கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்கள்... ‘செக்’ வைக்கும் கொரோனா!!

கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்கள்... ‘செக்’ வைக்கும் கொரோனா!!
கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்கள்... ‘செக்’ வைக்கும் கொரோனா!!
Published on

உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக
திரையரங்குகிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என திரைத்துறையினர் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. வழக்கமாக நடக்கும் பணிகள் எதுவும் நடக்காமல் தடைபட்டு நிற்கின்றன. பல நாடுகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், கூகுள் போன்ற பல நிறுவனங்களின் வர்த்தக நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது செய்திகள் வெளியாகியுள்ளன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, கூட்டத்தை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்வதில்லை. இதனால், சின்னச்சின்ன கடைகளுக்குக் கூட வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, கோழி இறைச்சியால் கொரோனா பரவுவதாக கிளம்பிய வதந்தியால் இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒன்றாகக் கூடக் கூடதென்பதால் திரையரங்குகளை மூட சில மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. வணிக நிறுவனங்கள்,
பல்கலைக்கழகங்களை சில மாநிலங்கள் மூடியுள்ளன. கேரளா, டெல்லியில் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கேரள எல்லை
மாவட்டங்களுக்கு திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது வெளியான திரைப்படங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால் இனி வெளியாகப்போகும் திரைப்படங்களுக்கும் கொரோனா பாதிப்பையே உண்டாக்கும் எனத் தெரிகிறது.

சென்னை இந்திய சினிமாவில் தமிழ் திரைத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வருடத்திற்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் தமிழ் திரைத் துறைக்கு கோடை விடுமுறை காலம் மிக முக்கியமான ஒன்று. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்தான் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகும். கோடை விடுமுறை காரணமாக திரையரங்குகள் குடும்பங்களால் நிரம்பும். எனவே குடும்ப ரசிகர்களை எதிர்பார்க்கும் திரைப்படங்கள் எல்லாம் கோடை விடுமுறையைத் தான் குறிவைக்கும். இப்படி எதிர்வரும் கோடை விடுமுறையை பல திரைப்படங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத கொரோனா வந்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு கோடை காலம் திரைத்துறையினருக்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்தான் இதற்கு காரணம்.
கொரோனா பீதி காரணமாக திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர், சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று போன்ற படங்கள் திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை என்றால் மற்ற படங்களின் வெளியீட்டிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கினால் தான் சினிமாவின் எதிர்காலம் சீரடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com