கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’ ஆகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’ ஆகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீடுப்படி, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கபடுவதாக கூறி, அதற்கான விளக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணி நேரங்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் விளக்கமளித்தார்.
ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் மின்சார ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யாததால், ஒவ்வொரு வீடுகளிலும் அவர்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இது போன்ற சூழலில், மின்சார சட்ட விதிகளின் அடிப்படையில், முந்தைய மாத கட்டணத்தையே முதல் மாதம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அடுத்த மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியோடு முந்தைய கட்டண தொகையின் அடிப்படையில் நிர்ணயித்ததாகவும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், “அரசு தரப்பு வாதத்தின் படி, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும், முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதும் தெளிவாகிறது. நுகர்வோர் முதல் 100 யூனிட்க்கான கட்டண சலுகையை பெற 4 மாதங்களுக்கான மின் கணக்கீட்டை, இரண்டு இரு மாதங்களுக்கு என பிரிப்பது அவசியமாகிறது. இல்லாவிட்டால் அந்த முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் சலுகையை பெற இயலாது என்பதும் தெரிய வருகிறது.
மின் கட்டணத்தை நிர்ணயிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் அடிப்படையில், மின் கணக்கீடு செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. நியாயமான முறையிலேயே மின் கணக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மின் நுகர்வு பயன்பாடு அதிகமாக தான் இருக்கும் என்பதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். ஒரு கோடியே 75 லட்சம் மின் நுகர்வோர் உள்ளநிலையில் மனுதாரர் கூறும்படி கணக்கீடு செய்ய இயலாது. கொரோனா காரணமாக வீடுகளுக்கு சென்று மின் அளவீட்டை கணக்கிடாமல் போனதற்கு வாடிக்கையாளர்கள் காரணம் அல்ல என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது.
கொரோனா ஊரடங்கை சமாளிக்க அரசுக்கு நிதி தேவை உள்ள நிலையில், மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும், கட்டணங்களையும் முறையாக செலுத்த வேண்டும். மின் கணக்கீட்டை பொறுத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட நடைமுறையில் குற்றம் கண்டுபிடிக்க இயலாது. மின்சார வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது என்று கூற எந்த காரணங்களும் இல்லை. போதுமான விளக்கங்கள் மின்வாரியம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களும் பயனடைந்துள்ளனர். ஒருவேளை மின் கணக்கீடு செய்ததில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால், வாடிக்கையாளர்கள் சட்டப்படி அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்” என உத்தரவிட்டனர்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரவி கூறுகையில், “மறு ஆய்வு மனு போடலாமா அல்லது உச்சநீதிமன்றம் செல்லலாமா என்று ஆலோசித்து வருகிறோம். சட்டவிதி எண்10ன் கீழ் என்று சொல்கிறார்கள். வீடு மூடியிருந்தால் ரீடிங் எடுக்க முடியாது என்பதைதான் அந்த விதி சொல்கிறது. ஆனால் நாம் வீட்டிலேயேதான் இருக்கிறோம். ரீடிங் எடுக்கமுடியவில்லை என்று சொல்வது தவறு. உங்களுடைய சூழ்நிலையால் நீங்கள் வந்து ரீடிங் எடுக்காதது யாருடைய தவறு. 4 மாதங்களுக்கு ஒட்டுமொத்தமா கணக்கீடு செய்யும்போது நிச்சயம் 500 யூனிட்டுகளை தாண்டிதான் வரும். கட்டண விதிகள் நான்கு படிநிலைகளாக உள்ளன. ஒன்றாவது நிலையில் குறைவாக இருக்கும் நான்காவது நிலையில் அதிகமாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக கணக்கீடு செய்வதே அதிக மின்கட்டணம் வருவதற்கு காரணம். நாம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்று தான் மின்கட்டணம் செலுத்துகிறோம். ஆனால் மொத்தமாக நான்கு மாதங்களுக்கு என கணக்கிட்டுவிட்டு அதை இரண்டாக பிரித்து பில் கட்ட சொல்கிறார்கள். அப்போது மின்கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும். நான்கு மாதங்களுக்கு 1000 யூனிட் என்றால் அப்போது பிரித்தால் கூட 500 யூனிட்டிற்கு மேல்தான் செல்கிறது.
100 யூனிட் இலவசமாக அரசு தருகிறது என்கிறார்கள். அது ஏற்கெனவே உள்ள பாலிசிதான். புதிதாக அரசு எதுவும் செய்யவில்லை. ஊரடங்கினால் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளோம். மக்கள் கையில் பணம் இல்லை. இப்போது எப்படி அவர்களால் இவ்வளவு தொகையை கட்ட முடியும். இதுவே இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்று நீங்கள் கணக்கிட்டிருந்தால் நாம் முறையாக கட்டியிருக்க முடியும்.
அரசுக்கு நிதி தேவைதான். அதை மறுக்கவில்லை. ஆனால் அரசு குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்து நிதியை சேமிக்க வேண்டும். 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலை பராமரிப்புக்கு இந்த காலகட்டத்தில் பயன்படுத்துகிறார்கள். இப்போது அது அவசியமா? மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தேவையற்ற செலவுகளை தவிர்த்து மக்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். அரசிடம் திட்டமிடல் இல்லை. குடும்பத்திற்கு 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். பல இடங்களில் அரசு அறிவிக்கும் நிவாரணம் சென்று மக்களுக்கு சென்று சேரவில்லை. எனவே இதையெல்லாம் திட்டமிட்டு அரசுதான் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற மின்சாரத்துறை அதிகாரி காந்தி கூறுகையில், “தீர்ப்பை பொறுத்தவரை எனக்கு உடன்பாடானதுதான். முந்தைய மாதத்தில் இருக்கும் தொகையை கழிக்கக்கூடாது. யூனிட்டைதான் கழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். 2 மாதத்திற்கு என்பதிற்கு பதிலாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை என எடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி இருந்தாலும் நாம் உபயோகப்படுத்தின யூனிட்தான். ஒரு ரீடிங் எடுக்கமுடியவில்லை எனும்போது அதற்கு முந்தைய மாதத்தில் என்ன தொகை கட்டினார்களோ அந்த தொகையை கட்டச்சொல்கிறார்கள். அது ஏற்கனவே இருக்கும் நடைமுறைதான். அவர்கள் சொல்வது போல் யூனிட்டை கழித்தால் மீதமுள்ள பாதிப்பேருக்கு மோசமான பாதிப்பு வரும்.
உதாரணத்திற்கு வீடுகளுக்கான மின் இணைப்பு என்பதில் 4 படி உள்ளது. முதல் படி 100 யூனிட்டிற்குள் இருப்பவர்கள். அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 2 வது படி 200 யூனிட்டிற்குள் இருப்பவர்கள். அவர்களுக்கும் பாதிப்பு இருக்காது. அப்படியே தற்போதைய நடவடிக்கைப்படி யூனிட் கூடியிருந்தால் 2வது படியில் இருந்து 3வது படிக்கு செல்வார்கள். அப்படி அவர்கள் சென்றால் அதிகபட்சமாக 50 ரூபாய் கூடும். ஆனால் 3வது படியில் இருப்பவர்கள் 4வது படிக்கு செல்லும்போதுதான் இந்த பிரச்னை வருகிறது. 500 யூனிட்டிற்குள் இருப்பவர்கள் 3வது படி. அதற்கு மேல் இருப்பவர்கள் எல்லாருமே 4வது படியில் இருப்பவர்கள்தான். 3வது படியிலிருப்பவர்கள் 500க்கு மேல் 10 யூனிட் கூடினால் கூட 630 ரூபாய் கூடிவிடும். இதுதான் பிரச்னையே.
ஒருவர் நான்கு மாதத்திற்கும் சேர்த்து 1200 யூனிட் உபயோகப்படுத்தினார் எனில் இரண்டாக பிரிக்கும் போது 600 யூனிட் வீதம் பிரியும். அவர்களுக்கு 2 மாதத்திற்கும் 4வது படியில் கணக்கிடுவார்கள். இதுவே வழக்கமாக 400 யூனிட் உபயோகப்படுத்துபவர் இந்த முறை 1000 யூனிட் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அதை இரண்டாக பிரிக்கும்போது இரண்டுமே 500 யூனிட்டிற்குள் வந்து விடும். வழக்கின் சாரத்தின் படி கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு குறைவான தொகையும் மற்றொரு மாதத்திற்கு அதிகமான தொகையும் கட்டவேண்டி இருக்கும். இதனால் குறைவான யூனிட்டை பயன்படுத்தியவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் எப்படி செய்தாலும் இதில் பிரச்னை இருக்கும். முந்தைய காலகட்டத்தில் என்ன நடைமுறை இருக்கோ அதைதான் பயன்படுத்த முடியும். மின்சாரவாரியம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வழக்கு தொடர்ந்தது தேவையில்லாத ஒன்றுதான்” எனத் தெரிவித்துள்ளார்.