அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் மறைவை அடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இதேபோன்றதொரு சூழல், கடந்த 1987ல் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவின் போது ஏற்பட்டது. 1984ம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், 1987 டிசம்பர் 24ல் உயிரிழந்தார். இதையடுத்து தமிழகத்தின் தற்காலிக முதலமைச்சராக நெடுஞ்செழியன் பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராக ஜானகி பதவியேற்க வேண்டும் என்று எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ஆர்.எம். வீரப்பன் மற்றும் பொன்னையன் உள்ளிட்டோர் கூறினர். அதேநேரம், முதலமைச்சராக அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், மாநிலங்களவை எம்பியாகவும் இருந்த ஜெயலலிதா பதவியேற்க வேண்டும் என்று நெடுஞ்செழியன் தெரிவித்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டதாக ஜெயலலிதா அறிவித்ததால், ஜெ அணி, ஜா அணி என அந்த கட்சி இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
அதிமுக எம்எல்ஏக்கள் 97 பேர் ஜானகிக்கும், ஜெயலலிதா அணிக்கு 29 பேரும் ஆதரவளித்தனர். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி பதவியேற்றுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் ஜானகி தலைமையிலான அரசு 21 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எஸ்.எல். குராணா உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழகம் கண்டிராத வகையில், சட்டமன்றத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. மோதலை அடுத்து ஜானகி தலைமையிலான அரசு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில தினங்களில் அரசியல் சாசனத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்தார். இதையடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, 1989 ஜனவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரையில் ஓராண்டு காலம் அமலில் இருந்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்குமே ஒதுக்கப்படாமல் முடக்கப்பட்டது. இந்தநிலையில், ஜானகி தலைமையிலான அணி இரட்டைப் புறா சின்னத்திலும், ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும் தேர்தலில் களம்கண்டன. பிளவுபட்ட நிலையில் தேர்தலை அதிமுக சந்தித்ததால், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. எம்ஜிஆரால் பல ஆண்டுகள் ஆட்சியை இழந்திருந்த திமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஜானகி தலைமையில் களம் கண்ட ’ஜா’அணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வியைச் சந்தித்த நிலையில், போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வென்றது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுவதாக ஜானகி அறிவிக்க, ஜெயலலிதா தலைமையின்கீழ் அதிமுக ஒன்றிணைந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தையும் ஜெயலலிதா மீட்டார்.