ஐக்கிய அரபு நாட்டின் சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கு இந்தியாவை சேர்ந்த 81 வயது பெண் மருத்துவர் காரணமாக இருந்துள்ளார்.
ஐக்கிய அரபு நாட்டில் சுலேகா மருத்துவமனையின் நிறுவனர் சுலேகா தாவூத். இவர் இந்தியாவின் நாக்பூரை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1966ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாட்டிற்கு பணியாற்ற சென்றார். அதன்பிறகு ஐக்கிய அரபு நாட்டின் சுகாதாரத் துறையை புரட்டி போட்டுள்ளார். ஆகவேதான் அவரை ஐக்கிய நாட்டினர் ‘அம்மா சுலேகா’ எனப் பாசத்துடன் அழைத்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் சுலேகா. இவரது தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி. வறுமையில் வாடிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சுலேகா, தனது ஆர்வத்தால் பள்ளிப்படிப்பை சிறப்பாக படித்து முடித்தார். அத்துடன் சிறுவயதிலிருந்தே அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. எனினும் அதற்கான போதிய பண வசதி இல்லாத போதும் போராடி மருத்துவ படிப்பை முடித்தார். அதன்பிறகு மகப்பேறு துறையில் நிபுணத்துவம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இவர் இப்ராஹிம் தாவூத் என்னும் மருத்துவரை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் ஐக்கிய அரபு நாட்டின் ராஸ் அல் கைமா பகுதிக்கு 1966ஆம் ஆண்டு குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இவர் மருத்துவராக பணிபுரிந்துள்ளார். அப்போது ஐக்கிய அரபு நாட்டில் வேலை பார்த்த முதல் பெண் மருத்துவர் இவர்தான். ஐக்கிய அரபு நாட்டிலுள்ள உள்ளூர் மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி, மருத்துவ சாதனங்கள், மின்சார வசதி ஆகியவை குறைந்து காணப்பட்டது.
எனினும் தனது நேர்த்தியான சிகிச்சையால் பலரையும் கவர்ந்தார் சுலேகா. இவரின் சிகிச்சை முறைகளைக் கண்டு மஸ்கட் போன்ற தொலைத் தூரத்திலிருந்து மக்கள் இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அத்துடன் அந்தக் காலத்தில் ஐக்கிய அரபு நாட்டு மக்களின் குழந்தைப் பேறு வீட்டிலேயே நடைபெற்று வந்தது.
இதனால் பலர் ஆபத்தான நிலையில் இருந்தனர். இவர்களை தனது நேர்த்தியான சிகிச்சை மூலம் ஆபத்திலிருந்து காப்பாற்றினார் சுலேகா. இவர் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் பிரசவம் பார்த்துள்ளது ஐக்கிய அரபு நாட்டில் பெரிய சாதனையாக உள்ளது.
1992 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாட்டின் முதல் தனியார் மருத்துவமனையை தொடங்கியவர் மருத்துவர் சுலேகாதான். அதன்பிறகு இந்த மருத்துவமனையின் மூலம் உலக தரம் வாய்ந்த சிகிச்சையை ஐக்கிய அரபு மக்களுக்கு வழங்கி வருகிறார். தற்போது இவரது மருத்துவமனையில் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இவரது இந்த மகாத்தான சாதனைக்கு இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கும் உயரிய விருதான ‘பிரவேசி பாரத் சம்மான்’ விருதை கடந்த ஜனவரி மாதம் வழங்கியுள்ளது. அத்துடன் இவரது சேவையை பாராட்டி ஐக்கிய அரபு நாட்டின் மன்னர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் கடிதத்தை வழங்கியுள்ளனர்.