எளியோரின் வலிமை கதை 11: டிஜிட்டல் பேனர் கலாசாரத்தால் வாழ்வாதாரம் இழந்த ஓவியக் கலைஞர்கள்

எளியோரின் வலிமை கதை 11: டிஜிட்டல் பேனர் கலாசாரத்தால் வாழ்வாதாரம் இழந்த ஓவியக் கலைஞர்கள்
எளியோரின் வலிமை கதை 11: டிஜிட்டல் பேனர் கலாசாரத்தால் வாழ்வாதாரம் இழந்த ஓவியக் கலைஞர்கள்
Published on

டிஜிட்டல் பேனர் கலாசாரத்தால் சுவர் ஓவியர்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் நம் அன்றாட வாழ்வின் மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. கருப்பு, வெள்ளை, வண்ணங்கள் என பலவிதமான விளம்பரங்களை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். ஓவியங்கள் இல்லாமல் பெரும்பாலும் விளம்பரங்கள் இருப்பதில்லை. பல நிறுவனங்கள் விளம்பரங்களை நம்பி இயங்குகிறது. நிறுவனங்களை விட அதிக அளவு விளம்பரங்களை விரும்புவதும், வெளிப்படுத்துவதும் அரசியல் கட்சிகள்தான். கட்சிகளின் மாநாடு, தலைவர்களின் பிறந்தநாள், தேர்தல் என கட்சிகளின் விளம்பரங்கள் பெரும்பாலும் பொது சுவர்களை சூழ்ந்து இருக்கும். அரிய வகை படங்கள், எழுத்துக்கள் என விளம்பரங்கள் அன்றாடம் நம்மை ஈர்த்து வருவதை நாம் உணர்ந்திருக்கிறோம். அப்படிப்பட்ட விளம்பரங்களை எழுதுகிற, வரைகிற ஓவியர்களின் வாழ்நிலையை அறிய புறப்பட்டோம்.

ஓவியர் தயாளனை சந்தித்தோம். அவர் பேசுகையில், ''28 வருஷத்துக்கு முன்னாடி ஓவியம் வரையவும், சுவரெழுத்து எழுதவும் வேலைக்கு வந்தேன். வேலைன்னு சொல்ல முடியாது கலைன்னு சொல்லலாம். எங்க அண்ணனுக்கு இப்ப 62 வயதாகுது. அவர் மூலமாக இந்த கலை ஆர்வம் எனக்கு வந்துச்சு. நிறைய வண்ணங்களோட வேலை செய்கிற ஒரு ஓவியம் வரைஞ்சா 20 பேர் வரைக்கும் வேடிக்கை பார்க்க வந்துடுவாங்க. வேலைய முடிச்சுட்டு வந்ததுக்கு அப்புறமும் தினம் தினமும் 10 பேர், 20 பேர் அதை பார்த்துட்டே இருப்பாங்க. அது நமக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி.

அப்ப நான் வேலைக்கு வரும்போது எனக்கு 30 ரூபாய் சம்பளம். கொஞ்சம் கொஞ்சமா சம்பளத்தை உயர்த்தி 60 ரூபா வரைக்கும் வந்தது. அதுக்கப்புறம் தான் பிரஷ் பிடிக்க ஆரம்பிச்சேன். தனியா நான் வேலை செய்யும் போது எனக்கு 100 ரூபாய் சம்பளம். எல்லா கம்பெனி விளம்பரங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரம்னு அடிக்கடி சுவர் விளம்பரம் செய்யறதுக்கு எங்களை கூப்பிடுவாங்க. அப்ப ஒரு சதுர அடிக்கு அவர்களே பெயிண்ட் வாங்கி கொடுத்தா எங்களுக்கு சதுர அடிக்கு 50 ரூபா கொடுத்தாங்க. அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு 200 ரூபாய் ஆகிப்போச்சு.

தேர்தல், தலைவர்களின் பிறந்த நாள், அரசியல் கட்சிகளோட மாநாடு அப்பல்லாம் அடிக்கடி நடத்துவாங்க. வேலை தொடர்ச்சியாய் இருக்கும். குடும்பம் நடத்தவும் சிரமமில்ல. இப்ப எங்க நடத்துறாங்க? அதனால தொடர்ச்சியா வேலை கிடைக்கறதில்ல. அதிலும் அதிக அளவு வேலை இல்லாம இருக்கிற ஓவியர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு போய்டறாங்க. மூட்டை தூக்கும் வேலை, வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கிறது, ஆட்டோ ஓட்டுறது என ஏதோ எங்களால் முடிந்த வேலைய செஞ்சிட்டு வர்றோம்.

படம் வரையிற ஆர்வம் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது ஏற்பட்டது. வரையிறது சாதாரண வேலையில்லை. ரொம்ப சிரமமான வேலைதான். அப்படியே இந்த கலைக்குள்ள வந்து அதையே தொழிலாக மாற்றி விட்டோம். இத நம்பி குடும்பத்தை நடத்தலாம் அப்படின்னு நினைச்சு எங்களுக்கு கடந்த 10 வருஷமா பெரிய அடி. காரணம் டிஜிட்டல் பேனர்கள், ஸ்டிக்கர்கள் மாறிமாறி வர ஆரம்பித்தவுடனே சுத்தமாக வேலை இல்லாது போய்டுச்சி. ஆனாலும் மாசத்துக்கு ஒரு பத்து நாள் ஏதாவது ஒரு வேலை இருந்துகிட்டே தான் இருக்கு. இந்த வேலைதான் நம்பி குடும்பத்த நடத்திக் கிட்டிருக்கிறோம். யாரும் சொல்லிக் கொடுத்து வரதில்லை கலை. ஆனாலும் வருமானம் முக்கியமில்லையா? அதுக்காக அந்த கலை ஆர்வத்தை கலை வடிவத்தை வருமானம் சம்பாதிக்க வழியா மாத்திக்கிட்டோம். பெரிய பெரிய ஓவியர்கள் வரைந்த படங்களுக்கு ஒரு லட்சம் 10 லட்சம் என்று விலை போகும். எங்களை மாதிரி எளிய ஓவியர்கள் எவ்வளவு அழகா படம் வரைந்தாலும் கூட நூறு ஐம்பது கொடுப்பதற்கு பாக்கெட்டை தடவிதான் பார்ப்பாங்க'' என்றார்.

ஓவியம் பல வரலாற்று உண்மைகளை நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. அஜந்தா, எல்லோரா என பல்வேறு ஓவியங்கள் பேசப்பட்டாலும் அதன் ஓவியர்களை பற்றி யாரும் இதுவரை பேசுவது கிடையாது. அப்படிப்பட்ட சூழலில்தான் ஓவியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் 33 ஆண்டுகளாக ஓவியத்தொழில் ஈடுபட்டு வரும் பாட்ஷாவை சந்தித்தோம்.

''1988ஆம் ஆண்டு இந்த ஆர்டிஸ்ட் வேலைக்கு வந்தேன். இங்கே படம் வரையறது, எழுதறது இது தான் வேலை. அப்பவே எனக்கு 2.50 ரூபா கூலி. ஒவ்வொரு நகரப்பகுதியிலயும் குறைந்தது 25 ஆர்ட்டிஸ்ட் கடையாவது இருக்கும். சுவரெழுத்து, போர்டு எழுதறது தான் அப்பல்லாம் வேலை. நான் வேலைக்கு வந்த புதுசுல சுவர் எழுதறதுக்கு சதுரடி நாலு ரூபா கொடுப்பாங்க. வாட்டர் கலர் நம்பதான் வாங்கிக்கணும். அப்பவே இரும்பு போர்டு எழுதறதுக்கு சதுரடிக்கு 120 ரூபா கொடுப்பாங்க. பெயிண்ட் செலவு நாமதான் பாத்துக்கனும்.

ஆர்டிஸ்ட்க்கு அப்ப எல்லாம் கிராக்கி கொஞ்சம் அதிகம் என்று சொல்லலாம். கவர்மெண்ட் விளம்பரம் முழுசா ஓவியர்கள்கிட்டதான் இருந்துச்சு. அதை நம்பி பல குடும்பங்கள் பொழச்சது. கடைசியா பத்து வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா இந்த தொழில் காணாமல் போய்டுச்சின்னு சொல்லலாம். இப்ப எல்லாம் இந்த தொழிலுக்கு வருவதற்கு பெருசா யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இங்கு பெரிய வருமானம் இல்லை என்பதுதான். நிறைய ஓவியர்கள் வேலை இல்லாம மனநோயாளியா ஆயிட்டாங்க.. இதுக்கு ஒரே வழி கவர்மெண்ட் ஸ்டிக்கர், டிஜிட்டல் பேனர் எல்லாத்தையும் எடுத்துட்டு பழையபடி ஓவியர்களை வச்சி பெயிண்ட், சுண்ணாம்பு மூலமா எழுதுவது தான் ஒரே வழி அப்பதான் எங்களை போல குடும்பங்களும் பொழைக்கும்'' என்றார்.

ஒவ்வொரு கலையும் ரசிக்கவே இருக்கிறது. அந்த வகையில் ஓவியம் யாராலும் மறுக்க முடியாத ஒரு கலை. ஓவியத்தை ரசிக்க முடியாத யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஓவியர்களின் வாழ்க்கை ரசிக்கும்படியாக இல்லாமல் போனதுதான் சோகம்.

-ஜோதி நரசிம்மன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com