மீண்டும் தலிபான்கள்... ஆப்கன் மக்கள் அஞ்சுவது எதற்காக? - எழுத்தாளர் தஸ்லிமாவின் பார்வை

மீண்டும் தலிபான்கள்... ஆப்கன் மக்கள் அஞ்சுவது எதற்காக? - எழுத்தாளர் தஸ்லிமாவின் பார்வை
மீண்டும் தலிபான்கள்... ஆப்கன் மக்கள் அஞ்சுவது எதற்காக? - எழுத்தாளர் தஸ்லிமாவின் பார்வை
Published on

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான தஸ்லீமா நஸ்ரின், 'தி பிரின்ட்' இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் சுருக்கத்தை பார்ப்போம். 

3 லட்சம் பேரை கொண்டுள்ள வலிமையான ஆப்கான் ராணுவம் தலிபானை எதிர்த்து போரிடாமல் பின்வாங்கியது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் பதில் இல்லை. இதனால், ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவது தலிபானுக்கு அவ்வளவு ஒன்றும் சிரமமாக இருந்திருக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்கா எங்கு ஜனநாயகத்தை கொண்டு வர முயல்கிறதோ, அங்கு அழிவை மட்டும் தான் ஏற்படுத்துகிறது என்பதை உணர முடிகிறது. பல பில்லியன் டாலர்கள் செலவழித்து, இரண்டு தசாப்தங்களாக தலிபான்களுடன் சண்டையிட்டு வந்த அமெரிக்காவின் இறுதி முடிவு தலிபானின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வேடிக்கையான ஒன்று என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


ஆப்கானியர்கள் ஏன் பயந்து ஓடுகிறார்கள்? ஆப்கான் விமான நிலையங்களிலிருந்து வெளியிடப்படும் காட்சிகள் கனத்த இதயம் கொண்டவர்களையும் கரைக்கும் வலிமை வாய்ந்தது. தலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்க அவர்கள் போராடி வருகிறார்கள். அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. வாழ்தலே போராட்டமாகும்போது மக்களை இதைத்தானே செய்ய வேண்டியிருக்கிறது. தலிபான்களும் மற்ற ஆப்கானியர்களைப்போல மனிதர்கள் தான். ஆனால், அவர்களிடம் இருக்கும் பிரச்னை அவர்கள் நிறுவ விரும்பும் சட்டங்கள் தான்.

இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள ஷரியத் சட்டத்தைத்தானே அமல்படுத்த போகிறார்கள்? அப்படியானால் தப்பி ஓட விரும்பும் ஆப்கானியர்கள் இஸ்லாத்தை நம்பவில்லையா? அப்படியில்லை. எல்லா சட்டங்களும் அந்தந்த காலத்துக்கு ஏற்றவை. அப்படித்தான் ஷரியத் சட்டமும். இதில் கசப்பான உண்மை என்னவென்றால், ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களுக்கு பயந்து ஓடவில்லை என்பது தான். அவர்கள் பயப்படுவது 7ம் நூற்றாண்டில் கடைபிடிக்கப்பட்ட சட்டத்தை பார்த்துதான். எந்த வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சட்டங்களை தற்போது அமல்படுத்துவது தான் அம்மகளுக்கான சிக்கல். தலிபான்களின் பழமைவாய்ந்த, அப்டேட் ஆகாத சிந்தனைகளும் இதற்கு முக்கியமான காரணம்.

தலிபான் ஆட்சியில் பெண்கள்:

பழங்கால ஷரியத் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், பெண்களுக்கு உண்மையில் எந்த உரிமையும் இருக்காது என்பதை மிகவும் பக்தியுள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் கூட கருதுகிறார்கள். கல்வி, வேலை, சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் இல்லாமல் போகும் என அவர்கள் கருதுகிறார்கள். சட்டங்களை மீறினால் அவர்கள் கொல்லப்படுவது நிச்சயம். எப்போதெல்லாம் தலிபான்கள் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் முதல் இலக்கு பெண் உரிமைகளை பறிப்பதுதான். காரணம் பழங்கால ஷரியத் சட்டங்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றன.

தலிபான்கள் ஷரியத் சட்டங்களுக்குப் பதிலாக, ஜனநாயக முறையிலும், அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கும் வகையிலும் ஆட்சி செய்தால், மக்கள் தப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகள் பின்பற்றுவது உண்மையான இஸ்லாம் அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் உண்மையான இஸ்லாம் என்றால் எது? அதை எந்த நாடுகள் பின்பற்றுகின்றன என்பதற்கான தெளிவான பதிலும் அவர்களிடம் இல்லை.

அண்மையில், தலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பேசுகையில், ''மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைந்தால், நாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். நாங்கள் வீட்டில் சத்தமாக பேச முடியாது, இசையைக் கேட்க முடியாது, எங்கள் மகள்களை வெள்ளிக்கிழமை சந்தைக்கு அனுப்ப முடியாது. தலிபான்கள் எங்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முனைவார்கள். 18 வயதுக்கும் மேற்பட்ட மகள்களை வீட்டில் வைத்திருக்க கூடாது. அவர்களை உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சப் கமாண்டர் ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார்'' என்றார் அவர்.

தலிபான் இராணுவம் பதினைந்து முதல் நாற்பத்தைந்து வயது வரையிலான அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் பட்டியலை தயாரிக்க விரும்புகிறது. அவர்கள் தங்கள் இராணுவ உறுப்பினர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் பெண்களை தங்கள் மிஷனில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, அவர்களை பாலியல் அடிமைத்தனத்தில் தள்ளிவருகிறது. திருமணம் என்ற பெயரில் தலிபான்களும் அதையே விரும்புகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் புதிய சிரியா. அடுத்து பாகிஸ்தான். 21 நூற்றாண்டில் முன்னேறிய ஒரு சமூகம் 7ம் நூற்றாண்டு பழமைவாத சட்டங்களை எப்படி அமல்படுத்த முடியும்? இதற்குப் பின்னால் எத்தகைய அரசியல் நோக்கங்கள் இருந்தாலும் சரி, அவை அனைத்தும் மனிதகுலத்துக்கு எதிரானது. அத்தகைய அரசியல் ஆதாயங்களை தேடுபவர்கள் மன்னிப்புக்கும் கருணைக்கும் அப்பாற்பட்டவர்கள்.

உறுதுணை : The Print 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com