்கிறோம்.
பக்திகளில் பலவிதம் உள்ளது. ஒவ்வொருவரின் பக்தியானது மற்றொரு பக்தியை விட வேறுபட்டிருக்கும். ஒருவர் தினமும் ஆலயத்திற்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்பார். வேறு சிலர் பணிச்சுமையால் ஆலயத்திற்கு வர இயலாத நிலையில் அன்னதானம், ஏழைகளுக்கு உதவுதல் என்றும் சிலர், பக்தி பாடல்கள் பாடுவதிலும், பல இடங்களுக்கு சென்று ஆலயதரிசனம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இப்படி பலவாராக பக்திகள் வெளிப்படும்.
அத்தகைய பக்தியில் ஒன்றுதான் இந்த உழவாரப்பணி. இத்தகைய உழவாரப்பணியை முதலில் அறிமுகப்படுத்தியது திருநாவுக்கரசர் தான். உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இன்றும் பழைய ஆலயங்களில் உழவாரப்பணிக்கென்று நாட்கள் குறிக்கப்படுகிறது. அந்நாட்களில் பக்தர்கள் சிலர் எந்த ஒரு பிரதிபலன்களை எதிர்பாராமல், தாங்களாக முன்வந்து ஆலயங்களை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனாலேயே இன்று வரை பழமைவாய்ந்த ஆலயங்கள் எல்லாம் உயிர்பித்து இருக்கிறது.
பழங்காலத்தில் உழவாரப்பணி செய்பவர்கள் ஆலயங்களில் நைவேத்தியமாக படைக்கப்படும் பழம், பிரசாதம் போன்றவற்றை உட்கொண்டு ஆலயத்தை சுத்தப்படுத்தி வந்தனர். சில அரசர்கள் உழவாரப்பணி செய்து வந்த ஏழை எளியவர்களுக்கு மானியமாக நிலங்களை கொடுத்தும் இருக்கிறார்கள். ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அதற்கு குடமுழுக்கு செய்வதை விட உழவார பணியானது மேன்மையான புண்ணியத்தை தரும் என்பதற்கு சான்று தான் திருநாவுகரசர்.
உழவாரப்பணிகளில் ஒருசில..
பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை குப்பை கூடங்களில் போடுவது, திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது. இப்படி பல வேலைகளை செய்வதால் இறைவனின் அருளுக்கு பாத்திரமாவதுடன், உடற்பயிற்சி செய்வது போலும் ஆகும். ஆகவே முடிந்தவரை பழமைவாய்ந்த ஆலயங்களை கண்டு அங்கு உழவாரபணி செய்து ஆலயத்தை காப்போம்