மரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை! நகரின் தற்போதைய தேவை என்ன?

மரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை! நகரின் தற்போதைய தேவை என்ன?
மரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை! நகரின் தற்போதைய தேவை என்ன?
Published on

சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல் புதுச்சேரியை மையம் கொண்டு கரையைக் கடந்தது. சென்னைக்கு அருகே வரவில்லை என்றாலும் புயலின் தாக்கம் இங்கே அசைத்துப்பார்த்தது. குறைவான புயலின் தாக்கத்துக்கே சென்னையின் மரங்கள் ஆட்டம் கண்டது.  ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் சென்னை மாநகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கணக்கிட்டனர். இதில் வர்தா புயலுக்கு முன்பாக 3.75 மரங்கள் இருந்ததாகவும், வர்தா புயல் தாக்கத்துக்கு பின் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே உள்ளதாகவும் தனியார் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பில் தெரியப்படுத்தப்பட்டது.

ஜி.பி.எஸ். கணக்கெடுப்பு

இந்தியாவின் அனைத்து முக்கிய மாநகரங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மரங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வை "ட்ரீ பேங்க்' தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து அண்மையில் மேற்கொண்டன. மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநகரிலும் எத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிடவும், குறைவாக உள்ள மாநகரங்களில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது. அதாவது, சென்னை மாநகரில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வசிக்கின்றனர். இத்தனை மக்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தமான காற்று கிடைக்க, 15 லட்சம் மரங்கள் இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே.

குறைந்ததற்கான காரணம் என்ன?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 10 லட்சம் மரங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. அதன் பிறகு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மேம்பாலப் பணி, மெட்ரோ ரயில் பணி, சாலை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாகவும், அண்மையில் தாக்கிய வர்தா புயலின் காரணமாகவும் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே சென்னை மாநகரில் எஞ்சியிருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இருக்கும் மரங்களின் வகைகள்!

சென்னையில் தென்னை, புளிய மரம், மா, வேலி காத்தான், சீமை வேலிகாத்தான், செம்மயிற்கொன்றை (குல்மொஹர்), மழை மரம், வேம்பு, சாம்பல், செப்புநெற்று, இந்தியக் கடற்கரை மரம், கருவேலம், மஸ்து மரம், வளைகுடா மரம், எலுமிச்சை, கொய்யா, அரசு, ஆல், மருத மரம், புங்கை, இலுப்பை, இலவம்.

சென்னைக்கு ஏற்ற மரங்கள் எவை?

வர்தா, நிவய் புயலின் தாக்குதலில் சென்னையில் வளர்க்கப்பட்ட பலவிதமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் பல மரங்கள் சென்னை மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத மரங்களாகும். இந்தக் கடும் புயலிலும் நம்நாட்டு மரங்கள் இன்னும் கம்பீரத்துடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன. நிழல் எனும் தன்னார்வ மரம் வளர்ப்பு நிறுவனம் சென்னை மாநகர் கடலோரப் பகுதி என்பதால் அதற்கேற்ப 16 விதமான மரங்களை பட்டியலிட்டுள்ளது.

அவை: புன்னை, புங்கை, பூவரச மரம், புரசை மரம், நுணா, நாட்டு பாதாம், வேப்ப மரம், காட்டு பூவரசம், வால்சுரா, சமுத்திரப்பழம், வன்னி, குட்டிப்பலா, துரிஞ்சி, வேப்பாலை, வென்னாங்கு அல்லது தடா மற்றும் கல்யாண முருங்கை ஆகியவையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com