இடப் பக்கம், வலப் பக்கம் வித்தியாசம் தெரிய கையில் R & L பச்சைக் குத்திக்கொண்ட பெண்ணை பற்றி நாம் கடந்த சில நாள்களாக இணையத்தில் ஆங்காங்கே படித்து வருகிறோம். அது உண்மையா?
ஆம். உண்மைதான். டிக்ஸ்லெக்சியா (Dyslexia) என்னும் கற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கு இடது - வலது வித்தியாசம் தெரியாது. அது மட்டுமில்லாமல் இந்த Dyslexia-வில் நிறைய வகைகள் உண்டு. ஒரு வார்த்தையில் உள்ள சொற்களை தனித்தனியே பிரித்துப் படிக்க சிரமப்படுதல், பலகையில் எழுதிய வார்த்தையை படிக்க சிரமப்படுதல் உள்ளிட்டவை அடக்கம். இந்தியாவில் சுமார் 3 கோடியே 50 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரபு வழியாகவோ அல்லது கரு உருவாக்கத்தின்பொழுதோ இடது பக்க மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் Dyslexia பாதிப்பு ஏற்படும். இதை நிச்சயம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் சரிசெய்ய இயலும். அவ்வாறான குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்தல், அவர்களை ஊக்குவித்து தன்னம்பிக்கையை மேம்படுத்துதல், தட்டச்சு வகுப்புகளுக்கு அனுப்பி சொற்களை ஒவ்வொன்றாக படிக்கவைத்தல் என கூட்டு முயற்சிகள் மூலம் இதனை நிவர்த்தி செய்ய இயலும்.
Dyslexia குறைபாடு கொண்டவர்கள் அறிவுத்திறன் குறைந்து இருப்பார்கள் என அர்த்தமில்லை. அவர்களுக்கு சிறிய வார்த்தைகள், எண்கள், திசை ஆகியவற்றை இனம் காணவே சிக்கல் ஏற்படும். அவ்வளவுதான்.
உலகப் புகழ்பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரகாம்பெல், டாவின்சி ஆகியோர் சிறு வயதில் இந்த உபாதையால் பாதிக்கப்பட்டு பெரும் உயரத்தை அடைந்தவர்கள்.
- டாக்டர். அரவிந்தராஜ்