மீண்டும் தலைதூக்கும் இரண்டாவது தலைநகர் கோரிக்கை.. எம்ஜிஆர் காலத்தில் நடந்தது என்ன?

மீண்டும் தலைதூக்கும் இரண்டாவது தலைநகர் கோரிக்கை.. எம்ஜிஆர் காலத்தில் நடந்தது என்ன?
மீண்டும் தலைதூக்கும் இரண்டாவது தலைநகர் கோரிக்கை.. எம்ஜிஆர் காலத்தில் நடந்தது என்ன?
Published on

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் தனியாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் மழை, வெள்ளம் என ஏதாவது நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சு எழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு பலமுறை இப்படி குரல்கள் எழுந்துள்ளன.

சென்னையின் நெரிசலுக்குத் தீர்வு காணவேண்டும் மற்றும் தென்மாவட்ட மக்கள் எளிதாக வந்துசெல்ல வசதியாக திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கு, 1983 ஆம் ஆண்டில் இரண்டாது முறை முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த எம்ஜிஆர் அறிவித்தார். வரலாற்றுப் பழைமைவாய்ந்த நகரமாகப் போற்றக்கூடிய திருச்சி தகுதியான நகரம் என்று அவர் கருதினார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் எம்ஜிஆர் அதில் உறுதியாக இருந்தார்.

அண்ணாநகர் நவல்பட்டில் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்கவும் முயற்சி செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் திருச்சி வந்தால் தங்குவதற்கு உறையூர் கோணக்கரையில் கட்டப்பட்டிருந்த ஒரு பங்களாவையும் விலைக்கு வாங்கினார் என்றும் சொல்கிறார்கள். இப்படி தலைநகரம் பற்றிய விவாதம் நடந்த காலகட்டத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தேசிய அளவில் அரசியல் தட்பவெப்ப நிலையும் மாறியது. இந்திராகாந்தி மரணம், தேர்தல் போன்ற காரணங்களால் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை எம்ஜிஆரால் நிறைவேற்றமுடியவில்லை.

திருச்சியை தலைநகராக்கும் எம்ஜிஆரின் திட்டம் பற்றி சில பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் கருத்துக் கேட்டோம்....

துரை கருணா, பத்திரிகையாளர்

தென் தமிழகத்தின் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர் போன்ற மாவட்ட மக்கள் சென்னைக்கு வந்துசெல்வதில் மிகுந்த சிரமம் இருந்தது. சாமான்ய மக்கள் செலவு செய்து வேலையை விட்டுவிட்டு வரவேண்டிய சூழல். சென்னை நகரத்திலும் அளவுக்கு அதிகமான மக்கள் நெருக்கம். 30 லட்சம் பேர் வாழவேண்டிய ஊரில் கோடிக்கணக்கில் மக்கள் வாழவேண்டிய நிர்பந்தம். இதையெல்லாம் கருத்தில்கொண்டு எம்ஜிஆர் தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்றலாம் என்ற கருத்தை முன்வைத்தார்.

இந்த முடிவை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அரசுத் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. மிக முக்கியமான துறைகளை மட்டும் திருச்சிக்கு மாற்றலாம் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார். அதற்கும் யாரும் செவிசாய்க்கவில்லை. இன்னொரு சாதகமான அம்சம், அரசுக்குச் சொந்தமான காலி புறம்போக்கு நிலங்கள் திருச்சியில் ஏக்கர் கணக்கில் இருந்தன. அதை கட்டடங்கள் கட்ட பயன்படுத்தலாம்.

சென்னையிலேயே வாழப்பழகிவிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். எதிர்ப்புக் கருத்துகளை மதித்தார் எம்ஜிஆர். நாம் ஏதோ தோற்றுவிட்டோம் என்று நினைக்காமல், நெகிழ்வாக தன்னை மாற்றிககொண்டார். பிடிவாதமாக எதையும் செய்ய நினைக்காதவர் அவர்.பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது தலைநகரம் என்கிற கருத்து அரசியல் களத்தில் விவாதத்திற்கு வருகிறது.

ப்ரியன், அரசியல் விமர்சகர்
தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை எம்ஜிஆர் அறிவிக்க முயற்சி செய்ததற்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலகட்டத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். பொதுவாக தென்மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பு முதல் தொழில்ரீதியான பணிகள் வரையில் சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்துவரவேண்டியிருக்கிறது. பல சிரமங்கள் இருக்கின்றன.

மதுரையை தலைநகராக மாற்றும்போது அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட மக்கள் எளிதாக வந்துசெல்லமுடியும். நகரம் வளரும். தொழில், வேலைவாய்ப்புகள் பெருகும் என்ற எண்ணம் இருந்தது. எம்ஜிஆர் காலத்தில் சென்னையில் தண்ணீர்ப் பிரச்னையும் அதிகமாக இருந்தது. ஆந்திராவில் மூன்று தலைநகரம் பற்றிப் பேசுகிறார்கள். மகாராஷ்டிராவில் மும்பை, நாக்பூர் நகரங்களில் நிர்வாகம் நடைபெறுகிறது. அதேபோல இங்கேயும் மாற்றலாம் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் ஊட்டி நகரத்திலும் சட்டமன்றம் செயல்பட்டு வந்தது. அங்கேயும் ஒரு கவர்னர் மாளிகை உண்டு. அந்தக் காலத்தில் திமுகவினர், கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா என்ற விமர்சனம் செய்தார்கள். தற்போது மதுரையில் ஹைகோர்ட் கிளை செயல்பட்டு வருகிறது. அதேபோல அரசு நிர்வாகத்தையும் பிரிக்கலாம் என்று தென்தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.

தெலங்கானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களைப் போலவே தமிழகத்தையும் இரண்டாகப் பிரித்து மதுரையை தலைநகராக்கலாம் என்ற கோரிக்கையும் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற குரல்கள் உள்ளதைப் பார்க்கலாம். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அமைச்சர் ஆர்பி. உதயகுமார், இரண்டாவது தலைநகரம் பற்றி திடீரென பேசுவது ஏன் என்பதுதான் புரியவில்லை.

கே.எஸ். ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்

மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோதே, தமிழகத்திற்கான புதிய தலைநகரம் பற்றிய விவாதங்கள் தொடங்கிவிட்டன. அந்த காலகட்டத்தில் பழ.நெடுமாறன், மதுரை நகரத்தின் கலாச்சார முக்கியத்துவம் பற்றிப் பேசியதாக ஞாபகம். நிர்வாக ரீதியாக மதுரையை மையப்படுத்தி மாற்றங்களைச் செய்யலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். தமிழக வரலாற்றில் பழைமையான நகரங்களாக மதுரை, உறையூர், காஞ்சிபுரம் போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எண்பதுகளில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையை மதுரைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம். அதற்காக மத்திய அரசு 1983 ஆம் ஆண்டு வாக்கில் நீதிபதி ஜஸ்வந்த் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்தே மதுரை உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது. திருச்சியை தலைநகராக மாற்றலாம் என்று எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் அது சாத்தியப்படாமல் முடிந்துவிட்டது.

தொழிலுக்கான ஒரு நகரம், நிர்வாகத்திற்கு ஒரு நகரம், நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு ஒரு நகரம் என்று தனித்தனியாக உருவாக்கலாம். கேரளத்தில் உயர்நீதிமன்றம் எர்ணாகுளத்தில், தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இப்படி பல உதாரணங்கள் உண்டு. கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையை தலைநகராக்கலாம் என்ற பேச்சு நடந்துவருகிறது. இரண்டாவது தலைநகரம் என்பதில் தெளிவு வேண்டும். அரசியல் தளத்தில் சாத்தியமில்லாத ஒன்று. அது பிழையாக மாறிவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com