அதிக தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? - புரூஸ் லீ இறப்புக்கு இதுதான் காரணமா?

அதிக தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? - புரூஸ் லீ இறப்புக்கு இதுதான் காரணமா?
அதிக தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? - புரூஸ் லீ இறப்புக்கு இதுதான் காரணமா?
Published on

உலகளவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ. இவர் தற்காப்பு கலைக்கு பெயர்பெற்றவர். இவருடைய இளம்வயது மரணம் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது அகால மரணம் இன்றுவரை பெரிய மர்மமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வில் அதிக தண்ணீர் குடித்து சிறுநீரகம் செயலழிந்ததே புரூஸ் லீயின் இறப்புக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்தால் அதனை சுத்திகரித்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். இது ஹைபோநெட்ரீமியா, பெருமூளை வீக்கம் மற்றும் சிலமணி நேரங்களில் மரணத்திற்கு வழிவகுத்துவிடும்.

மாட்ரிட்டில் IIS-Fundacion ஜிமெனெஸ் டயஸ் UAM, நெப்ராலஜி மற்றும் உயர் ரத்த அழுத்த பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி புரூஸ் லீயின் இறப்புக்கான காரணம் குறித்த ஆராய்ச்சியை தொடங்கினர். அந்த ஆராய்ச்சியில் புரூஸ் லீக்கு ஹைபோநெட்ரீமியாவால் பெருமூளை வீக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கண்டறிந்தனர். அதற்கு முக்கிய காரணம் பல்வேறு சாகச முயற்சிகளில் ஈடுபடும் நடிகரின் அதிகப்படியான திரவ உட்கொள்ளல் காரணமாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

என்ன சொல்கிறது புதிய ஆய்வு?

ஹாங்காங்கில், 32 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த புரூஸ் லீயின் இறப்புக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டு சதி, ஹீட் ஸ்ட்ரோக், கோகோயின் பயன்பாடு மற்றும் வலிப்பு வியாதி போன்ற பலவும் காரணமாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஸ்பெயின் சிறுநீரக நிபுணர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியான புதிய ஆய்வறிக்கை, பிரேத பரிசோதனையின் அடிப்படையில் ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறது. ”தற்போதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் பகுப்பாய்வின் அடிப்படையில்,ஹைபோநெட்ரீமியா காரணமாக ஏற்படும் மரணத்திற்கான காரணத்தை பெருமூளை வீக்கம் என்று நாங்கள் முன்மொழிகிறோம். சிறுநீரகத்தால் அதிக தண்ணீரை வெளியேற்ற முடியாததே புரூஸ் லீயின் மரணத்திற்கு காரணம் என்றும் சொல்லலாம்” என்று கூறியுள்ளது.

1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்த புரூஸ் லீ, தனது 13 வது வயது முதல் ஹாங்காங்கில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டு, 16வது வயதில் அமெரிக்காவிற்கு வந்தார். குழந்தை நட்சத்திரமான புரூஸ் லீ, 26வது வயதில் அமெரிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றில் தற்காப்பு கலைஞனாக தோன்றினார். இவரது தனித்துவமான கலை யுக்திகள் மூலம் Jeet Kune Do என அழைக்கப்பட்டார். 29வது வயதில் மீண்டும் ஹாங்காங்கிற்கு சென்றுவிட்டார். அங்கு எழுத்தாளர், இயக்குநர், ஹீரோ மற்றும் சண்டைப்பயிற்சி இயக்குநர் என தனது பன்முக திறமைகளை வெளிப்படுத்தினார்.

புரூஸ் லீ இறந்த நாளன்று, போதைப்பொருள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர் நடிகை பெட்டி டிங் பேயின் வீட்டிற்குச் சென்று அங்கு, அடுத்த படத்தின் சில காட்சிகளில் நடித்ததாகக் கூறப்பட்டது. பின்னர் பட தயாரிப்பாளர் ரேமண்ட் சௌ-வுடன் நேரம் செலவிட்டதாகக் கூறப்பட்டது. இரவு 7.30 மணியளவில் தலைவலி மற்றும் தலைசுற்றலை உணர்ந்த லீ, தண்ணீர் குடித்துவிட்டு, டிங் பே கொடுத்த Equagesic மாத்திரையை சாப்பிட்டபிறகு, படுக்கையறைக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். இரவு 9.30 மணியளவில் சுய நினைவை இழந்ததால், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் முதலுதவி சிகிச்சை பலனளிக்காததால், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அவரது இறப்புக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெருமூளை வீக்கம் ஏற்பட்டதால் பொதுவான மூளையின் எடை 1400 கிராம் இல்லாமல் புரூஸ் லீயின் மூளை 1575கிராம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். Equagesic மாத்திரை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட அதிக உணர்திறன் காரணமாக பெருமூளை வீக்கம் ஏற்பட்டதே புரூஸ் லீயின் மரணத்துக்கு காரணம் என அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது.

புரூஸ் லீயை கொன்றது யார்?

லீக்கு ஏற்கனவே ஏற்பட்ட பல ஆபத்து காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 1973ஆம் ஆண்டு, லீ இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பெருமூளை வீக்கத்தால் அவதிப்பட்டதாகவும், அதன்பிறகு தலைவலி, சமநிலையின்மை, நடப்பதில் சிரமம் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு மேத்யூ போலி எழுதிய புரூஸ் லீ, எ லைஃப் புத்தகத்தில் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் அவர் கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் போன்ற திரவ அடிப்படையிலான உணவையும் அதிகம் எடுத்துக்கொண்டதே மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பகலில் அதிக தண்ணீர் உட்கொண்டதே லீயின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக மேத்யூ தனது புத்தகத்தில் திரும்ப திரும்ப குறிப்பிட்டிருந்தார். போதைப்பொருள் எடுத்துக்கொண்டதே பகல் முழுதும் அதிக தண்ணீர் குடித்திருக்கிறார் என்பதை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீர் உட்கொள்ளல் மற்றும் நீர் வெளியேற்றம் இரண்டும் முறையாக நடைபெறாததால் ஹைபோநெட்ரீமியா வருவதற்கான பல்வேறு காரணிகளை லீ கொண்டிருந்தார் என்பதை குறிப்பிட்டே இந்த ஆய்வு கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com