பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார். மேலும் அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' வழங்கப்படும்; அப்படி 'பாரதி இளங்கவிஞர் விருது' பெறும் ஒரு மாணவருக்கும் மற்றும் ஒரு மாணவிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதேபோல மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர். அவற்றில் சில:
‘உலகத் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைத்து 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடத்தப்படும்.
திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் 'திரையில் பாரதி' என்ற தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தப்படும்.
பாரதியின் பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து 'மனதில் உறுதிவேண்டும்' என்ற புத்தகமாக சுமார் 37லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சென்னையிலுள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் செய்தித்துறை சார்பில் ஒராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பாரதியின் உருவச்சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்கள், பூம்புகார் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்படும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க நிதியுதவி வழங்கப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்களில் பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகள் எழுதப்படும்.
பாரதியாரின் படைப்புகளை குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி நவீன ஊடகங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு மகாகவி பாரதியார் வாழ்வதாரப் பூங்கா என பெயர் சூட்டப்படும்.
பாரதி ஆய்வாளர்களான மறைந்த பெ.சூரன், ரகுநாதன், ரா.அ.பத்மநாபன், இளசை மணியன் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், சீனி விஸ்வனாதன், பேராசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கும் தலா 3 லட்சமும், அரசின் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்’
இந்த அறிவிப்புகள் குறித்து கவிஞர் பிறைசூடன் தெரிவிக்கையில், “ஒரு கவிஞனை அவன் நாடு போற்றினால், அந்த நாடு உன்னதமடையும். அந்தவகையில் மகாகவியை தாங்கிப்பிடிக்கும்போது, தமிழக அரசும் உன்னதமடைந்துள்ளது. இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த கவிஞர்களின் பாராட்டையும் நிச்சயம் பெறும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. கவிஞனாக மட்டுமன்றி, ஒரு தமிழராகவும் இந்த அறிவிப்பில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
இந்த அறிவிப்புகள் மட்டுமன்றி வருடம் ஒருமுறை மகாகவி விருது என்றொரு விருதையும், அதற்கு ஒரு கோடி வரையில் ஏதாவதொரு பரிசுத்தொகையும் அரசு யாராவது ஒருவருக்கு கொடுக்கலாம். அதைவாங்கும் ஒரு கவிஞனுக்கு, வாழ்நாள் முழுவதும் அது மிகப்பெரிய அங்கீகரமாக இருக்கும் என்பதாலேயே இதை சொல்கிறேன்.
முடிந்தால், மகாகவி என்ற பெயரில், திட்டங்கள் - வெவ்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிடலாம். இதுவே என்னுடைய ஆசையும் கோரிக்கையும்... இவையனைத்தையும்விட முக்கியமாக, பாரதியை அவருடைய நினைவு நாளின்போது மட்டுமன்றி, குழந்தைகள் மத்தியில் பாரதியை அன்றாடம் கொண்டு செல்ல வேண்டும். வருடம் முழுவதும், பாரதியை நினைவுகூற வேண்டும் அரசு என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
பத்திரிகையாளர் மாலன் கூறுகையில், “தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் என் நன்றி. இது தமிழுக்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம்; தமிழ் பற்றாளனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்றே நான் கருதுகிறேன். அரசின் இந்த அறிவிப்பை, வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன்” என்றார்.
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க இருக்கிறார். திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர்.