அனிதா ‘ஜீவித்’திருக்கிறாள்: நீட் தேர்வில் ஜீவித்குமார் சாதிக்க உதவிய ஆசிரியை..!

அனிதா ‘ஜீவித்’திருக்கிறாள்: நீட் தேர்வில் ஜீவித்குமார் சாதிக்க உதவிய ஆசிரியை..!
அனிதா ‘ஜீவித்’திருக்கிறாள்: நீட் தேர்வில் ஜீவித்குமார் சாதிக்க உதவிய ஆசிரியை..!
Published on

நீட் தேர்வில் இந்திய அளவில் அரசுப்பள்ளிகளில் முதல் இடம்பெற்ற தேனி மாணவர் ஜீவித்குமாரை, அடையாளம்கண்டு நிதிதிரட்டி கடந்த ஒருவருடமாக படிக்க வைத்தவர் சபரிமாலா.

இவர்தான் அனிதாவின் மரணத்தின்போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அரசுப்பள்ளி ஆசிரியர் பணியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவித்குமாரின் சாதனையைப்பற்றி சபரிமாலாவிடம் பேசினோம் “ அனிதாவின் மரணத்திற்கு பிறகு ஒரு அரசுப்பள்ளி மாணவரை நீட் தேர்வில் சாதிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது. அப்படி அரசுப்பள்ளி மாணவர்களை தொடர்ந்து தேடுகையில்தான் தேனிமாவட்டம் சில்வார்பட்டி மாணவர் ஜீவித் குமாரை, அப்பள்ளியின் பகுதிநேர ஆசிரியர் அருள்முருகன் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.  

ஜீவித்குமார் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற சூழலில் அவரை அருள் முருகன் நீட் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஒருமுறை அழைத்து சென்றுள்ளார். அங்கே பேசிய ஜீவித் “சிலபஸ் கொடுத்தால் படித்து நிச்சயம் நீட் தேர்வில் பாஸ் பண்ணுவேன்” என்று கூறியுள்ளார். இதனை கவனித்த ஆசிரியர் அருள்முருகன், உடனே அரசு நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் படிக்க சேர்த்துவிட்டார், ஆனால் பயிற்சி முடிவில்  ஜீவித்குமாருக்கு சோரியாஸிஸ் வந்ததுதான் மிச்சம். ஏனென்றால் அங்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை, சிலபஸ் இல்லை. வெறுமனே கடமைக்கு அரசு இந்த பயிற்சி மையத்தை நடத்துவதை உணர்ந்து அவன் நம்பிக்கையின்றி இருந்தான். இந்த சூழலில்தான் அருள்முருகன், ஜீவித்குமாரை என்னிடம் அறிமுகப்படுத்தினார். நான் முதலில் ஜீவித்தின் வீட்டிற்கு சென்றபோது அவர்குடும்பம் மிக எளிய நிலை இருப்பதை கண்டேன். அவரது அப்பா ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி.

அதன்பிறகு ஜீவித்குமாரிடம் பேசியபோது நிச்சயமாக நான் நீட் தேர்வில் 650 மதிப்பெண் பெறுவேன்.  நிச்சயமாக வென்று காட்டுவேன்.  மாணவர்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பதற்காவேனும் நான் நீட்டில் சாதனை செய்வேன் என்று என்னிடம் கூறினார்.

அதன்பின்னர் முழுமுயற்சியுடன் அந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டி, ஜீவித்தை தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்தோம். அவர் 12 ஆம் வகுப்புவரை தமிழ்வழியில் படித்தவர், ஆனால் அந்த பிரபலமான பயிற்சி மையத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து பெரும்பாலும் சிபிஎஸ்சி மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இருப்பினும் பயிற்சியின் முடிவில் நடந்த தேர்வில் அத்தனை மாணவர்களையும்  மீறி தமிழ் மீடியத்தில் படித்த ஜீவித்குமார் அந்த மையத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். ஆங்கிலவழியில், சிபிஎஸ்சியில் படித்தால்தான் நீட்டில் வெல்ல முடியும் என்ற பிம்பத்தை ஜீவித் அப்போதே உடைத்தான்.

ஒரு வருடம் மிகவும் கடினமாக படித்த காரணத்தால் தற்போது இந்திய அளவில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ஜீவித்குமார். அரசுப்பள்ளியில்தான் முதல் இடம் என்று இல்லை, அகில இந்திய அளவில் 1823 வது இடம் பிடித்துள்ளான், இது நிச்சயமாக மிகப்பெரிய சாதனை.

நீட் தேர்வினால் தமிழகத்தில் 18 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் முயற்சி செய்தால் வெற்றிபெறமுடியும் என்பதன் சாட்சியம்தான் ஜீவித்குமார். எங்களால் ஒரு ஜீவித்குமாருக்குத்தான் நிதிதிரட்டி படிக்க வைக்க முடிந்துள்ளது, ஆனால் இன்னும் எத்தனை ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் திறமையுடன் முடங்கியுள்ளனர் என்பதை நினைக்கும்போதே கண்ணீர் வருகிறது. எனவே தனியார் பயிற்சி மையத்திற்கு இணையான தரத்துடன் அரசு நீட் பயிற்சி மையங்களையும் உருவாக்கவேண்டும்.

நீட் தேர்வுக்கான சிலபஸை 10 வகுப்பு முடித்தவுடனேயே விருப்பப்படும் மாணவர்களுக்கு அரசு கொடுக்கவேண்டும். இரு ஆண்டுகள் மாணவர்கள் கவனத்துடன் படித்தால் இந்தியாவிலேயே அதிகம் பேர் தமிழக அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வாகும் சூழல் உருவாகும். ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தை நிரந்தரமாக உருவாக்கவேண்டும். அரசு கவனத்துடன் இதனை பரிசீலித்து நீட்டை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவவேண்டும்.

வரும் காலத்தில் அனிதா அகாடமி என்ற ஒன்றை உருவாக்க இருக்கிறோம். இதில் டெட் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஜீவித்குமார் இணைந்து தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வு பயிற்சியளிக்க உள்ளோம். அனிதாவின் மரணத்திற்கான நீதி என்பது அவரது கனவை நிறைவேற்றுவதுதான். அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவர்களாக மாறும் இலட்சியத்தை நிறைவேற்ற இது முதல் படி. ஜீவித்குமார் வழியாக அனிதா ஜீவித்திருக்கிறாள்” என்கிறார் உறுதியுடன்

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com