ஒவ்வொரு புதுவருடத்தின்போதும் சில தீர்மானங்களை நாம் எடுப்பதுண்டு. ஆனால் பலருக்கும் எடுத்த தீர்மானங்கள் அதே வேகத்தில் காற்றில் பறந்துவிடும். பெரும்பாலானோரால் எடுக்கப்படும் தீர்மானங்களில் ஆரோக்கிய பழக்கவழக்கங்கள் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு நிறைய பேருக்கு ஆரோக்கியம் குறித்த அக்கறை அதிகரித்திருக்கிறது. தினசரி ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதன் அவசியத்தை பலரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆனாலும் ஆரோக்கியம் குறித்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் பலர் தவறிவிடுகின்றனர். சில எளிய பழக்கவழக்க மாற்றங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி. ”ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஹெல்தி லைஃப்ஸ்டைலை செயல்படுத்த வழிவகுக்கும்” என்கிறார் அவர்.
1. முடிந்தவரை இயற்கை வடிவிலேயே உணவுகளை உண்ணுங்கள்
இதை கடைபிடிப்பது மிகவும் கடினம்தான். சமைத்தோ பதபடுத்தியோ சாப்பிடுவதைவிட சில உணவுகளை அப்படியே நேரடியாக சாப்பிடுவது சிறந்தது என்கிறார் அஞ்சலி. அதாவது ஜூஸாக குடிப்பதைவிட பழங்களை அப்படியே சாப்பிடலாம். முடிந்தவரை காய்கறிகளையும்கூட அரை வேக்காடகவே சாப்பிடலாம். முற்றிலும் சமைத்தோ, மசித்தோ மசாலாக்களை சேர்த்து சாப்பிடுவதைவிட இது சிறந்தது. காய்கறிகள் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை சுவைக்காக சமைத்து சாப்பிடும்போது அதில் சிறிது தேங்காயை சேர்ப்பது சிறந்தது. இல்லாவிட்டால் வெங்காயம், குடை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளலாம்.
2. தினமும் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சி அவசியம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் இயக்கம் எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். தினசரி குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனை தினசரி பழக்கமாக்கி கொள்வது சிறந்தது. கார்டியோ மற்றும் யோகா பயிற்சிகளை தவிர பிற உடற்பயிற்சிகளும் தேவை. எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிகள் உடல் கட்டமைப்பை பராமரிக்க உதவும்.
3. சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்
சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே உணவு பழக்கங்களை முறையாக கடைபிடிக்க இயலாதவர்கள் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ மற்றும் ஜிங்க் போன்றவற்றை எடுத்துக்கொள்வது மிகமிக அவசியம் என அறிவுறுத்துகிறார் அஞ்சலி. ஆனால் அவை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.