மொழியை முற்காலத்தில் பயன்படுத்தியதற்கும் தற்காலத்தில் பயன்படுத்துவதற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்று தோன்றியிருக்கிறது. புதுப்புதுச் சொற்கள் தொடர்ந்து உட்புகுவது தற்காலத்து மொழிப்பயன்பாட்டின் இயற்கையாக இருக்கிறது. முற்காலத்தில் புதிய சொற்கள் உள்ளே வருவது இவ்வளவு விரைவில் நிகழ்ந்ததில்லை.
முற்காலத்து வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது? ஓரிடத்தில் நிலைத்த வாழ்க்கையாக இருந்தது. தம் வாழ்க்கை முழுவதும் சுற்றுவட்டாரத்து ஊர்களைத் தாண்டியிராத பெரியவர்கள் பலர். என் நண்பர் ஒருவர் தம் இருபதாம் அகவை வரைக்கும் திருப்பூர் சுற்றுவட்டாரத்து ஊர்களைத் தாண்டி அப்பால் செல்லாதவராக இருந்தார். அவரவர் மாவட்டத்துத் தலைநகரங்களாக விளங்கிய அருகூர்கள்தாம் அவர்கள் பார்த்த நகரங்கள்.
சென்னையைப் போன்ற நகரங்களை ஊர்ப்புறத்தவர்கள் வியந்து பார்க்கும் காட்சிகளை நம் பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். அன்றைய சென்னையே அப்படியிருந்தது எனில் இன்றைய சென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டா. புதிதாக உள்நுழையும் ஒருவர்க்கு இன்றைய சென்னையும் பெருவியப்பாகத்தான் இருக்கும். சென்னையே இவ்வாறிருக்கையில் பிற பெருநகரங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
இத்தகைய நிலைத்த வாழிடத்தவர்க்குப் புதிய சொல்லொன்று எப்போது வரும்? அவர் ஏதேனும் புதிய நிலப்பரப்பிற்குள் செல்லும்போது வரும். அல்லது புதிய நிலத்தவர்கள், ஊரினர் நம் ஊர்க்கு வரும்போது புதுச்சொல்லும் சேர்ந்து வரும். புதிய பொருளொன்று நம்மை வந்து சேர்கையில் அதற்குரிய புதிய பெயர்ச்சொல்லோடு வரும். புதிதாய் ஒன்று – அது பொருளாக இருக்கலாம், கருத்தாக இருக்கலாம், பிற பெயராக இருக்கலாம் – நம்மை அடைகையில் புதுச்சொல்லோடு வருகிறது. அச்சொல் பிறமொழிச் சொல்லாக இருப்பதும் இயற்கையே.
தமிழ் நிலத்திற்குள் புதிதாக ஒன்று வரும்போது தமிழல்லாத பிறமொழிச் சொல் ஒன்றும் வருகிறது. அவை யாவும் அறிவியல் கருவிகளின் பெயரால், புதிய புதிய கருத்தியல்களின் பெயரால், முன்னேற்றங்களின் பெயரால், பிறமொழிகளில் மட்டுமே தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்ட துறைசார் பொருள்களின் பெயரால் உள்ளே வரும். அந்தச் சொற்களுக்கு உரிய தமிழ்மாற்று தரப்படாமல் நம் மக்களும் தொடர்ந்து பிற மொழிச்சொற்களையே பயன்படுத்திக்கொண்டிருப்பர். இதுதான் பிறமொழிப் பெயர்ச்சொற்கள் இங்கே நுழைவதற்குக் கொண்ட முதல்வழி.
எரிபொருள் வரிசையையே பார்ப்போம். முதலில் விறகு எரிபொருளாக இருந்தது. விறகு, சுள்ளி, கட்டை, சருகு என்ற சொற்களும் இருந்தன. பிறகு கரி எரிபொருளாயிற்று. அது நிலத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டபோது நிலக்கரி ஆயிற்று. நெய்வேலியில் எடுக்கப்படுவது நிலக்கரி. அது பழுப்பு நிலக்கரி வகையைச் சார்ந்தது. நன்றாக எண்ணிப் பாருங்கள், நிலக்கரி என்ற சொல்லுக்கான ஆங்கிலச் சொல் இங்கே பரவியிருக்கிறதா?
பழுப்பு நிலக்கரி என்ற பொருளைத் தரும் ஆங்கிலச் சொல்லான ‘லிக்னைட்’ (Lignite) யாருக்குத் தரும்? ‘நெய்வேலி லிக்னைட் கார்பொரேசன்’ என்பதுதானே அந்நிறுவனத்தின் பெயரான NLC ? அந்தப் பெயர் பரவிவிடவில்லையே. ஏனென்றால் நமக்கு அப்பொருளுக்கான உரிய தமிழ்ச்சொல் உடனே ஆக்கப்பட்டுவிட்டது. பிறகு நீர்ம வடிவ எரிபொருள் வருகிறது. அது சீமை எண்ணெய். இன்னும் சிறப்பான மொழியாக்கத்தில் மண்ணெண்ணெய். மண்ணெண்ணெய் என்னே அருமையான சொல்! மண்ணெண்ணெய்க்குத் தமிழ்ச்சொல்லை ஆக்கிய நாம் பெட்ரோல் டீசல் என்று வந்தபோது ஏன் செயலிழந்தோம் ? நான் நல்லெரிநெய் (பெட்ரோல்), வல்லெரிநெய் (டீசல்) என்றேன். Fuel என்பதனை எரிநெய் என்கிறேன். நல்லெரிநெய் எரிநெய் வடிவில் தூயது. வல்லெரிநெய் வன்மையாக எரிந்து ஆற்றலூட்டுவது. பொருத்தம்தானே?
மணிலாக்கொட்டை இங்கே பயிரிடத்தொடங்கியபோது உரிய பெயர்ச்சொல்லை ஆக்கிவிட்டோம். வேர்க்கடலை. அது வேரில் காய்ப்பதால் அச்சொல்லை ஆக்கிக்கொண்டோம். நமக்கு வேர்ப்பலா என்கின்ற அழகிய முற்சொல் இருந்தது. அதன்வழியே வேர்க்கடலை என்ற சொல்லை ஆக்கிக்கொண்டோம். இன்னொரு சொல்லையும் கூடுதலாக ஆக்கினோம் - ‘நிலக்கடலை.’ அவ்வளவு ஏன்? உணவுப் பொருளாக வெங்காயம் உள்ளே வருகிறது. அக்காயானது உணவில் காரச்சுவையூட்டப் பயன்படுவது.
இனிப்பிற்குக் குளிர்த்தன்மையைப் போல, காரத்திற்கு வெப்புத் தன்மை உண்டு. அந்த வெம்மையைக் குறிக்குமாறு தோன்றியது வெம்மை + காயம் = வெம்காயம் = வெங்காயம். எந்தப் பெயர்ச்சொல்லோடும் அம் விகுதி சேர்த்துக்கொள்ளலாம். விளக்கு என்பதற்கு அம் விகுதி சேர்த்து விளக்கம் எனலாம். அவ்வாறே காய் என்பதும் அம் விகுதி பெறும். காயம் என்று ஆகும். வெங்காயம் என்ற தமிழ்ச்சொல் வந்துவிட்டது.
இவ்வாறு ஒவ்வொரு புதுப்பொருளும் உள்ளே பயன்பாட்டிற்கு வருகையில், நம் வாழ்க்கைக்குள் வருகையில், அதற்குரிய சொல்லைத் தொடர்ந்து ஆக்கி வந்திருக்கிறோம். அப்பொருள்களுக்கு வழங்கப்பட்ட பிறமொழிப் பெயர்களை நாம் அவற்றுக்குக் கருதியதில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் நிலைமை என்னவாக இருக்கிறது ? முன்னிலும் விரைவாக என்னென்னவோ பொருள்கள் உள்ளே வருகின்றன. கருத்தியல்கள் வருகின்றன. புதிய புதிய இளந்தலைமுறைச் சொற்கள் தோன்றுகின்றன.
ஆங்கிலத்தில் அவற்றின் முன்னெழுத்துகளை வைத்து அமைக்கும் சொற்கள் வருகின்றன. அவை அனைத்தையும் அப்படியே ஏந்திக்கொண்டோம். தமிழில் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாமல் அப்படியப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றை உடனுக்குடனே தமிழ்ச்சொல்லாக மாற்றி வழங்கவேண்டிய பொறுப்பிலுள்ள ஊடகங்கள், கல்வியகங்கள், மொழித்துறைகள், அரசினர் துறைகள் என யாவும் ஆழ்ந்து உறங்குகின்றன. அரசினர் குறிப்புகள், செய்திகள், எழுத்தாளர்கள் பாவலர்களின் எழுத்துகள் பேச்சுகள் என எல்லாமே தமக்குப் பொறுப்பில்லை என்பதுபோல் பிறமொழிச் சொற்களை அப்படியே எடுத்தாள்கின்றன. முறைதானா?