யார் இந்த சென்னை ட்ரெக்கிங் கிளப்? அனுமதியின்றி ட்ரெக்கிங்கா!

யார் இந்த சென்னை ட்ரெக்கிங் கிளப்? அனுமதியின்றி ட்ரெக்கிங்கா!
யார் இந்த சென்னை ட்ரெக்கிங் கிளப்? அனுமதியின்றி ட்ரெக்கிங்கா!
Published on

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்றம் சென்ற குழுவினர் சிக்கிக் கொண்டனர் என்ற செய்தி இன்று மாலை வெளியாகியது. செய்தி வெளியாகி சிறிது நேரத்திலே, விஷயம் காட்டுத்தீயாக பரவியது. ஏனெனில் சிக்கியவர்கள் 40 மாணவிகள் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் படிப்படியாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்ததும், சிக்கியவர்கள் சென்னையை சேர்ந்த 22 பெண்கள் உட்பட 24 பேர் என்பதும், திருப்பூரைச் சேர்ந்த 12 பேர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் குரங்கணி என்ற வனப்பகுதியில் மலையேற்றம் சென்றவர்கள். 

போடியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தப்பகுதியில் மலையேற்றம் சென்ற போது, வனப்பகுதியில் திடிரென காட்டுத் தீ பரவியுள்ளது. காட்டுத்தீயில் மலையேற்ற குழுவினர் சிக்கிக்கொண்டதை அடுத்து, அவர்களை காப்பாற்ற உள்ளூர்வாசிகள் வனப்பகுதிக்குள் விரைந்து சென்றனர். தகவலறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீட்பு பணிகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவிட்டார். இதற்கிடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பால்தேவ் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்தனர். சற்று நேரத்தில் பரபரப்பு அதிகரிக்க பணிகளை தீவிரப்படுத்துமாறு நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்த அறிவுரைகளை வழங்கிய வண்ணம் இருந்தார். ஹெலிகாப்டர்களும், கமாண்டோக்களும் குரங்கணி வனப்பகுதிக்கு விரைந்தனர்.

எனினும், இரவு நேரம் என்பதால் மீட்புப்பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர்கள் திரும்பின. தீயின் வேகம் ஒருபுறம் அதிகரிக்க, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட 15 பேர் மலையடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் போடி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இடத்திற்கு வனத்துறை அமைச்சர் செல்லுமாறு கூறினேன். தற்போது தான் தகவல் கிடைத்தது. நான் தகவல் கூறுவதற்கு முன்பே வனத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். வனத்துறை அமைச்சர் சென்று, எத்தனை மீட்கப்பட்டுள்ளனர், மீட்கப்பட்டவர்களின் நிலை என்ன, காட்டுத்தீயில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்கிறார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பேசப்பட்டு, ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது. 

வனப்பகுதி என்பது மிகப்பெரிய நிலப்பரப்பு. வனத்துறை அதிகாரிகளை தவிர வேறு யாரும் அங்கு செல்லமுடியாது. இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என இன்னும் தெரியவில்லை. வனப்பகுதியில் யார் செல்கிறார் என்பதை எளிதில் கண்டறிய முடியாது. மர்ம நபர்கள் சிலரால் இதுபோன்ற காட்டுத்தீ ஏற்படுகிறது. வருங்காலத்தில் வனத்துறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்” என்று கூறினார்.  

பின்னர் மலை மேல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 பேர் கொண் மருத்துவக்குழு சென்றுள்ளது. முதலுதவி செய்யும் மருத்துவ சாதனங்கள் சென்ற அந்தக்குழு, மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவிகளை செய்தது. மலையில் இருந்து டோலி மூலம் வேட்டை தடுப்பு பாதுகாவலர்கள் உதவியுடன், மீட்கப்பட்டவர்கள் மலைக்கு கீழ் பகுதியில் கொண்டுவரப்பட்டனர். கீழ் பகுதியில் 13 ஆம்புலன்ஸ் தயாராக இருந்தன. 

மீட்கப்பட்டு போடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயலட்சுமி என்ற பெண் செய்தியாளரிடம் பேசுகையில், “சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலம், ட்ரெக்கிங் வந்தோம். மதிய உணவு சாப்பிடும் போது தீ வந்தது. எங்களால் எங்கேயும் தப்பிக்க முடியவில்லை. தீ பரவியவுடன் மேலே செல்ல முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. பாதி பேர் பாறைக்கு இடையில் குதித்துவிட்டோம். பாறைக்கு அடியில் குதித்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளனர். மற்றவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

நாங்கள் 24 நான்கு பேர் வந்தோம். 22 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வந்தோம். இன்னும் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. நாங்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். மொத்தம் 27 பேர் வந்தோம், ஆனால் 3 பேர் முன்பே ஜீப்பில் சென்றுவிட்டார்கள். அதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. மலைக்கு கிழே முன்னதாக சென்றுவிட்டனர். நேற்று குரங்கணி மலைப்பகுதியில் இருந்து கொழுக்கு மலை ஏறினோம். இன்று இறங்கினோம்.” என்று கூறினார். இதன்மூலம் சென்னை ட்ரெக்கிங் கிளப் தான் இந்த குழுக்களை மலைக்கு ட்ரெக்கிங் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. 

சென்னை ட்ரெக்கிங் கிளப் பிப்ரவரி 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வேன் கெய்ட் என்பவர் இந்த கிளப்பை நிறுவியுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் 2008ஆம் ஆண்டு சிறு சிறு ட்ரெக்கிங்கை தொடங்கிய இந்த நிறுவனத்தில், கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கோனோர் சேர்ந்துள்ளனர். அதன்படி தற்போது 40 ஆயிரம் உறுப்பினர்கள் இந்த கிளப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் 150க்கும் மேற்பட்ட கார்ப்ரேட் கம்பெனிகளின் பணியாளர்கள், இந்த கிளப்பின் கீழ் தூய்மை பணிகளை அவ்வப்போது மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவர்கள் மேற்கொள்ளும் ட்ரெக்கிங் அனைத்தும் முறையாக அனுமதி பெறப்பட்டதா? என்ற கேள்வி தான், தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் காட்டுத்தீயில் சிக்கியவர்கள், மாணவிகள் என்று முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களும் உள்ளதாக கூறப்பட்டது. அவர்கள் மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள் எனப்பட்டது. ஆனால் மீட்கப்பட்டவர்களை பார்த்தால், பெரும்பாலும் சிறுவர்கள். இதனால் அனைவரின் சந்தேகமும் அதிகரித்தது. பின்னர் வெளியான தகவல்களில், இது மகளிர் தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் அனுப்பப்பட்ட ஒரு ட்ரெக்கிங் என்பது தெரியவந்தது. இருப்பினும், அது எப்படி கோடைக்காலம் வரும் நேரத்தில் சிறுவர்களுடன் செல்லும் இரண்டு குழுவிற்கு வனத்துறை அனுமதி வழங்கியிருக்கும் என கேள்விகள் எழும்பியது.


 
இதற்கிடையே இது முறையாக அனுமதி பெறாத ஒரு ட்ரெக்கிங் தான் என்று, நம் புதிய தலைமுறை டிஜிட்டல் குழுவுக்கு நம்பத் தகுந்த அதிகாரி ஒருவரிடம் இருந்து தகவல் கிடைத்தது. அவர் கூறியபோது, “இது முறையாக அனுமதி பெறாத ஒரு ட்ரெக்கிங். இதை சென்னை ட்ரெக்கிங் என்ற நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. இதில் பெரும்பாலும் 25 வயது இளம்பெண்களே பங்கேற்றுள்ளனர். சிலர் தீக்காயம் அடைந்துள்ளனர். இது ஒரு வருந்தத்தக்க விஷயம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது இந்த சம்பவம் தொடர்பாக முழுவிசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி விசாரணை செய்யப்பட்டால் இது முறையான ட்ரெக்கிங்கா? அல்லது முறையற்றதா? போன்ற கேள்விகளுக்கும், எத்தனை ட்ரெக்கிங்கள் முறையின்றி நடப்படுகிறது என்பது குறித்தும் தெரியவரும். கோடைக்காலங்கள் என்றாலே வனப்பகுதிகள் ஆபத்தானது என்ற நிலையில், இதுபோன்ற ட்ரெக்கிங் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவும், சோகமான நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com