ஒரு இயக்குநர் தன் படைப்பை உள்ளது உள்ளபடி போல உருவாக்க முடியாத சூழல் இப்போதும் இந்திய திரையுலகில் இருக்கிறது. அது பாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி இதுதான் நிலை. ஒரு இயக்குநர் தன் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி, நடிகர் நடிகையிடம் சொல்லி இறுதியாக சென்சாரிடம் போராடுவது வரை, ஒரு படைப்பு பெரிய திரைக்கு வருவதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது. இந்தச் சிரமத்தை எல்லாம் தாண்டி பின்பு ரசிகர்களிடையே படம் வெற்றிப்பெற வேண்டும்.
ஆனால் இப்போது இவ்வளவு சிரமப்படத் தேவையில்லை, நீங்களே சொன்ன நினைத்த கதையை எந்தவித சிரமமின்றி வெப் சீரிஸ் வகையில் இணையத்தில் சொல்லலாம். இதற்கு உங்களுக்கு நெட் பிளிக்ஸ், யூடியூப் இணையதளங்கள் கை கொடுக்கும். ஆம், நீங்கள் நினைத்ததை எடுக்கலாம். பாலியல் காட்சிகள், வன்முறை காட்சிகள் என உள்ளது உள்ளபடியே அப்பட்டமாக சென்சார் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம். இதில் யுடியூபுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் நெட்பிளிக்ஸ்-க்கு அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை.
நிர்வாண காட்சியோ அல்ல பாலியல் உறவு காட்சிகளை அப்பட்டமாக காட்சிப்படுத்தி படத்தில் சேர்க்கலாம். இந்தச் சுதந்திரம் படைபாளிக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம், ஆனால் இந்தச் சுதந்திரம் வரம்புக்கு மீறி சென்றுக்கொண்டு இருப்பதாக தொடர்ந்து வெப் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகத் தெளிவாகவே புரியும். இப்போது அண்மையில் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியான வெப் சீரிஸ்கள் "லஸ்ட் ஸ்டோரிஸ்" மற்றும் "சேக்ரட் கேம்ஸ்".
இந்த இரண்டு வெப் சீரிஸ்களிலும் நடித்தவர்கள் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள். இதில் "லஸ்ட் ஸ்டோரிஸ்" நடித்தவர்கள் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மணிஷா கொய்ராலா, பூமி பெண்டேகர் மற்றும் நேகா தூபியா. இந்த லஸ்ட் ஸ்டோரிஸ் கதை பெண்களின் பாலியல் ஆசைகள், அதை எவ்வாறு தீர்த்துக்கொள்கிறார்கள், கணவரிடம் பாலியல் வேட்கையை தீர்த்துக்கொள்ளாத நிலையில் அவர்கள் எவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதே கதையம்சம். லஸ்ட் ஸ்டோரிஸில் இருக்கும் ஒரே ஆறுதல் அதில் நிர்வாண காட்சிகள் இடம் பெறவில்லை. ஆனால் அதனை மிஞ்சும் வகையில் பாலியல் உணர்ச்சிகளை சீண்டும் காட்சிகள் எக்கச்சக்கம்.
அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோகர் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் இயக்கிய நான்கு குறும்படங்களின் தொகுப்பே லஸ்ட் ஸ்டோரிஸ். இந்தியப் பெண்களின் காமம்தான் படத்தின் மையக் கரு, ஆனால் இதனை வெறும் இரண்டாம் தர படங்களில் வரும் காலம்காலமாக நாம் பார்த்து கேட்டு படித்து வந்தக் காமக் கதையைதான் படமாக எடுத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது லஸ்ட் ஸ்டோரிசை மிஞ்சும் வகையில் வெளிவந்துக் கொண்டு இருக்கிறது "சேக்ரட் கேம்ஸ்" எனும் வெப் சீரிஸ்.
இந்த சீரிஸில் சைஃப் அலி கான், நவாஸூதின் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து. ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது. இது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், கேங்க்ஸ்டர் தலைவனுக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டமே கதை. ஆனால், இதில் முழு நிர்வாண காட்சிகள் பாலுறவு காட்சிகளும் அப்பட்டம். இப்படியாக போகின்றது பாலிவுட்டில் இருந்து வெளியாகும் வெப் சீரிஸ்கள். தமிழில் கூட இதுபோன்ற வெப்சீரிஸ்கள், குறும்படங்கள் யுடியூப்பில் வெளியாகின்றன. ஆனால் அதில் பாலியல் தொடர்பான காட்சிகள் "லட்சுமி" என்ற குறும்படத்தை தவிர வேறு ஏதும் பரபரப்பாக பேசப்பட்டது இல்லை.
நெட்பிளிக்ஸ் போன்ற தளங்கள் பல நல்ல படைப்புகளையும் அவ்வப்போது நமக்கு தறுவதில் தவறுவதில்லை. ஆனால், கட்டுபாடற்ற சுதந்திரம் சென்சார் இல்லாத நிலை இதுபோன்ற பாலியல் உணர்வை அப்பட்டமாக காட்டும் தைரியம் பல இயக்குநர்களுக்கு வந்துள்ளது. இந்திய சினிமாவில் பாலியல் தொடர்பான சினிமாக்களை ஏற்கெனவே சிலர் வெற்றிகரமாக கையாண்டு இருக்கிறார்கள். மலையாள திரையுலகில் அடூர் கோபாலகிருஷ்ணனின் படைப்புகளே இதற்கு உதாரணம். மேலும் பாலுமகேந்திரா, கே.பாலசந்தர் ஆகியோர் பாலியல் தொடர்பான படங்களை மிகவும் கவனமாக கையாண்டு இருப்பார்கள்.
பாலியல் விஷயங்களை திரைப்படங்களில் கையாள வாழ்க்கையின் மீது தெளிந்த, பக்குவமான பார்வையும் நுட்பமானத் திரை மொழியும் தெரிந்திருக்க வேண்டும். இல்லெயென்றால் இரண்டாம் தர படங்களுக்கு இணையாக சென்றுவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. மேலும் இது போன்ற படங்களை பார்க்கும் நம் பார்வையாளர்கள் உண்மையில் பக்குவமடைந்து இருக்கிறார்களா ? ஏற்கெனவே பாலியல் வன்கொடுமைகள் வட இந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற படங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது செல்போனில் ஒரு மாதம் சப்ஸ்கிரிப்ஷன் இலவசத்தோடு, பள்ளி மாணவர்கள் கூட நெட்ப்ளிக்ஸை டவுன்லோடு செய்து வெப் சீரிஸ்களை பார்க்கலாம். படைப்பாளிக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு சமூக உணர்வும் அக்கறையும் முக்கியம். ஒரு படத்தில் எது திணிக்கப்பட்ட காட்சி எது திணிக்கப்படாத காட்சி என நாம் பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ளலாம். அதன்படி "லஸ்ட் ஸ்டோரிஸ்" மற்றும் "சேக்ரட் கேம்ஸ்" படத்தில் வரும் பாலியல் தொடர்பான காட்சிகள் தேவையற்றதாகவே தோன்றுகிறது. இப்படியே சென்றால் வெப் சீரிஸ்களுக்கும் சென்சார் கத்திரிகள் வெட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.