தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் தற்போது விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்களின் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்து விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அப்படி வெளியாக இருக்கும் படங்கள் குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.
"83", "டூஃபான்", "ஜெர்சி"... இவை மூன்றும் அடுத்து பாலிவுட் திரையுலகில் வெளியாக இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள். வழக்கமாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறும். இந்த வரவேற்பின் காரணமாக, பாலிவுட்டில் அடிக்கடி விளையாட்டை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகும். மேலே சொன்ன திரைப்படங்கள் அனைத்தும், திரைக்கு வர தயாராக இருப்பவை. இதைத் தாண்டி, மேரிகோம் பயோபிக், மித்தாலி ராஜ் பயோபிக், ரஷ்மி ராக்கெட், மைதான், சாய்னா, டூல்சிடாஸ் ஜூனியர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஆரம்பகட்ட பணிகளில் உள்ளன.
பாலிவுட் திரையுலகுக்கு இணையாக தற்போது தென்னிந்திய சினிமாவிலும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. குறிப்பாக, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்களில் தற்போது அதிக முதலீடு செய்து வருகின்றனர். விளையாட்டுத் திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன என்பதால் தற்போது தயாராகி வரும் தென்னிந்திய விளையாட்டுத் திரைப்படங்கள் 'பான்-இந்தியா' பின்னணியில் வெளியாக இருக்கின்றன. ஓடிடியின் வருகை இதனை சாத்தியப்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து வரும் விளையாட்டுத் திரைப்படங்கள் பெரும்பாலும், கிரிக்கெட் மற்றும் கால்பந்து என்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இல்லாமல் மற்ற விளையாட்டுகளை மையப்படுத்தி வெளியாக இருக்கின்றன. அப்படி அடுத்த சில மாதங்களில் தென்னிந்திய திரையுலகில் வெளியாகவிருக்கும் விளையாட்டுத் திரைப்படங்கள் இவை...
சார்பட்டா பரம்பரை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' நாளை (ஜூலை 22) அமேசான் பிரைமில் வெளியாகிறது. ரஞ்சித்தின் வழக்கமான டச் உடன், இந்தப் படம் சென்னையின் பாரம்பர்ய, அதேநேரம் மறக்கடிக்கப்பட்ட அடையாளங்களில் ஒன்றான 'பாக்ஸிங்' விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது. 'காலா' வெற்றிக்குப் பிறகு, பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாய் அமைந்தது சில தினங்கள் முன்பு வெளியான ட்ரெய்லர். தமிழக ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. நேரடியாக ஓடிடியில் வெளியாவதால் இந்தியா முழுவதும் படம் ரீச் ஆக இருக்கிறது.
கானி (Ghani): தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வரும் வருண் தேஜ் நடிக்கும் திரைப்படம் தான் 'கானி'. இதுவும் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இது இருக்கிறது. காரணம், இதில் நடிக்க இருக்கும் நடிகர்கள்தான். மெயின் ரோலில் வருண் தேஜ் நடித்து வரும் நிலையில், நடிகை சாயி மஞ்ச்ரேகர், உபேந்திரா, சுனில் ஷெட்டி, ஜெகபதி பாபு, மற்றும் நவீன் சந்திரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், இந்தப் படத்துக்காக 2008 கோடைகால ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முன்னாள் இங்கிலாந்து குத்துச்சண்டை வீரர் டோனி ஜெஃப்ரிஸின் கீழ் வருண் பயிற்சி பெற்றார்.
லக்ஷ்யா (Lakshya): வில் வித்தை விளையாட்டை மையமாக கொண்டு நடிகர் நாகா ஷவுரியா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் இது. சந்தோஷ் ஜகர்லபுடி என்பவர் இயக்கியிருக்கிறார். இதிலும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாரத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
மடி (Muddy): மட் ரேஸ் என்ற அட்வெஞ்சர் ரேஸ் விளையாட்டை வெளியாக இருக்கும் கன்னட படம் இது. இந்தியாவில் முதல்முறையாக ஆஃப்-ரோட் மட் ரேஸ் பற்றி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இதுவாகும். கன்னட இளம் நடிகர்கள் யுவன் மற்றும் ரித்தான் கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னடம் மட்டுமில்லாமல் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நேரடியாக வெளியிடப்படுகின்றன.
லைகர் (Liger): தெலுங்கின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் பூரி ஜகந்நாத் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படமும் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வரும் இதனை கரண் ஜோஹர் மற்றும் பூரி ஜகந்நாத் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
சீட்டிமார் (Seetimaarr): கபடி விளையாட்டை மையப்படுத்தி, தெலுங்கின் முன்னணி நடிகர் கோபிசந்த் மற்றும் தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம்தான் 'சீட்டிமார்'. சம்பத் நந்தி இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
குட் லக் சகி (Good Luck Sakhi): தமிழ் சினிமாவை போலவே, தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம்தான் 'குட் லக் சகி'. துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. 'ஈரம்' ஆதி மற்றும் ஜெகபதி பாபு முதலானோர் நடிக்க, கீர்த்தி சுரேஷ் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகேஷ் குக்குனூர் என்ற இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். தமிழ், மலையாளம் என மற்ற மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
ஃபிரண்ட்ஷிப் (Friendship): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக தமிழில் அறிமுகமாகும் படம் தான் 'ஃபிரண்ட்ஷிப்'. கிரிக்கெட் மற்றும் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய சினிமாவில் ஒட்டுமொத்தமாக கதை ரீதியாக தற்போது நல்ல படங்களை கொடுப்பதில் முன்னணியில் இருப்பது மற்ற மொழிகளை காட்டிலும் தென்னிந்திய மொழி சினிமா துறையினர்தான். ரசிகர்களின் எண்ணிக்கையைத் தாண்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு சுலபமான வழி இதுபோன்ற விளையாட்டுத் திரைப்படங்கள். என்றாலும், விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்களிலும், பாலிவுட் போல் பயோபிக் மற்றும் கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் போல் இல்லாமல் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் கவனிக்கப்படாத விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகின்றன.
தற்போதுள்ள ஓடிடி சூழ்நிலையில் உலகளாவிய பார்வையாளர்கள் எளிதாக எல்லா திரைப்படங்களை பார்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தற்போது தயாராகி வரும் தென்னிந்திய விளையாட்டுத் திரைப்படங்களுக்கு இயல்பாகவே மொழிகளை கடந்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது வரவேற்க கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- மலையரசு