“கடையில் ரூ.30; ஆனால் எங்களிடம் 80 பைசாதான்.” - உப்பு உற்பத்தியாளர்களின் அவலநிலை

“கடையில் ரூ.30; ஆனால் எங்களிடம் 80 பைசாதான்.” - உப்பு உற்பத்தியாளர்களின் அவலநிலை
“கடையில் ரூ.30; ஆனால் எங்களிடம் 80 பைசாதான்.” - உப்பு உற்பத்தியாளர்களின் அவலநிலை
Published on

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள் ஆனால் உப்பு உற்பத்தி செய்பவர்களின் வாழ்க்கையோ ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் மரக்காணம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றியுள்ள பகுதிகளில் தான் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 3000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் உப்பு தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள 1500 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்கள் வெயில் காலங்களில் மட்டும் தான் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. மழை காலங்களில் உப்பு உற்பத்தி நடப்பதில்லை இந்த உப்பு உற்பத்தி செய்யும் பணிகளில் மட்டும் சுமார் 1500 நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

250 குடும்பங்களுக்கு மேல் இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் டன் உப்பு உற்பத்தி ஆகும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். இங்கு உற்பத்தி செய்யப்படுகிற உப்புகள் இந்தியாவின் தென் மாநிலங்கள் முழுவதும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, வரை இங்கு உற்பத்தி செய்யப்படும் உறுப்புகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ உப்பு சாதாரணமாக கடைகளில் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உற்பத்தியாளர்களிடம் 80 பைசாவிலிருந்து 1.20 பைசா வரைக்கு மட்டுமே கொள்முதல் செய்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

“இந்த உப்பு உற்பத்தி செய்வது மிகவும் கடினமான ஒரு வேலை. வெயில் காலங்களில் வெயிலில் இருந்து தான் வேலை செய்ய முடியும். மற்ற வேலைகளை போல சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூட முடியாத ஒரு வேலை. உடலில் ஏதாவது ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டு போனால் கூட அந்த ஆண்டு முழுவதும் பணிக்கு செல்ல முடியாத சூழல் தான் இருக்கிறது. உப்பு நீரில் இறங்கி தான் வேலை செய்ய வேண்டும். காயங்கள் பட்ட இடங்களில் எரிச்சல் அதிகமாகும். இதனால் காயம் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

அரசாங்கம் கூட்டுறவு சங்கங்களை அமைத்து அதன் மூலமாக ஒரு நிரந்தர விலையை அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழகத்தை ஆண்டாலும் கூட இந்த உப்பு உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கை மட்டும் ஏற்கப்படாமலே இதுவரையில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com