தமிழ்நாட்டில் இலவசங்களால் நிகழ்ந்தது என்ன? இலவசங்கள் வெறும் ஓட்டரசியல் மட்டும் தானா?

தமிழ்நாட்டில் இலவசங்களால் நிகழ்ந்தது என்ன? இலவசங்கள் வெறும் ஓட்டரசியல் மட்டும் தானா?
தமிழ்நாட்டில் இலவசங்களால் நிகழ்ந்தது என்ன? இலவசங்கள் வெறும் ஓட்டரசியல் மட்டும் தானா?
Published on

சுதந்திர தினவிழாவில் இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசியது, நாடெங்கும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு நிதியமைச்சர் பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் , தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பி.டி.ஆர் பேசிய விசயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இலவசங்கள் குறித்த கேள்விகளுக்கும், அதற்கு பி.டி.ஆரின் கொடுத்த பதில்கள் யாவும் இலவசங்கள் குறித்த விவாதத்தை இந்திய அளவிலும் தொடங்கிவைத்திருக்கிறது.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மாநில அரசுகள் வழங்கும் இலவசங்கள் குறித்த தொகுப்பாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த பி.டி.ஆர், ‘’ உலகமெங்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு, அரசியல் அமைப்பின் கீழ் இயங்கும் எந்த அரசுகளுக்கும், மாநில நிதியை, எதில் செலவு செய்ய வேண்டும் என முடிவு செய்ய உரிமை உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை” என்று பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து தொகுப்பாளரின் கேள்வி, ” இந்தியாவில் பல மாநிலங்களில் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றால் யாரு தான் இலவசங்களை ஒழுங்குபடுத்துவது” எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த பி.டி.ஆர் , ” i) நீங்கள் கூறும் இந்த கருத்துக்கு அரசியல் அமைப்பில் ஒரு சட்டம் இருக்க வேண்டும். ii) நிதி மேலாண்மையில் நல்ல அறிவு இருக்க வேண்டும் அதாவது பொருளாதாரத்தில் முனைவர் பட்டமோ அல்லது நோபல் பரிசு பெற்றவராகவோ இருக்க வேண்டும் iii) நிதி மேலாண்மையில் தமிழ்நாட்டை விடச் சிறந்த மேலாண்மையைச் செய்த வரலாறு இருக்க வேண்டும்.. இந்த மூன்றில் எதாவது ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்கள் கூறுவதை நாங்கள் கவனிப்போம். மேலும் உங்களிடம் நல்ல செயல்திறனுக்கான வரலாறு இருந்தாலோ, நாட்டின் பொருளாதாரத்தைச் சிறப்பாக வளர்த்த வரலாறு இருந்தாலோ அல்லது கடனை குறைத்து, தனிநபர் வருவாயை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளீர்கள் என்றாலோ.. நீங்கள் சொல்லவதை நாங்கள் நிச்சயம் கேட்போம்.

மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் நிதிப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்துக்கான விகிதம் குறைவு, கல்லூரிச் சேர்க்கை போன்ற மனிதவள குறீட்டுகளிலும் கூட தமிழ்நாடு உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இவற்றில் எதுவுமே உங்களிடம் இல்லை என்றால் நாங்கள் ஏன் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்க வேண்டும்? அதைக் கடவுள் ஆணை போல ஏற்க வேண்டும்? முதலமைச்சர் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருக்கிறார். அதை நான் சரியாக செய்து வருகிறேன். ஒன்றிய அரசை விட மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டும் இதேபோல் சிறப்பாகச் செயல்படுவோம்” என்றார்.

பி. டி. ஆர் இந்த நிகழ்ச்சியில் பேசியதைத் தொடர்ந்து இலவசங்கள் மக்களைக் கெடுக்கின்றன. சோம்பேறிகளாக்குகின்ற என்ற பார்வை தமிழ்நாட்டில் சிலருக்கு இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வழங்கிய இலவசங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியது என்றும் பார்ப்போம். கூடவே இலவசங்கள் என்று வழங்கப்படுவது யாவும் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ தனது சொந்த கட்சி பணத்தில் செய்ததில்லை. அவை அனைத்தும் மக்களின் வரிப் பணத்தின் மூலம் செய்யப்பட்டவை. ஆக மக்களின் வரிப் பணத்தை எடுத்து மக்களுக்கே பயன்படும் நலத்திட்டங்களே தான் இந்த இலவசங்கள்.

இந்த இலவசங்களைப் பெறும் மக்கள் மீது தாழ்வான பார்வையோ, இலவசங்களை பெறுவது கௌரவக் குறைச்சல் என்று ஒதுக்கிக்கொள்பவர்களே உயர்ந்தவர்கள் என்பதோ இல்லை. மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை மீண்டும் மக்களுக்குக் கொடுக்கும் ஒரு வழியே இந்த இலவசங்கள். இதனால் இலவசங்கள் என்பது ஒவ்வொரு மக்களுக்கான உரிமை கூடவே இதைபற்றின புரிதலும் அனைவருக்குமானது. 


இலவசங்கள் என்ற பெயரிலான நலத்திட்டங்களும் அதன் விளைவுகளும் :

> மாணவிகளுக்கு இலவச சைக்கிள் - பள்ளிப் பருவத்தின் பாதியிலேயே பள்ளியிலிருந்து ட்ராப் அவுட் ஆகும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது.

> அம்மா உணவகம் - ஐ.நா.வின் மில்லினியம் இலக்கான, பசியில்லாத மாநிலம், ஐ.நா நிர்ணயித்த காலத்தை விட 12 ஆண்டுகளுக்கு முன்னவே நாம் எட்டினோம்.

> கோழி, ஆடு, மாடு இலவசம் - கிராமப் புறங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியது. கூடவே விவசாய கூலிகளுக்கு, கூடுதலாக ஒரு வருமானம் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

> டி.வி, மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் - வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியில் பெரிய அளவில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்தது. மேலும் விளம்பரங்களுக்கான பெரிய சந்தையையும் திறந்துவிட்டது.

> தற்போது வழங்கப்பட்ட, பெண்களுக்கான இலவச பேருந்து சீட்டு - நகரங்களிலும் , கிராமங்களிலும் தினசரி கூலி வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

> மடிக்கணினி, மருத்துவக் காப்பீடு, மதிய உணவு, சத்துணவு உள்ளிடவையும் சேர்த்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் கொடுத்த இலவசங்கள் ஏறலாம்.

இலவச டிவி மக்களுக்கு அவசியம் தேவையா என்ற கேள்வியை கருணாநிதியிடம்  முன்வைத்த போது அவர், “ உலகம் மொத்தமுமே ஒரு டிவிக்குள் அடங்கிவிடுகிறது. உலகத்தில் என்ன நடக்கிறது, எப்படி இயங்குகிறது என்று தெரியாமலே இருப்பவர்களையும் இந்த இலவச டிவி மேம்படுத்தும்” என்றார். அவர் சொன்னதில் ஒரு நிதிர்சனம் இருக்கிறது என்றாலும் கூட அப்போது மின் இணைப்புகளே இல்லாத பகுதிகளுக்கு இலவச டிவி தரப்பட்டது. இதற்கு கண்டனங்களும் எழுந்தன. இதுபோன்று அரசின் கடமை மீறல்கள் நிச்சயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

இலவசங்கள், மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்ற புள்ளியிலிருந்து திசைமாறி, வாழ அடிப்படை வசதிகளே செய்து கொடுக்காமல், செல்போன், WI-FI போன்ற இலவச அறிவிப்புகள் யாவும் அநாவசியமானதே என்றும் கூறப்படுவதுண்டு.

மேலே சொன்ன இலவசங்களை அறிவிக்கும்போது அதற்கான சமூக பொருளாதார தேவைகளும், வளர்ச்சிகளும் இருந்தன. ஆனால் செல்போன் போன்ற இலவச அறிவிப்பில் மக்களின் வரிப் பணம் வீணாவதை தவிர வேறு நன்மைகள் விளைய போவதில்லை எனலாம். இந்த இடத்தில் தான் இலவசங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. வளர்ச்சிக்கு பயன் தராத, ஓட்டுக்காக மக்களை கவரும் இலவச அறிவிப்புகள் எல்லாம் தமிழகத்தில் இலவசங்களால் நிகழ்ந்த மாற்றத்தை மழுங்கடிக்கச் செய்கிறது.  


கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த இலவசங்கள் மாநிலத்திற்கு அசாதாரணமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உட்பட மற்ற பொருளாதார வல்லுநர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளும் ஒரு விசயம் எதுவென்றால், ”ஒரு நாட்டின் பொருளாதாரம் சீராக வளரவும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழியும் இருக்குமென்றால் அது பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் கைகளில் பணத்தைக் கொடுப்பது தான். அதன் மூலம் ஏழை எளிய மக்கள் செலவு செய்ய ஆரம்பிக்கும்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் உருவாக்கும் என்பது தான். அந்த மாற்றம் தான் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல உருவானது.

மேலே சொன்ன இலவசங்களால் பெரிதும் பயனடைந்தது எளிய மக்கள் தான். இந்த இலவசங்கள் எதுவும் அவர்களை சோம்பேறிகளாக்கவில்லையே? மாறாக அவர்களது வாழ்வை மேம்படுத்தி இருக்கிறது. வாழ்வாதாரத்துக்கு எதோவொரு வகையில் உதவுகிறது. இப்படி ஒவ்வொரு எளிய மக்களும் ஒரு படி முன் வந்த போது தான், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது மேலும் மற்ற மாநிலங்களை விடவும் நிதி மேலாண்மையிலும், கல்வியிலும், வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் தமிழ்நாடு முன்னிடத்தில் இருக்கிறது. இருப்பினும் தற்போது மக்களை கவருவதற்காகவே அறிவிக்கும் செல்போன் போன்ற அர்த்தமற்ற இலவச அறிவிப்புகளை ஒழுங்குப்படுத்த வேண்டியதும் கட்டாயமாகிறது. 

எழுத்து-  கே. அபிநயா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com