'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்?- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்

'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்?- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்
'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்?- சைபர் ட்ராப் கும்பலிடம் பதின்பருவ பிள்ளைகளை காக்கும் வழிகள்
Published on

ஆன்லைனில் சைபர் ட்ராப்பில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை எப்படி காப்பாற்றவது? இந்த விவகாரத்தில், தீர்வுதான் என்ன? அதை முன்னெடுக்க வேண்டிய முதல் நபர் யார்? - இக்கேள்விகளுக்கான பதிலை நோக்கியதுதான் இக்கட்டுரை.

கடந்த இரண்டு தினங்களாக யூடியூபர் 'பப்ஜி' மதன் பற்றிய விவகாரங்களும் விமர்சனங்களும் இணையத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. பலபேருக்கு இப்போதுதான் அவரை தெரிகிறது என்றாலும்கூட, அவரின் வீடியோக்களை அனிச்சையாகக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு அவ்வளவு வக்கிர வார்த்தைகள் கொட்டிகிடக்கின்றன. இவ்வளவு நாள் இந்த வீடியோக்களை ஏன் யாருமே தடுக்கவில்லை என்ற எண்ணமும் எழுகிறது.

‘கேமிங்’ என்ற பெயருக்குள் சுருங்கிக்கொண்டு, வன்முறையில் தொடங்கும் அவரின் யூடியூப் வீடியோ காட்சிகளுக்கு பின்னணியாக,  ‘அவனை சுடுடா, இவனை கொல்லுடா’ என தொடங்கும் ஆடியோக்கள், கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கொண்டு ஒருவர் இன்னொருவரை அவமதிப்பது – அருவருக்கத்தக்க வார்த்தைகளால் முகம் தெரியா நபர்கள் பலரும் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வது என நீள்கிறது.  சில நொடிகளுக்கு மேல் கூட அவற்றை கேட்கவும் முடியவில்லை, வீடியோவின் வன்முறை வெறியாட்டங்களை பார்க்கவும் முடியவில்லை.

குறிப்பிட்ட அந்நபரின் யூடியூப் பக்கத்தில், நிறைய வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும், அவருடன் பலர் இணைந்து பேசிக்கொண்டு விளையாடுகிறார்கள். பப்ஜி மற்றும் அதேபோன்ற தோற்றத்திலுள்ள வேறு சில விளையாட்டுகள் மூலம் ஒருவருக்கொருவர் மொபைலுக்குள்ளேயே அடித்துக்கொள்கிறார்கள். சோகம் என்னவென்றால், இதில் பெரும்பாலானோர் பதின்வயது பிள்ளைகள்.

'பதின்பருவ பிள்ளைகள், வன்முறை கலந்த மொபைல் கேம்ஸ்' என்று மட்டும் சொல்லி, இதை நம்மால் கடக்க முடியாத அளவுக்கு வார்த்தை பிரயோகம் யாவும் அமைகிறது. இதன் பின்னிருக்கும் சைபர் ட்ராப்பிங்தான், மற்றவை அனைத்தையும் விட கொடியதாக இருக்கிறது. இந்த பதின்பருவ குழந்தைகளை, ஆன்லைனில் கேம் விளையாடலாம் – யூடியூபில் பெயர் வரும் என்றெல்லாம் டெக்னாலஜியின் பெயரில் உள்ளிழுத்துவிட்டு, பின் அவர்களிடம் அடிக்கடி பணம் கேட்பது, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொண்டு அவர்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவது என்றிருக்கிறார்கள் ட்ராப் கும்பலை சேர்ந்தவர்கள்.

தற்போது சிக்கியிருக்கும் மதன் எனும் நபரேக்கூட, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதின்பருவ பெண் குழந்தைகளிடம் அத்துமீறி பேசுவது, அந்தத் தகவல் பரிமாற்றத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பெருமையாக போஸ்ட் போட்டுக்கொள்வது என்றிருந்ததாக, ஒரு சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இன்ஸ்டார்கிராம் மட்டுமன்றி, டெலிகிராம் – வாட்ஸ் அப் போன்ற இடங்களிலும் பதின்பருவ பிள்ளைகளை தொடர்புகொண்டு தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார் இவரென்றும், சில இணையதளவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். “இவர் ஒருவர்தான் இப்போது சிக்கியிருக்கிறார், இன்னும் ஏராளமானோர் சிக்கவில்லை. அவர்களிடமிருந்து நம் பிள்ளைகளை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என புலம்பும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

இப்படியான நபர்களை முற்றிலுமாக ஒழிப்பது, இந்த டிஜிட்டல் உலகில் சாத்தியமில்லாததுதான். எனில் எப்படித்தான் இதிலிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்வது? - குழந்தைகள் நல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் கேட்டோம்.

“இந்த விஷயத்தில், பதின்பருவத்தினர்தான் மிகவும் எளிதான டார்கெட்டாக இருக்கிறார்கள். காரணம், வயதுக்காரணமாக அவர்களிடம் இயல்பிலேயே சில தேடல்கள் இருக்கும். காலப்போக்கில் அவை மாறும். இடைப்பட்ட நேரத்தில், பெற்றோர்கள் அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்.

இந்த விவகாரத்தில், நாம் இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது. இத்தனை குழந்தைகள் இவரின் ட்ராப்பில் சிக்கியுள்ளனர் என்றால், அக்குழந்தைகளின் பெற்றோருக்கு அது இவ்வளவு காலம் தெரியாதது ஏன்? பெற்றோரின் கண்காணிப்பின்கீழ் இல்லாத குழந்தைகள்தான், இந்த ட்ராப் செய்யும் நபர்களின் டார்கெட்டாக பெரும்பாலும் இருக்கின்றனர்.

அந்தவகையில், தன் குழந்தை எப்படியான வார்த்தைகளை பயன்படுத்துகிறான், மொபைலில் என்ன மாதிரியான விஷயங்களை தேடுகிறான் – பார்க்கிறான், எந்தெந்த நேரத்தில் மொபைல் உபயோகப்படுத்துகிறான் – வீட்டின் எந்த இடத்தில் அமர்ந்து அதிகநேரம் மொபைல் உபயோகிக்கிறான் – மொபைலில் யாருடனெல்லாம் மெசேஜ் மூலமாக பேசுகிறான் – ஃபோன் செய்து பேசும்போது மறைந்து மறைந்து பேசுகிறான என்பதெல்லாம் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி குழந்தை சாப்பிட்டானா, என்ன சாப்பாட்டை விரும்பி சாப்பிடுகிறான், எந்த காய்கறிகளை ஒதுக்குகிறான், என்ன சட்டை அவனுக்கு பிடிக்கும், எப்போது குளிக்கிறான் என்பதெல்லாம் பெற்றோருக்கு அடிப்படையாக தெரிகிறதோ… அதேபோல மேற்சொன்ன விஷயங்களும் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரியாவிட்டால், நிச்சயம் அக்குழந்தை பெற்றோரின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டு இருக்கிறதென்றே பொருள்.

பதின்பருவ குழந்தைகளுக்கு, ஒரு வித பிடிவாத குணமிருக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. ‘என்னை சந்தேகப்படறியா, நான் தப்பு பண்றேன்னு நினைக்கிறியா, நீயே ஏன் என்னை நம்பலை, என் ஃப்ரெண்ட்ஸோட அம்மா – அப்பாலாம் இப்படி இல்ல’ என்றெல்லாம் பெற்றோரை நோக்கி கேள்விகளை தொடுப்பார்கள். வேறு வழியேயில்லை…. பெற்றோர் அதை எதிர்கொண்டே ஆகவேண்டும். மொபைல் விஷயத்தில், குழந்தைகளிடம் பெற்றோர் கண்டிப்புடன் இருப்பது மட்டுமே குழந்தைகளுக்கு நல்லது. அந்தக் கண்டிப்பு, இன்று பெற்றோரை வில்லனாக காட்டலாம்… ஆனால் அதுவே நாளை உங்களின் அருமையை அவர்களுக்கு புரியவைக்கும். மட்டுமன்றி, குழந்தை சொல்லி பெற்றோருக்கு அவனின் செய்கைகளும் - பிடித்தமான உணவும் தெரிவதில்லை. குழந்தையின் நடத்தையை வைத்து, ஆர்வத்தை வைத்தே அவற்றை பெற்றோர் கண்காணிப்பர். அப்படி மொபைலையும் கேஷூவலாக பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

ஒருவேளை பெற்றோரின் மொபைலை கண்காணிக்கும் தன்மை, குழந்தைக்கு கடுமையாக தெரிந்தால், பெற்றோர்கள் குழந்தையோடு அமர்ந்து பேசி அவர்களுக்கு சூழலை புரியவைக்க வேண்டும். 'மொபைல் உபயோகிக்கும் வயது இது இல்லை, மொபைலில் உபயோகிக்கும் விதமும் இது இல்லை. இது படிப்பதற்கான வயது, நற்பண்புகளை கற்பதற்கான வயது' என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

இவை அனைத்துக்கும் பிறகும், பெற்றோரின் மொபைல் கண்காணிப்பு குழந்தையின் நடத்தையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், பெற்றோர் தங்களின் குழந்தையை மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் அழைத்து செல்ல வேண்டும். எப்படி குழந்தைக்கு தலைவலி – காய்ச்சல் என்றால் மருத்துவரிடம் அழைத்து செல்வீர்களோ, அப்படி இதற்கு அழைத்துச்செல்ல வேண்டும். மனநல ஆலோசனையை பெறுவது, அவமானம் என நினைப்பது அறியாமை. அதை பெற்றோர் முதலில் உணரவேண்டும். ஆகவே மொபைல் கொடுக்கவில்லை என்பதற்காக குழந்தைகள் யாரேனும் தற்கொலை சார்ந்து பேசுவது – பொருட்களையெல்லாம் உடைப்பது – வீட்டிலிருந்து சென்றுவிடுவேன் என சொல்வது போன்றவற்றையெல்லாம் செய்தால், தயவுசெய்து அவர்களை அருகிலுள்ள மனநல நிபுணரிடம் அழைத்து சென்று, அவர்களை எண்ணங்களை சரிபடுத்துங்கள்.

மொபைல் கொடுப்பது எந்தளவுக்கு ஆபத்தானதோ, அதைவிட அதிக ஆபத்தானது அவர்களுக்கு சமூக வலைதளத்தில் தனிக்கணக்கு பயன்படுத்த அனுமதியளிப்பது. இன்று நடக்கும் பாலியல் அத்துமீறல்களில், பெரும்பாலானவை இணையவழியாக நடப்பவைதான். அப்படியிருக்கும்போது, அதுபற்றிய புரிதல் இல்லாத குழந்தைக்கு அதை பயன்படுத்த அனுமதி தந்தால், அதுவே ஒரு பிரச்னையாக அமையும். பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளையும்கூட, பெற்றோரின் மேற்பார்வையில், கண்காணிப்பின்கீழ் மட்டும், குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குழந்தை அடம்பிடித்தால், 'பள்ளிப்பருவம் முடிந்தபிறகுதான் உனக்கு தனி சமூக வலைதள கணக்கு பற்றி யோசிக்க வேண்டும்' என உறுதியாக பெற்றோர் சொல்ல வேண்டும்.

அதேபோல கதவை சாத்தியபடி மற்றும் இருட்டு அறையில் அமர்ந்துகொண்டு மொபைல் உபயோகிப்பதை, பெற்றோர் ஊக்குவிக்கவே கூடாது. எதுவாக இருந்தாலும், லிவிங் ரூமில், அனைவருக்கும் மத்தியில் அமர்ந்து பயன்படுத்து என்று சொல்லுங்கள். நான்கு பேர் முன்னிலையில் உன்னால் எதை பார்க்க முடிகிறதோ – பயன்படுத்த முடிகிறதோ, அதைமட்டுமே செய்ய வேண்டும் என்ற புரிதலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தர வேண்டும். அதுமட்டுமே எல்லா தீர்வுக்குமான முதல்படி.

மொபைல் மீதான இதுபோன்ற கட்டுப்பாடுகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும்போது, அவர்களுக்கு அப்பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் யாருக்கும் தெரியாமல் அதை பயன்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு அதிகம் வரலாம். முடிந்தவரை, குழந்தைகளுக்கு வீட்டு வேலைகள் சொல்லிக்கொடுப்பது – ஆக்டிவிட்டீஸ் சொல்லிக்கொடுப்பது – வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளை கற்றுத்தருவது போன்றவற்றை செய்யவும்.

மேலும், பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளிடம் ஏதாவது பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருங்கள். அவர்களிடம், நீங்கள் கதை கேளுங்கள். புதிதுபுதிதாக, விளையாட்டு யோசனைகளை கேளுங்கள். முடிந்தவரை நீங்களும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். முடியவில்லையென்றாலும், அவர்களை உங்கள் பார்வைக்குள் இருந்து பேசிக்கொண்டே செய்யுமாறு ஏதாவதொரு விளையாட்டை செய்ய சொல்லுங்கள். அது விளையாட்டாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை, படிப்பாகவோ – வீட்டுப்பாடமாகவோ – ஏதேனுமொரு வீட்டு வேலையாகக்கூட இருக்கட்டும். விஷயம், குழந்தை உங்களோடு இருக்க வேண்டும் – அப்போது உங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அவ்வளவே! இப்படி செய்யும்போது நிச்சயம் குழந்தைகள் மொபைலை தேட மாட்டார்கள்.

மொபைல் கட்டுப்பாடுகளைப் போலவே, குழந்தைகளுக்கு வார்த்தைக்கட்டுப்பாடுகள் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். அதற்கு முதலில், வீட்டில் கெட்ட வார்த்தைகள் பயன்பாட்டை பெற்றோர் தவிர்க்க வேண்டும். கோபம் அதிகமாகும்போது வெளிவரும் வார்த்தைகளையும் பெற்றோர் கட்டுப்படுத்தித்தான் ஆகவேண்டும். அதில், சமரசமே இல்லை” என்றார் அவர்.

குழந்தை வளர்ப்பில், பெற்றோருக்கு இருக்கும் சவால்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் புதுப்புது முகமூடிகளை அணிகிறது. அப்படி இந்த தலைமுறை பெற்றோருக்கு சவாலாக இருப்பது இணையம். இதையும் கடப்போம்!

- ஜெ.நிவேதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com