பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று. கம்பீர குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மலேசியா வாசுதேவன் குறித்த நினைவலைகளை தற்போது பார்க்கலாம்
திரைவானில் தனித்துவம் பெற்ற மலேசியா வாசுதேவன் தமது வெண்கல குரலால் 80, 90 களில் ரசிகர்களை வசியப்படுத்தியவர் மலேசியா வாசுதேவன். கேரளாவின் பாலக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன் மலேசியாவில் பிறந்தவர். டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இதன்பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' என்ற பாடல் மலேசியாவின் வெண்கலக்குரலை பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்தது.
தமிழில் 8000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். பிற தென்னிந்திய மொழிகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியிருக்கிறார். 'பன்னீர் புஷ்பங்கள்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'கோடை கால காற்றே, என்ற பாடல் ரசிகர்களின் இதயத்தில் குளிர் பாயச் செய்யும். புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'வான் மேகங்களே' என்ற பாடல் மனம் வருடும்.
'தூறல் நின்னு போச்சு' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி' பாடல் மனதில் சாரல் மழை பெய்யச் செய்யும். தர்ம யுத்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு ரங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு' பாடல் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும்.
புதுக்கவிதை திரைப்படத்தில் இடம்பெற்ற 'வா வா வசந்தமே' என்ற பாடல் பழைய காதலை மனதில் புதுப்பிக்கச் செய்யும். இப்படி தமிழ்திரையுலகில் தனக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ள மலேசிய வாசுதேவன் உடலால் மறைந்தாலும் குரலால் சாகாவரம் பெற்று கோடானுகோடி மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை