8-ல் உயர்வு; 6-ல் சரிவு... அதிமுக அரசின் கடைசி ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - நிதி ஆயோக் பார்வை

8-ல் உயர்வு; 6-ல் சரிவு... அதிமுக அரசின் கடைசி ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - நிதி ஆயோக் பார்வை
8-ல் உயர்வு; 6-ல் சரிவு... அதிமுக அரசின் கடைசி ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - நிதி ஆயோக் பார்வை
Published on

ஒருங்கிணைந்த வளர்ச்சியில் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது. இந்த இடத்தை அடைய, துறை ரீதியாக எந்தெந்த துறைகளில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதையும், எதில் எதிலெல்லாம் சரிவை சந்தித்துள்ளது உள்ளிட்டவற்றையும் இந்தக் கட்டுரை வழியாக விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

நிதி ஆயோக் அமைப்பு சார்பில் 16 தலைப்புகளின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், பட்டியலிடப்பட்டு வெளியிடப்படும். அந்தப் பட்டியலில்தான்,  தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில், கேரளா முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது சில முக்கியமான துறைகளில் தமிழகம் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே…

  • வறுமை ஒழிப்பில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த தமிழக அரசு இந்த ஆண்டும் அதே முதலிடத்தில் தொடர்கிறது. வறுமையை ஒழிக்க அரசு எடுக்கும் நாள் திட்டங்களின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
  • பசியில்லா மாநிலங்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்த தமிழக அரசு இந்த இடம் மூன்று இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது.
  • பாலின சமநிலையில் கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
  • தூய்மையான எரிசக்தியை பொருத்தவரை கடந்த ஆண்டு நான்காம் இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு முதல் இடத்தில் உள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியில், கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு நான்காவது இடத்தில் உள்ளது.
  • தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டை பொருத்தவரை, கடந்த ஆண்டு 12-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • சமநிலையின்மையை குறைக்கும் முயற்சிகளில் கடந்தாண்டு 13வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
  • நகரங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாடு பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
  • பொருள்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு திறன் அதிகரிப்பதை பொறுத்தவரை கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டும் அதே இடத்தில் தொடர்கிறது.
  • சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய மாநிலங்களில் தமிழகம் சற்று மோசமான நிலையில் தான் உள்ளது. கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்த இந்நிலையில் இந்த ஆண்டு 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இனி தமிழகம் பின்தங்கிய துறைகளை காணலாம்.

  • பொது சுகாதாரத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு ஓர் இடம் பின்தங்கி மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குஜராத் மாநிலம் முதலாவது இடத்திலும்; மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. கொரோனாவை திறம்பட சமாளித்து பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் கேரளா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
  • கல்வியின் தரம் குறித்த பட்டியலில் கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த தமிழக அரசு இந்த ஆண்டு ஓர் இடம் இறங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • சுத்தமான குடிநீருக்கான பட்டியலைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • கடல் சார்ந்த வளங்களை சிறப்பாக கையாளும் மாநிலங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடல் பரப்புகளை கொண்ட ஒடிசா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கோவா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • காடுகளை சிறப்பாக கையாளுதல் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கடந்தாண்டு எட்டாவது இடத்தில் இருந்த தமிழகம் 14வது இடத்தில் இந்த ஆண்டு உள்ளது
  • பொது அமைதியை சிறப்பாக கையாளும் மாநிலங்களில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 4 இடங்கள் பின்தங்கி பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

இப்படி மொத்தம் எட்டு துறைகளில் முன்னேற்றம் கண்டு ஆறு துறைகளில் சரிவை சந்தித்து இரண்டு துறைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமலும் தமிழக அரசு கடந்த ஆண்டு செயல்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தின் கடைசி ஆண்டு ஆகும்.

இந்த நிலைமை புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசில் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதுதான் நாம் உற்று கவனிக்க வேண்டியுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com