“தமிழும், சைவமும் இரு கண்கள்”-‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகள் பிறந்தநாள் இன்று

“தமிழும், சைவமும் இரு கண்கள்”-‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகள் பிறந்தநாள் இன்று
“தமிழும், சைவமும் இரு கண்கள்”-‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகள் பிறந்தநாள் இன்று
Published on

தமிழில் இரண்டற கலந்திருந்த பிறமொழி சொற்களை நீக்கி செம்மையான தமிழை தமிழர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக தனித்தமிழ் இயக்கத்தை’ தோற்றுவித்த மறைமலை அடிகள் பிறந்த தினம் இன்று.

வேதாசலம் என்ற இயற்பெயரையுடைய இவர் 1876 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார், இவரது பெற்றோர்கள் சொக்கநாத பிள்ளை மற்றும் தாயார் சின்னம்மையார் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில் வசித்தவர்கள். நாகப்பட்டினத்தில் உயர்நிலை பள்ளிக்கல்வி வரை படித்த மறைமலையடிகளின் படிப்பு, அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தந்தையின் மறைவால் தடைபட்டது. அதன்பின்னர் தாயின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்றறிந்து இளம் வயதிலேயே மிகச்சிறந்த கல்விமானாக விளங்கினார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் நாராயணசாமி பிள்ளையிடம் இலக்கியங்களையும், சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் கற்றறிந்த இவர், தொடக்கத்தில் ‘சித்தாந்த தீபிகை’ என்னும் மாத இதழில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அத்துடன் பல வார இதழ்களிலும் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளையும் எழுதினார். தமிழாசிரியர் ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் அதற்கான தேர்வுகளை எழுதி வெற்றிபெற்ற மறைமலையடிகள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரின் தமிழாசிரியர் பணிக்கு இவரின் திறமையை சோதித்தவர், பரிதிமாற் கலைஞர். இவர்கள் இருவரும் இக்கல்லூரியில் தமிழாசிரியர்களாக பணியாற்றினார்கள். பின்னர் இவர்கள் இருவரும் தீவிரமாக தனித்தமிழ் இயக்கத்திலும் பங்கெடுத்தனர்.

தனியாக பத்திரிகை தொடங்க விரும்பிய மறைமலையடிகள் 1902 ஆம் ஆண்டு ’ஞானசாகரம்’ எனும் இதழை தோற்றுவித்தார், 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாசத்தை ஆரம்பித்த மறைமலையடிகள்,  பின்னர் 1912ஆம் ஆண்டு வள்ளலாரின் வழியில் சென்னை பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, அதன் பெயரை  ‘பொதுநிலைக் கழகம்’ என மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை உருவாக்கி பல நூல்களை அச்சிட்ட மறைமலையடிகள், மணிமொழி நூல்நிலையம் எனும் நூல்நிலையத்தையும் உருவாக்கினார்.

தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய ‘தனித்தமிழ் இயக்கத்தினை’ 1916 ஆம் ஆண்டு வாக்கில் கி.ஆ.பெ.வி, தேவநேயப்பாவாணர், பரிதிமாற்கலைஞர் உள்ளிட்டோருடன் இணைந்து தோற்றுவித்தார் மறைமலையடிகள், அப்போதுதான் தனது பெயரான வேதாச்சலத்தை ‘மறைமலை’ என மாற்றினார். தமிழ்மொழி மீது கொண்ட மாறாப்பற்றால் தமிழ்மொழியில் கலந்திருக்கும் பிறமொழி சொற்களை நீக்கி தூயத் தமிழ் மொழி சொற்களை வழக்கத்திற்கு கொண்டுவந்தார். இவரின் தனித்தமிழ் இயக்கம் வந்த பிறகுதான் தமிழில் இருந்த பெரும்பாலான பிறமொழி வார்த்தை பயன்பாடுகள் மாற ஆரம்பித்தது என்பது உண்மை. இவரின் தனித்தமிழ் இயக்கம் காரணமாக அப்போது நூற்றுக்கணக்கானோர் தங்கள் பெயர்களை தூயத்தமிழ் பெயர்களாக மாற்றிக்கொண்டனர்.

தனித்தமிழ் குறித்த இவரது சொற்பொழிவுகள், தமிழகத்தில் பல தூயத்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கியது. இவரின் தனித்தமிழ் எழுத்துகள் பல தூயத்தமிழ் படைப்பாளிகளை தோற்றுவித்தது. ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று மறைமலையடிகள் குறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டியுள்ளார்.

4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே ஒரு நூலகம் அமைத்திருந்த மறைமலையடிகள், தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளிலும் புலமை பெற்ற இவர். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்துகொள்ள ‘மிஸ்டிக் மைனா’, ‘தி ஓரியன்டல் விஸ்டம்’ ஆகிய ஆங்கில இதழ்களை நடத்தினார்.  தனித்தமிழிலேயே பேச, எழுத வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைபிடித்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார் மறைமலை அடிகள். கோயில்கள், பள்ளிகளில் பட்டியலினத்தவருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்த இவர்,  இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

பண்டைகால தமிழரும் ஆரியரும், இந்தி பொது மொழியா?, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருக்குறளாராய்ச்சி, தமிழர்மதம், வேதாந்த மதவிசாரம் என பல நூல்களைப் படைத்த இவர். இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 56 நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இப்போதுவரை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் குரலை தோற்றுவித்த ’தமிழ்க்கடல்’ மறைமலை அடிகள் தனது 74 வயதில் (1950) மறைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com