'நாடு முழுவதும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே' என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. அதேவேளையில், '2018-ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் மீண்டும் ஏற்பட விரும்பவில்லை. ஆலையை மீண்டும் திறப்பதனால் கடும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அச்சம் உள்ளது' என்று தமிழக அரசு வாதிட்டுள்ளது.
'நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான கட்டமைப்பு இருப்பதால், மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து ஆக்சிஜனை தயாரித்து, அதனை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும' எனக் கோரி, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவிற்கு நேற்றைய தினமே தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது அப்பகுதி மக்களுக்கு இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை. அதுமட்டுமில்லாமல், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் கடுமையான சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது" என்று தமிழக அரசு சார்பில் வாதங்களை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "தற்போது நாடு முழுவதும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வேதாந்தா நிறுவனம் ஆலையை நடத்துவது பிரச்னை என்றால், தமிழக அரசே ஆலையை எடுத்து நடத்த வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், "கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு கூட ஆலையை எடுத்து நடத்த முடியும். ஆனால், அந்தப் பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வேறு விதமாக இருக்கிறது. ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் ஆலையை திறக்க கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலை சமாளிக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் இல்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை" என்று திட்டவட்டமாக கூறினார்.
தமிழக அரசின் வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் சார்பில் தொடரப்பட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "ஆலையால் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோயில் பாதிக்கப்பட்டவர்கள், ஆலை மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் திறக்கப்பட்டால் பிரச்னையை மேலும் பெரிதாகும்" என்று கூறினார்.
மேலும், "தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. எனவே வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்க வேண்டிய கட்டாயம் இல்லை" என கூறினார்.
அதனை ஆமோதித்த தமிழக அரசு வழக்கறிஞர், "மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தியை செய்வதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, நாடு முழுவதிலும் உள்ள மற்ற ஆலைகளிலிருந்து அதனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளலாம்" என்று யோசனை வழங்கினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து நேற்றைய தினமே ஏன் தெரிவிக்கவில்லை?" என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியதோடு, "இது வெறும் தமிழகம் மட்டும் சார்ந்த பிரச்னை இல்லை. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். எனவே ஆலையை மீண்டும் திறப்பது சம்பந்தமாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
- நிரஞ்சன் குமார்