தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களின் தகவல்கள் வெளிப்படையாக உள்ளன.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அறிக்கைகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. https://www.tnpds.gov.in/pages/reports/pds-report-taluk.xhtml
இதில் தமிழகத்தின் வரைபடம், மாவட்டங்களின் பெயர்களோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குடும்ப அட்டைகள் மற்றும் நியாய விலைக்கடைகள் விவரங்களுக்கு தங்கள் மாவட்டத்தை கிளிக் செய்யவும் என்ற இணையதள லிங்க் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் மாவட்ட வாரியான தாலுகாக்கள், மொத்த குடும்ப அட்டைகள் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் தாலுகாவை தேர்வு செய்து உள்ளே சென்றால், வட்டம் வாரியான கடையின் குறியீட்டு எண், கடை பொறுப்பாளர் பெயர், பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கடையின் குறியீட்டு எண்ணை கிளிக் செய்தால், கடையின் தகவல்கள் மற்றும் கடைப் பொறுப்பாளரின் தகவல்கள் உள்ளன. அதற்கு கீழே பரிவர்த்தனைகள், பொருட்களின் இருப்பு நிலை, பொதுமக்களின் புகார்கள் உள்ளிட்ட கிளிக் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் பொதுமக்களின் புகார்களை கிளிக் செய்தவுடன், புகார் செய்தவரின் தொலைபேசி எண்ணையும், அவரது புகாரையும் காண இயலுகிறது. இந்த இடத்தில் பொதுமக்களின் தொலைபேசி எண் வெளிப்படையாக பகிரப்பட்டுள்ளது.
இதேபோன்று தாலுகாவின் வட்டம் வாரியான தகவலில், மொத்த குடும்ப அட்டைகளை கிளிக் செய்தால், அரிசி அட்டைகள், சர்க்கரை அட்டைகள் உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு கீழே, குடும்ப விவரம் ‘காண்க’ என்ற ஒரு ஆஃப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
அதை கிளிக் செய்தவுடன் அட்டை எண் மற்றும் முகவரி காட்சியளிக்கிறது.
இதன்மூலம் பொதுமக்களின் முகவரியும் பகிரப்பட்டுள்ளது. இதுபோன்று மக்களின் தகவல்கள் பகிரப்படுவது காப்புரிமை குறித்த கேள்விகளை எழுப்பும் வகையில்உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.