மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் முறையே 15 மற்றும் 50 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீடாக மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழக அரசு சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என என அதிமுக- திமுக - திராவிடர் கழகம் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு இந்த ஆண்டு நிச்சயம் முடியாது என உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. இதைத்தொடர்ந்து ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50% இட ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லாருடைய அரசியல் கட்சியினரும் முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. அவர்கள் சொல்லும் காரணமும் கேள்விக்குறியாத்தான் இருக்கிறது. அதாவது மருத்துவ கவுன்சிலின் சார்ட் எல்லாம் தயார் நிலையில் உள்ளது. திரும்ப மாற்ற முடியாது என மத்திய அரசு தெரிவிக்கிறது. இப்போது இருக்கும் டெக்னாலஜியில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.
ஆனால் உச்சநீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை கண்டிப்பாக மதிக்க வேண்டும். அடுத்த ஆண்டில் இருந்தாவது தமிழக மாணவர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 50 கல்லூரிகள் உள்ளன. அதனால் நமக்கு சாதமாக இருக்கும் என்றுதான் எதிர்ப்பார்த்தோம். இந்த வருடம் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் நன்றாகவே செய்திருந்தனர். அதனால் இந்த வாய்ப்பு கொடுத்திருந்தால் இன்னும் 50 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக எம்பி வில்சன் கூறுகையில், “சென்னை உயர்நீதிமன்றம் கூறிய போதே திமுக இட ஒதுக்கீடு குறித்து முறையிட்டது. அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு இப்போது இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என தெரிவிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் முடிவெடுத்து குழு அமைத்து அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. ஆனால் அதை செய்ய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. குழுவை சரியாக அமைத்திருந்தால் இந்நேரம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அதை மத்திய மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், “வில்சனின் கூற்று தவறானது. மற்ற மாநிலங்களை விடுத்து தமிழகத்திற்கு மட்டும் இதுபோன்று இட ஒதுக்கீடு கொடுப்பது இயலாது என்ற கருத்தைதான் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. சமூக நீதி கொள்கைக்கு மாற்றாக ஈடுபடக்கூடாது என்பதைதான் அதிமுக அரசு வலியுறுத்தி வருகிறது.
உச்சநீதிமன்றம் தற்போது வழங்க முடியாது என கூறியிருக்கிறது. இதை அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துச்செல்லலாம் என தமிழக அரசு ஆலோசித்து முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.