மண்ணை பொன்னாக்கும் வித்தையில் ‘விவசாயி’ ஒரு தெய்வீக மய்யம் என விவசாயிகளை போற்றுவதுண்டு. தனக்காக மட்டுமல்லாமல் ஊருக்காகவும், உலகுக்காகவும் ஓடி ஓடி உழைக்கும் விவசாயிகளுக்கு இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு உதவி வருகிறது ‘உழவன்’ செயலி.
உழவர் திருநாள் கொண்டாட்டம் தொடங்கி உள்ள இந்த இனிய பொழுதில் இந்த செயலி குறித்து அறிந்துக் கொள்வோம். அதுவும் இந்த செயலியை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
‘உழவன்’ செயலி!
இந்த மொபைல் போன் செயலியின் மூலம் விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அதற்கான மானியம் குறித்த தகவல்களை பெறலாம். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளின் திட்டம் குறித்த தகவல்கள் இதில் கிடைக்கும். சுமார் 10 லட்சம் பேர் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலியின் பயன்பாடு!
>உழவன் செயலியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயனர்கள் பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
>இந்த செயலியை போனில் டவுன்லோட் செய்ததும் பெயர், மொபைல் எண், மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொண்டு பயனர்கள் பயன்படுத்த தொடங்கலாம். தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.
>மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க, பயிர் தொடர்பான சந்தை நிலவரம், வானிலை நிலவரம், உழவர் - வேளாண் அலுவலர் தொடர்பு திட்டம், பண்ணை வழிகாட்டி, இயற்கை முறை விவசாயிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனையாளர்கள், இயற்கை விவசாயத்தை அங்கீகரித்து சான்றளிக்கும் முகமைகள், FPO பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துகள், பூச்சி/நோய்/கண்காணிப்பு/பரிந்துரை, ஆத்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ச்சித் துறை என 19 வகையான பயன்பாடுகளை இந்த செயலின் மூலம் பெறலாம்.
>உதாரணமாக உரங்கள் இருப்பு நிலவர டேப்(Tab) -பில் மாவட்டம் மற்றும் வட்டம் குறித்த விவரத்தை கொடுத்தால் அந்த பகுதியில் உள்ள உர விற்பனை நிலையங்களில் கிடைக்கும் உரங்களின் விபரம், விலை மற்றும் தொடர்பு எண்களை பெறலாம்.
>அதே போல விதை இருப்பு நிலை டேப் மூலமாக அரசு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் தனியார் வசம் உள்ள விதை நிலவரம் மற்றும் அதன் விலையை அறிந்து கொள்ள முடியும்.
>பண்ணை வழிகாட்டி மூலம் வேளாண் நிபுணர்களின் ஆலோசனையை விவசாயிகள் நேரடியாக இந்த செயலியின் மூலம் பெறலாம்.
>இந்த செயலியின் மூலம் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்வதற்கான இ-வாடகை ஆன்லைன் செயலிக்கான இணைப்பையும் பெறலாம்.
>கடந்த 3 -ஆம் தேதி இந்த அப்ளிகேஷன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அத்தியாயம் > 'ஆப்' இன்றி அமையா உலகு 17: ‘Tele-Law’ சாமானியர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயலி!