எல்லாம் தயாரா?.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...? கோரிக்கைகள் என்ன?

எல்லாம் தயாரா?.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...? கோரிக்கைகள் என்ன?
எல்லாம் தயாரா?.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...? கோரிக்கைகள் என்ன?
Published on

கொரோனாத்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பிரச்னையைச் சந்தித்தனர். அதனைக் கருத்தில் கொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசு தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்டோபார் மாதத்திற்கான ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்றைக்கு முதல்வர் அடுத்தக்கட்ட தளர்வுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாத்துறையில் படப்பிடிப்பு, அதற்கு பிந்தையப் பணிகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதியளித்த அரசு, திரையரங்குகள் திறப்பதற்கு மட்டும் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. ஆகையால் இன்று அறிவிக்கப்படும் தளர்வுகளில் அதற்கு முக்கிய இடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திரையரங்குளின் நிலை என்னவாக இருக்கிறது. பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு திரையரங்குகள் என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது போன்றவற்றை சென்னை ரோகினி திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம் மற்றும் கமலா திரையரங்கு மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினோம்.

ரோகினி திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம்

திரையரங்கின் நிலை தற்போது எப்படி இருக்கிறது?

தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் திரையரங்கை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகம் செய்துள்ளது.

கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இந்த இழப்பை எப்படி ஈடு செய்ய உள்ளீர்கள்?

எங்களால் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. அரசாங்கம்தான் எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை. இப்போது மட்டுமில்லை எந்த காலத்திலும் திரையரங்குகளுக்கு அரசாங்கம் எந்த சலுகைகளையும் அளித்தது இல்லை. ஆகையால் இந்த இழப்பை நாங்கள் தான் தனிப்பட்ட முறையில் சமாளிக்க வேண்டும்.

அடுத்தமாதம் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. அதற்காக ஏதேனும் படங்களை திரையிடுவதற்கான திட்டம் இருக்கிறதா?

திரையரங்கை திறப்பதற்கான அறிவிப்பு வெளியான பின்னரே, அது குறித்தான பேச்சுவார்த்தையில் நாங்கள் ஈடுபட வேண்டும்.

50 சதவீத பார்வையாளர் அனுமதியானது திரையரங்கை செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துமா?

பொதுவாக வார நாட்களில் திரையரங்கிற்கு 30 அல்லது 40 சதவீதத்திற்கு மேல் மக்கள் வருவதில்லை. ஆகையால் வார நாட்கள் எங்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. ஆனால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திரையடப்படும் 5 காட்சிகளில் இந்த எண்ணிக்கையானது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். லாபத்தில் 20 முதல் 30 சதவீதம் இழப்பு ஏற்படும். ஆனால் வேறு வழியில்லை. அரசு விதிமுறைகளுக்கு நான் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும்.

அரசு திரையரங்கில் கொரோனா அதிகமாக பரவும் என நினைக்கிறது. அப்படியில்லை என்பது எங்களுடைய கருத்து. அதை நாங்கள் அரசாங்கத்திடம் பலமுறை முன்வைத்திருக்கிறோம். வரும் காலத்தில் 50 சதவீத தளர்வானது 75 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் என்ன விதமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

மக்கள் தைரியமாக திரையரங்கிற்கு வரலாம். ஏனெனில் திரையரங்கு கட்டிடம் 30 அடிக்கும் மேலே இருக்கிறது. விமானத்தில் 3 மணி நேரம் பயணம் செய்கிறார்கள். அங்கு கொரோனா பரவவில்லை. இங்கு அதைவிட குறைவான நேரமே மக்கள் இருக்கப் போகிறார்கள்.

திரையரங்கிற்குள் நுழையும் முன்னர் வெப்பமானி கொண்டு பார்வையாளர் உடலின் வெப்பநிலை சோதனை செய்யப்படும்.

கிருமிநாசினி தெளிக்கப்படும்.

சமூக இடைவெளியுடன் இருக்கைகளில் அமர்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கமலா திரையரங்கு மேலாளர் கூறும் போது “ திரையரங்குகள் திறப்பதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், திரையரங்கை இயக்குவதற்கு நாங்கள் முழு தயார் நிலையில் உள்ளோம்.” என்றார்.

50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களை திரையரங்கில் அமர வைத்தால் திரையரங்கை போதுமான லாபத்துடன் இயக்க முடியுமா என்ற கேள்விக்கு அறிவிப்புகளில் என்ன விதமான தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது என்பதை பொறுத்துதான் அது குறித்தான விளக்கத்தை அளிக்க முடியும் என்றார்.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com