“மோடியின் தமிழக வருகையை நாங்கள் விரும்பவில்லை” - கே.எஸ் அழகிரி சிறப்புப் பேட்டி

“மோடியின் தமிழக வருகையை நாங்கள் விரும்பவில்லை” - கே.எஸ் அழகிரி சிறப்புப் பேட்டி
“மோடியின் தமிழக வருகையை நாங்கள் விரும்பவில்லை” - கே.எஸ் அழகிரி சிறப்புப் பேட்டி
Published on

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று எதிர்ப்பு தெரிவித்து உலகையே உற்றுநோக்க வைத்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்ததும் ‘கம் கம் மோடி’ என்கிற ரேஞ்சுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று சர்ச்சை எழுந்துள்ளது. வரும் 12 ஆம் தேதி மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க தமிழகத்திற்கு வரும் மோடியை வரவேற்கும், திமுகவின் மாற்றம் குறித்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் என்ன நினைக்கிறது என்பதை அறிய, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியிடம் பேசினோம்,

பிரதமர் மோடியின் தமிழக வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் கூட்டணி கட்சியான திமுக வரவேற்கிறதே?

”பிரதமர் தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க வருகிறார். இதில், எங்களின் பார்வை வேறுபட்டது அல்ல. ஆனால், அவர் தமிழக நலன்களுக்கு எதிராக இருக்கிறார் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே, தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியையும் கொடுத்தார்கள். சொல்லப்போனால், நம் தமிழகத்திற்கு இன்னும் ஆறு மருத்துவக் கல்லூரிகள் கிடைக்கவேண்டும். அவற்றையே, அவர் கொடுக்கவில்லை. மதுரையில் துவங்குவதாகச் சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளைத் துவக்கவில்லை.

எனவே, தமிழக மக்களுக்கு எதிராகவும் விரோதமாகவும் இருப்பதால் மோடியின் வருகை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால், வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம். அவரின் வருகையை நாங்கள் விரும்பவும் இல்லை. வருவதால் தமிழகத்திற்கு என்ன பலன் இருக்கிறது?”. அதேசமயம், திமுக வரவேற்பதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும். நாங்கள் கூட்டணியில் இருப்பதாலேயே எல்லாவற்றிற்கும் எங்களிடம் திமுக கேட்டுக்கொண்டு செயல்படவேண்டும் என்ற அவசியமில்லை”.

ஆனால், உங்கள் கட்சியின் மாணிக்கம் தாகூர் எம்.பி வரவேற்றுள்ளாரே?

“அவர் கூறியது எனக்குத் தெரியாது. நான் பார்க்கவில்லை”.

“அப்போ, ‘கோ பேக் மோடி’ என்பதை நீங்கள் சொல்வீர்களா?

”நாங்கள் இன்னும் அதுகுறித்து முடிவு செய்யவில்லை. ஆனால், மோடி வருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை”.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜகவுடன் மென்மையான போக்கையே திமுக கடைப்பிடிப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே?

“இப்படி சொல்பவர்களின் பார்வை தவறானது. திமுக கொள்கை ரீதியில் உறுதியாகத்தான் இருக்கிறது. மென்மையான போக்கினை கடைப்பிடிக்கவில்லை. உதாரணமாக, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவேண்டும் என்றும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் நீட் தேர்விற்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். பாஜகவுடன் மென்மையான போக்கினை கடைப்பிடித்திருந்தால் இப்படியெல்லாம் தீர்மானம் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். கொள்கை அளவில் திமுக எதிராகத்தான் செயல்படுகிறது. ஒரு மத்திய அரசு - மாநில அரசு என்று வரும்போது ஒரு இணக்கம் இருக்கத்தான் செய்யும்.  அப்படி பாஜகவுடன் இணக்கமாக இருப்பதில், தவறில்லை என்பதுதான் எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை திமுக ஆதரவளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியை தமிழக அரசுதான் ஏற்பாடு செய்துள்ளது. கொள்கை ரீதியில் எதிர்ப்பை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்”.

வரவிருக்கும் 5 மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது. ராகுல் காந்தி மோடியின் பலத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றிருக்கிறாரே பிரஷாந்த் கிஷோர்?

“பிரஷாந்த் கிஷோர் ஒரு தொழில் நிபுணர். காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை சொல்கிறேன் என்று எங்கள் தலைமையை அணுகினார். அதனை, தலைமை நிராகரித்துவிட்டது. எனவே, தொழில் போட்டியின் காரணமாக பிரஷாந்த் கிஷோர் இப்படியெல்லாம் பேசுகிறார். இம்முறை ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் நாங்கள்தான் வெல்வோம். ஏனென்றால், விவசாயிகளின் போராட்டம் வடமாநிலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்கும் அசைந்துக்கொடுக்கமாட்டார் மோடி என்றார்கள். இன்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். மோடிக்கு வடமாநிலங்களில் பெரிய அதிருப்தி இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் எல்லாம் உள்ளன. இவையெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் வெற்றியை ஈட்டித்தரும்”.

-வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com