தீர்த்தமலை கோவிலில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் பக்தர்கள்

தீர்த்தமலை கோவிலில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் பக்தர்கள்
தீர்த்தமலை கோவிலில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் பக்தர்கள்
Published on

குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர். 

இந்தியாவிலேயே 1000 வருடம் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான தீர்த்தகிரீசுவரர் ஆலயம்,  தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்த மலையில் அமைந்துள்ளது. தீர்த்தகிரீசுவரர் திருக்கோவில், தரைப்பகுதியிலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மலையிலிருந்து ஒரே அளவில் தண்ணீர் வருவது அதன் சிறப்பு அம்சமாகும்.

தீர்த்தமலையில் மேற்கே வாயு தீர்த்தமும், வருண தீர்த்தமும் அமைந்துள்ளன. கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கில் அனுமந்தீர்த்தமும், தெற்கில் எமதீர்த்தமும் அமைந்துள்ளன. தீர்த்தமலையின் உச்சியில் வசிஷ்டதீர்த்தம் உள்ளது. இது தவிர தீர்த்த மலையில் ராமர், கௌரி, அகஸ்தியர், அக்னி, அகஸ்திய உள்ளிட்ட 5 தீர்த்தங்கள் வருகின்றன. இந்த தீர்த்தங்கள் அதிசயமிக்க மலையில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலிருந்து உருவாகி வருகிறது. இது எங்கு உருவாகின்றது என்பது யாராலும் அறியமுடியவில்லை. மேலும் அதிகப்படியான மழை மற்றும் கடும் வறட்சி என எந்த பருவநிலையாக இருந்தாலும், தீர்த்தத்தின் அளவு, அதிகரிக்காமலும், குறையாமலும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இந்த தீர்த்தங்கள் மூலிகை குணம் கொண்டவை.

தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்களில் குளித்தால் பினி நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும் என்பதாலும், பாறைகளின் இடுக்குகளில் வரும் தீர்த்ததினை கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 
மேலும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்பதால், தோஷம் கழிக்க அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மலைக்கு செல்ல சுமார் 7 கி.மீ தூரம் செங்குத்தாக நடந்து செல்ல வேண்டும். இதனால் மலையின் நடைப் பாதையில், படிகட்டுகள், மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிமெண்ட் சாலைகள் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதில் நடப்பதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் மலையில் நடக்க முடியாதவர்கள் வழியில் அமர்ந்து, சிறிது ஓய்வெடுக்க நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமருவதற்கு இருக்கைகள் இல்லை, தாகத்திற்கு வழியில் குடிநீரும் இல்லை. மனிதர்கள் மட்டுமல்லாது அங்குள்ள குரங்குகளுக்கு கூட குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. மலை உச்சிக்  கோவிலில் வரும் தீர்த்தங்களில் குளிக்க கட்டாயமாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்து அறநிலைய துறை சார்பில் கட்டணம் வசூல் கிடையாது. ஆனால் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. கோவிலில் உள்ள தீர்த்தகிரீசுவரர் மற்றும் வடிவாம்பிகை சாமி தரிசனம் செய்யும் இடத்தில் தேங்காய், மாலை, அர்ச்சனை செய்தல் மற்றும் முடி காணிக்கை செய்ய மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் முடி காணிக்கை செலுத்துமிடத்தில் அரசு கட்டணம் இல்லாமல், தனியாக ரூ.40 வசூல் செய்யப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கு போதிய இடவசதி இல்லை. பெண்களுக்கு குளியலறையும், கழிவறையும் இருந்தும் உரிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வெளியூர்களிலிருந்து சிலர் இரவு நேரங்களில் வருகின்றனர்.

அவர்கள் பாதுக்காப்பாக வந்து செல்ல மின்விளக்குகள் இல்லை.  தற்பொழுது தீர்த்தமலையில் மாசி மாத தேர் திருவிழா நடைபெறவுள்ளது.  எனவே பொதுமக்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி இந்து அறநிலைய துறையினர்,  குடிநீர், சாலை, மின்சாரம், கழிவறை மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும், 24 மாணி நேரமும் கோவில் திறந்து பூஜை செய்யவும், பொதுமக்களிடம் கட்டாய கட்டண வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மண்டல இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் நித்யாவிடம் கேட்டபோது, தீர்த்தமலை மேல் செல்லும் பாதை சீரமைக்க வனத்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பாதை சீரமைக்கப்படும். மேலும் பெண்கள் உடை மாற்றுவதற்கான அறை கட்ட விரைவில் பணி தொடங்கப்படவுள்ளது. மலையின் மேல் உள்ள கழிவறை மற்றும் குளியலறை உரிய முறையில் பராமரித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். மேலும் குளிக்கு இடத்தில் கட்டணம் வசூல், முடி காணிக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

(படைப்பு: புதிய தலைமுறை செய்தியாளர் தருமபுரி விவேக் ஆனந்தன்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com