சுதந்திரம் அடைந்தபிறகு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு அரசியல் சட்டத்தை இயற்ற டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக்குழு உருவாக்கப்பட்டது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 இதே நாளில்தான்.
சிறப்புமிக்க இந்நாளில் உருவான, அரசியல் சாசன வரைவுக்குழுதான் உலகிலேயே நீளமான அரசியல் சாசனத்தை எழுதி முடித்தது. டாக்டர் அம்பேத்கர் தலைவராகவும் அவருடன் உறுப்பினர்களாக அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என்.கே கோபால்சாமி ஐயங்கார், கே.எம் முன்ஷி, சையது முகமது சாதுல்லா, சர்.பி.எல் மிட்டர், டி.பி கைத்தான் என ஆறு பேர் நியமிக்கப்பட்டனர்
உலகிலேயே நீண்ட எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டம் இந்தியாவுடையதுதான். இந்திய அரசியல் சட்டம் அரசியல் சாசன வரைவுக்குழுவால் முழுமையாக எழுதி முடித்தப்பின் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நாளே, இந்திய அரசியல் சாசன தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்புமிக்க நம் அரசியல் சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கர் எழுதினார். இதற்காக, அரசியல் சாசன வரைவுக்குழு 165 முறை சந்தித்துக்கொண்டது. அதில், 144 நாட்கள் அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களும் திருத்தத் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. மொத்தம் 7 ஆயிரத்து 635 திருத்த தீர்மானங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 2400 திருத்தங்களை குழு நீக்கியது. ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. அனைவருக்கும் சமநீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம்.
’சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ இம்மூன்றையும் வலியுறுத்தியே அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார். இம்மூன்றையும் அம்பேத்கர் புத்தர் போதித்த அன்பு, அறிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிலிருந்தே எடுத்தார் என்று நோபல் பரிசுப் பெற்ற திபெத்திய பவுத்த இயக்க தலைவர் தலாய்லாமா உட்பட பல தலைவர்களும் வரலாற்று அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள்.
நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்றால், உலகிலேயே ’சமூக நீதி’ என்ற வார்த்தை இடம்பிடித்த அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியல் சட்டம்தான். இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் ‘சமூகநீதி’ என்ற வார்த்தையை அம்பேத்கர் சேர்த்தார். உலகிலேயே சமூக நீதி என்ற வார்த்தை வருவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்தான் என்று உலக சட்ட மேதைகள், இதற்காகவே அம்பேத்கரை பாராட்டுகிறார்கள் . அவர், சேர்த்த சமூக நீதியின் அடிப்படையிலேயே, இட ஒதுக்கீடும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை உட்பட அத்தனை அடிப்படை உரிமைகளையும் நாட்டு மக்களுக்கு சட்டத்தின் வழிக்கொடுத்தார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பலம்தான் நாட்டையே இயக்குகிறது. இந்திய சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 284 உறுப்பினர்கள் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி கையெழுத்திட்டனர். ஜனவரி 26 ஆம் தேதிமுதல் புதிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தநாளைத்தான் நாம் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி சிறப்பிக்கிறோம். அதற்கு, காரணம் அம்பேத்கர் என்ற மாமனிதரின் கடும் உழைப்புதான்.
இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள் எல்லாம் இருந்தாலும் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ பாதுகாப்பு அளிப்பது நமது அரசியல் சட்டம்தான். ’மகத்தான மானுட ஆவணம்’ என்று அழைக்கப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அம்பேத்கர் இரவுப்பகல் பாராமல் உழைத்தார். அந்த கடுமையான உழைப்பே அவருக்கு உடல் நலக்குறைவையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- வினி சர்பனா