இந்த ஆய்வை மேற்கொண்ட நபர்களுள் ஒருவரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான பிரபாகரன் வீர அரசு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மாசு வெளியேறுவது குறித்து பேசுகையில் “"மும்பை, டெல்லி, பெங்களூருவை விட அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று மாசினால் ஏற்படும் அகால மரணங்கள் சென்னையில் தான் அதிகமாக உள்ளது. சென்னையின் பல இடங்களில் நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவுகளை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் சென்னை போன்ற நகரங்களில் மக்களின் ஆயுட்காலம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை குறைவதாக AQLI ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
சென்னை, கடலூர், தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசைக் குறைப்பதற்கு பல்வேறு துறை சார்ந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசரத் தேவைவையாகும். காற்று மாசைக் குறைக்க நம் அரசுகள் செலவு செய்யும் நிதி மக்களின் ஆரோக்கியத்திற்கு செய்யப்படும் முதலீடு என்ற அடிப்படையில் அனல்மின் நிலையங்களில் காற்று மாசு குறைப்புக் கருவிகளை பொறுத்துவதின் மூலமும், பழைய மற்றும் திறன் குறைந்த அனல்மின் நிலையங்களை .மூடிவிட்டு பரந்துபட்ட புதுப்பிக்கதக்க ஆற்றலுக்கு மாறுவதும்தான் இதற்க்கான தீர்வாக அமையும்"எனக் கூறினார்.