கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்படும் தூக்கப் பிரச்னையும், அதற்கான தீர்வுகளும் குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிற்குள்ளேயே இருப்பது உடல் மற்றும் மனநல பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, வீட்டிற்குள்ளேயே இருப்பது தினசரி வாழ்க்கைமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது உணவு முறை, தூக்கம் மற்றும் உடல் உழைப்பு என அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
குறிப்பாக, வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கும், உடலில் பிற பிரச்னை இருப்பவர்களுக்கும் தூக்கமின்மை மற்றும் தூக்கம் பற்றாக்குறை மிகப்பெரிய தொல்லையாக இருக்கிறது. போதிய தூக்கமின்மை வேலையில் கவனச்சிதறலை ஏற்படுத்துவதோடு பல வித உடல் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. கொரோனா காலகட்டத்தில் என்னென்ன மாதிரியான தூக்கப் பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள் என்பது குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
சர்க்காடியன் ரிதம் தொந்தரவு (Circadian rhythm disturbances): ஒரு மனிதனுக்கு சாதாரணமாக 8 மணிநேர தூக்கம் அவசியம். இந்த தூக்க நேரமானது பெரும்பாலானவர்களுக்கு வெளிச்சம், அதாவது சூரியன் உதிக்கும் நேரம் மற்றும் வெளிப்புற வெப்பநிலையைப் பொறுத்து அமையும். கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்பகாலக் கட்டத்தில் தூக்க நேரமானது வேலை அல்லது படிப்புக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கியது. ஆனால் தற்போது இதுவே தூக்கமின்மை பிரச்னைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
காரணம், வீட்டிலிருந்தே செய்யும் வேலை மற்றும் படிப்பில் முறையான திட்டமிடுதல் இருப்பதில்லை. குறிப்பாக, அதிகப்படியான டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதால், அது உயிரியல் கடிகாரத்தின் அலைகளை மாற்றியமைக்கிறது. இதனால் மூளைக்கு பகலும் இரவும் குழப்பமாகி தூக்கமின்மை பிரச்னைக்குள் நம்மை ஆழ்த்துகிறது.
இந்தியாவில் 1511 பேரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பெரும்பாலான இளைஞர்களும், பெண்களும் Social Jetlag பிரச்னைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது வேலைநாட்களிலும், ஓய்வு நாட்களிலும் எடுக்கும் ஓய்வு மற்றும் தூக்கத்தில் குழப்பம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக வீட்டிலிருந்து வேலை செய்யும் இளம்தாய்மார்கள் தங்களுடைய வேலை, வீட்டு வேலையுடன், குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் வேலைப்பளு தூக்கத்தை கடுமையாக பாதித்துவருகிறது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலநேரங்களில் அதிக நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் இருப்பதில்லை என்பதும், உடலுக்கு ஓய்வு இல்லை என்பது போன்ற உணர்வு மேலோங்கி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்சோம்னியா: இன்சோன்மியா என்ற தூக்கமின்மை பிரச்னைக்கு மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தமே முக்கிய காரணம். சமூகத்திலிருந்து விலகியிருத்தல், பொருளாதாரப் பிரச்னை, வேலை உறுதியின்மை, கொரோனா பயம், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று, கொரோனா பாதித்தவர்கள் சந்திக்கும் சிரமங்கள், ஊடங்களில் வெளியாகும் கொரோனா குறித்த செய்திகள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் உருவாக்குகின்றன. இந்த பயமே தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. தற்போது மருத்துவர்களை அணுகுபவர்களில் பெரும்பாலானோர் இன்சோம்னியா பிரச்னைக்கு ஆளாகி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தூக்கமின்மை பிரச்னையைவிட தற்போது இந்த பிரச்னை இருமடங்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வீட்டிற்குள்ளேயே இருக்கும் பெரியவர்களின் நடத்தைகளில் கோபம், எரிச்சல் போன்ற மாற்றங்கள் தெரிந்தால் அது இன்சோம்னியாவின் விளைவுகளாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
ஸ்லீப் அப்னீயா - Sleep apnea: இது பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைதான். குறிப்பாக கிட்டத்தட்ட 10% வளர் இளம்பருவத்தினர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உடல் உழைப்பின்மை, உடல் எடை அதிகரித்தல், மது அருந்துதல் போன்றவை ஸ்லீப் அப்னீயா பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் உடல் இயக்கம் குறைகிறது. அதேசமயம் நொறுக்குத்தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் அது உடல் எடை அதிகரிப்பதை எளிதாக்குகிறது. இது தூக்கமின்மையை உருவாக்குகிறது.
சத்தமாக குறட்டை விடுபவர்கள், குறிப்பாக அதிக ரத்த அழுத்தம் அல்லது இதய பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஸ்லீப் அப்னீயா பிரச்னையால் பாதிக்கப்படுவர்.
இந்த தூக்கமின்மை பிரச்னையை போக்க சில வழிகள்:
மதியத்திற்குமேல் காபி வேண்டாம்: பகல்நேரத்தில் காபி அருந்துவது இரவு தூக்கத்தைக் கெடுக்கும் என்று சொன்னால் அதை பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் மதியம் 2 மணிக்குமேல் காபி குடிப்பதன் தாக்கம் நாம் நினைப்பதற்கும் அதிகமாக உடலில் இருக்கும் என்பதுதான் உண்மை.
டிஜிட்டல் சாதனங்களுக்கு நோ சொல்லுங்கள்: புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு சுற்றிய நாட்களை நாம் கடந்துவந்து விட்டோம். இப்போது எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் சாதனங்கள்தான். எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்போன் விளையாடுகிறது. தற்போது ஆன்லைன் வகுப்புகளும் ஸ்மார்ட்போன் என்பதால் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது தூக்க நேரத்தை பாதிக்கும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. எனவே தூங்கப்போவதற்கு குறைந்தது ஒரு மணிநேரம் முன்பாவது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
பகல் தூக்கத்தை தவிருங்கள்: பகல்நேரத்தில் தூங்குவது வேலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும். ஆனால் அது இரவு தூக்கத்தை பாதிக்கும். எனவே பகல் தூக்கத்தை முடிந்தவரை குறைக்கவேண்டும் அல்லது பகலில் தூங்குவதை தவிர்த்துவிடுவதே சிறந்தது.
அரோமாதெரபி: வாசனை திரவியங்கள் மற்றும் மூலிகை எண்ணெய்களின் வாசம் இரவில் நன்கு தூங்க வழிவகுக்கும். இந்த அரோமாதெரபியானது நல்ல தூக்கத்தை தருவதோடு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தையும் குறைக்கும்.
கெமோமில் டீ: கெமோமில் டீ என்பது ஒருவித மூலிகை டீ. தூங்குவதற்கு முன்பு இந்த டீயை எடுத்துக்கொண்டால் நல்ல தூக்கம் வரும். இதில் அபிஜெனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் தூக்கத்தை மேம்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.