“அகிம்சை வழி அல்ல.. சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு” - பிரிட்டீசாரை மிரளவைத்த நேதாஜி!

“அகிம்சை வழி அல்ல.. சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு” - பிரிட்டீசாரை மிரளவைத்த நேதாஜி!
“அகிம்சை வழி அல்ல.. சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு” - பிரிட்டீசாரை மிரளவைத்த நேதாஜி!
Published on

ஆங்கிலேயரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்தபோதே "சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுவது" என்று துணிச்சலுடன் முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நாட்டின் விடுதலைக்காக ராணுவத்தையே உருவாக்கிய அந்த துணிச்சல்காரரின் 125ஆவது பிறந்தநாள் இன்று.

அடிமை விலங்கை உடைக்க வேண்டும், சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி நாடு முழுவதும் நாள்தோறும் ஒவ்வொரு வடிவங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதில் காந்தியின் வழி அகிம்சை என்றால், அதற்கு நேர் எதிரான வழியை தேர்வு செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். விடுதலை என்பது கெஞ்சி கேட்டு பெறும் யாசகம் அல்ல, ரத்தம் சிந்தி பெற வேண்டியது என உறுதியாக இருந்தார் அவர்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அங்கேயே பள்ளிப்படிப்பையும், பின்னர் கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். கல்லூரிக் காலத்தில் மாணவர்களுக்கான படைப் பயிற்சியில் பங்கேற்று சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் ஆங்கிலேயரின் கீழ் பணியாற்ற விரும்பாமல், அந்த வேலையை உதறியவர் சுபாஷ் சந்திர போஸ்.

சுபாஷ் சந்திர போஸின் எண்ணங்கள் மாணவர்களையும் தொற்றிக் கொள்ள, மாணவ சமுதாயத்தில் பற்றிப் பரவியது சுதந்திர வேட்கை. நாட்டு மக்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கு பெருகியது. இதனால் அஞ்சிய ஆங்கிலேயர்கள், அவரை சிறையில் அடைத்தனர். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

காந்தியின் அகிம்சை வழி சமரசம் செய்து கொள்கிறது, சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு என்பது நேதாஜியின் கொள்கை. இந்தக் கொள்கை மனதில் வெடித்துக் கிளம்பியதால் காங்கிரஸிலிருந்து வெளியேறி ஃபார்வர்டு பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கி தனக்கான பாதையில் நடை போட்டார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய மக்களை அணி திரட்டினார். சுபாஷ் சந்திர போசின் துணிச்சலையும் வேகத்தையும் கண்டு வியந்த மக்கள் சூட்டிய பெயர்தான் நேதாஜி.

ரவீந்திரநாத் தாகூரின் 'ஜன கணமன' பாடலை நாட்டின் தேசியகீதமாக அறிவித்தது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியது, வீரமங்கை ஜான்சிராணியின் பெயரில் மகளிர்க்காக ராணுவத்தில் ஒரு பிரிவை ஏற்படுத்தியது, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதல்முறையாக முழுங்கியது என நாட்டின் விடுதலைக்கான முனைப்பில் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com