'ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு' - எக்ஸ்பிரஸ் வேகத்தில் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல்

'ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு' - எக்ஸ்பிரஸ் வேகத்தில் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல்
'ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு' - எக்ஸ்பிரஸ் வேகத்தில் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல்
Published on

மூன்று வாரங்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் முடக்கி வரும் நிலையிலும், மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை 21 மசோதாக்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. விவாதம் இன்றி, மக்களவையில் 12 மசோதாக்கள் மற்றும் மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெறுகிறது என்றும், மருந்துக்குக்கூட இதுவரை எந்தவித விவாதமும் நடைபெறவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் அதிருப்தி தெரிவித்துள்ளன.

"முக்கிய மசோதாக்களுக்கு கூட ஒரு சில நிமிடங்களிலேயே ஒப்புதல் பெறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது" என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் குற்றம்சாட்டியுளளார். காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளும் "இப்படி அமளிக்கிடையே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது நாடாளுமன்றத்தின் மரபல்ல" என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்களுக்கு அமளிக்கிடையே மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டு இன்னும் தொடரும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்று வருவது ஜனநாயகப் படுகொலை என்பது எதிர்க்கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டு.

"நாங்கள் விவாதத்துக்கு தயார். எதிர்க்கட்சிகள்தான் விவாதம் நடக்காமல் தடுக்கின்றன" என்று ஆளும் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பலமுறை அமைதியை கைவிடும்படி கோரிக்கை விடுத்தும் இதுவரை எதிர்க்கட்சிகள் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்வதில்லை என பிடிவாதமாக உள்ளன.

பேகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான விவாதம் நடக்காமல் வேறு எந்த அலுவலகம் நடைபெற அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். பொதுவாக, காலை நேரத்தில் கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் மற்றும் மதியத்துக்கு பிறகு மசோதாக்கள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் மீதான விவாதங்கள் என நாடாளுமன்றத்தில் நடைபெறுவது வழக்கம். அப்படி தினமும் உணவு இடைவேளைக்குப் பிறகு மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்து இருந்தால் கூட இத்தனை மசோதாக்களை விவாதித்து ஒப்புதல் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.

மசோதாக்களை தவிர முக்கிய பிரச்னைகள் தொடர்பான விவாதங்களுக்கும் மதியம் மற்றும் மாலை நேரம் ஒதுக்குவது மரபு. அப்படி அல்லாமல் அவசரகதியில் மசோதாக்களை விவாதம் இன்றி ஒப்புதல் அளிப்பதால்தான் இத்தனை மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளன என்பது வல்லுனர்களின் கருத்து.

மக்களவையில் ஒப்புதல் பெற்றுள்ள மசோதாக்களில் முன்தேதியிட்டு வரி வசூலிப்பது தொடர்பான முக்கிய சட்டத்திருத்தம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா ஆகியவை அடக்கம். இந்த இரண்டு மசோதாக்களும் வெள்ளிக்கிழமை எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோலவே மாநிலங்களவையில் பல பொருளாதார ரீதியான முக்கிய மசோதாக்கள் மற்றும் அத்தியாவசிய பாதுகாப்புத் துறை சேவைகளில் வேலைநிறுத்தத்தை தடுக்கும் சட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு தடுப்பதற்கான முக்கிய சட்டமும் மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு வழி செய்யும் மசோதா மக்களவையில் ஒப்புதலை பெற்றுள்ளது. இதைத் தவிர மக்களவையில் கூடுதல் அரசு செலவுகளுக்காக ஒப்புதல் பெறும் இரண்டு மசோதாக்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கத்தால் பாதிக்கப்பட்டால், அரசு செலவினங்களுக்கான மசோதா இறுதிகட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஒப்புதலுக்கு கொண்டுவரப்படும். ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இறுதி வாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று இருப்பது, மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் சமரசம் நடைபெற வாய்ப்பில்லை என கருதுவதை காட்டுவதாக அமைந்துள்ளது. அரசின் இத்தகைய போக்கு காரணமாக எதிர்க்கட்சிகள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளன. "எங்களுடைய எதிர்ப்பை அரசு பொருட்டாகவே கருதவில்லை" என பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com