நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சிகளின் கணக்குகள் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி?

நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சிகளின் கணக்குகள் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி?
நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சிகளின் கணக்குகள் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி?
Published on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இந்த தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் கணக்கு என்ன, வெற்றி வாய்ப்பு எப்படி என்று பார்ப்போம்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள் மற்றும் 529 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளின் மொத்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் திருவிழாவாக இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் இருக்கும். கட்சிகளின் செயல்வீரர்கள் பலருக்கான பதவிகள் கிடைக்கும் என்பதால் அனைத்து கட்சிகளுமே இந்த தேர்தலை மிக முக்கியமானதாக நினைக்கும்.

கூடுதல் தெம்புடன் திமுக:

சட்டமன்ற தேர்தல் மற்றும் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்த திமுக கூட்டணி, வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் நிலையிலேயே உள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழகம் முழுவதுமே பரவலாக வாக்குவங்கியும், அறிமுகமும் உள்ளதால் இந்த கூட்டணி வலுவான நிலையிலேயே உள்ளது. கூடுதலாக தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இழுக்க திமுக தரப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது, ஆனால் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, இறுதி நேரத்தில் சூழல் மாறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சட்டமன்ற தேர்தல் வெற்றி, ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி, ஆட்சியில் இருக்கும் கட்சி என்ற அடிப்படையில் தங்களே முழுமையாக வெற்றிபெறுவோம் என நம்புகிறது திமுக தரப்பு.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு உரிய இடங்கள் கொடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக கட்சிகள் சில இடங்களில் தனித்தும் போட்டியிட்டது, அப்போதெல்லாம்  அவர்களை நகர்ப்புற தேர்தலில் வாய்ப்பளிப்பதாகவே கூறி சமாதானம் செய்தது திமுக. எனவே இந்த முறையும் தொகுதி ஒதுக்கீட்டில் கடும் இழுபறி நிலவ வாய்ப்புள்ளது.

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக:

அதிமுகவை பொறுத்தமட்டில் தற்போது பாஜக, தமாகா கட்சிகள் மட்டுமே அந்த கூட்டணியில் உள்ளது. இதில் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக விருப்பமனுக்களை பெற்று வருகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தமாகாவும் அதிருப்தியில் உள்ளது. பாஜகவும் தங்களுக்கு நகர்ப்புறங்களில் நல்ல செல்வாக்கு உள்ளதாகவும், அதனால் கூடுதல் இடங்கள் ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டு வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையிலான புகைச்சல் நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் புகைந்து வரும் சூழலில், சசிகலாவும் ஓயாமல் ஏதேனும் புதிய அஸ்திரங்களை வீசியபடியே இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, எப்படியேனும் இந்தமுறை வென்று காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தொடர் தோல்விகள், இரட்டை தலைமை, உட்கட்சி பூசல், சசிகலாவின் ஆவர்த்தனம் என அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். அவர்களுக்குள் மீண்டும் உத்வேகத்தை கொடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் மனநிலையாக உள்ளது.

நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமைகள்:

சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் மூன்றாவது கட்சியாக இருந்த நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது, மக்கள் நீதி மய்யமும் தனித்துதான் போட்டி என அறிவித்துவிட்டது. இந்த இரு கட்சிகளுமே நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்  ஒரு இடத்தில் கூட வெல்லாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. எனவே இந்த முறை கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிறது. பாமகவும் ஊரக உள்ளாட்சி போலவே நகர்ப்புற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது, இந்த கட்சி வடமாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் போலவே கணிசமான இடங்களை வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

அமமுக கட்சி மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வென்றது இக்கட்சி, எனவே இந்த முறையும் கவனிக்கத்தக்க இடங்களை வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் தினகரன். தேமுதிகவும் இந்த முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்து பணியாற்றி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com