எளியோரின் வலிமை கதை 24: மனதை கனக்க வைக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதை

எளியோரின் வலிமை கதை 24: மனதை கனக்க வைக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதை
எளியோரின் வலிமை கதை 24: மனதை கனக்க வைக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதை
Published on

சுமை நம்முடைய வாழ்வில் நாம் சுமக்க முடியாமல் இருக்கும் ஒரு பொருள். நமக்கான தேவையைக் கூட நம்மால் சுமக்க முடியாமல் இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் நமக்கான சுமைகளை கூட யாராவது சுமக்க மாட்டார்களா என ஏங்கி நிற்கும் நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட நமக்கான சுமைகளை சுமக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

''எம்பேரு பாலு-ங்க. எனக்கு 57 வயசு ஆகுது. கல்யாணமாகி மூணு பொண்ணு, இரண்டு ஆம்பள பிள்ளைங்க. ரெண்டு பொண்ண கட்டி கொடுத்துட்டேன். இன்னொரு பொண்ணு போலீஸ் ட்ரைனிங் எடுத்துட்டு இருக்குது. ஒரு பையன் படிக்கிறான்; ஒரு பையன் வேலைக்கு போறான். நான் 1982ல் இந்த வேலைக்கு வந்தேன். லோடு இறக்குறதுதான் வேலை. லோடுன்னா எல்லாப் பொருளும் இருக்கும். மூட்டையாகவோ, கம்பியாகவோ, காய்கறியாகவோ. எல்லாத்தையும் லோடுன்னுதான் சொல்லுவோம். நான் இந்த வேலைக்கு வரும்போது எனக்கு வயசு 17. டன் கணக்கில் தான் லோடு இறக்குவத பேசுவாங்க  

ஒரு மூட்டைக்கு 50 பைசா. அப்புறம் கொஞ்ச நாளா ஆனதுக்கப்புறம் ஒரு ரூபா, ரெண்டு ரூபா அப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா இன்னிக்கு மூட்டை 7 ரூபாய் கொடுக்கிறாங்க. சிலர் இதைவிட கம்மியா குடுக்கிறாங்க. வேலையும் செய்யறாங்க. இந்த கூலியே குடும்பம் நடத்த பத்தாது. என்ன செய்றது தொழில் பழகிடுச்சு. வேற எந்த வேலைக்கும் போக முடியாது. எவ்வளவு பாரமா இருந்தாலும் முதலில் தலையில் வச்சு தூங்கிடுவோம். காலையில நாலு மணியிலிருந்து வேலை செய்ய ஆரம்பிப்போம். எப்ப முடியும்னு கேட்காதீங்க. எப்ப முடியும்னு எங்களுக்கு தெரியாது. இப்பல்லாம் வெயில் காலம். இந்த காலத்துல நடு ரோட்டில் நடந்து போறதுக்கு நிறைய சிரமம் இருக்கும்.

என்ன பண்றது வயிறுன்னொன்னு இருக்குது. இந்த பொழப்பு தாங்க என் குடும்பத்தில் எல்லாரையும் காப்பாற்றுவது அது நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. தினமும் வேலை இருக்குன்னு சொல்ல முடியாது. நாங்க வேலை செய்தது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். இங்க எப்ப லோடு வருதோ அப்ப தான் வேலை இருக்கும். அதே நேரத்தில் சும்மாதான் ஒக்காந்திருக்கோம். தொடர்ச்சியா மூணு நாள், நாலு நாள்னு வேலையில்லாமல் போய்விடும். அப்ப குடும்பத்திற்கு ரொம்ப சிரமமா இருக்கும். என் மனைவியும் இங்கதான் வேலை செய்றாங்க. ரெண்டு நாளைக்கு ஒருமுறை பெறுக்கிற வேலை. அவர்களுக்கு வாரம் 300 ரூபாய் கூலி. இந்த கூலியை வச்சு தாங்க இரண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்தேன்.

ஒரு பிள்ளை படிக்க வச்சு வேலைக்கு அனுப்பினேன். இன்னொரு பையன் படிக்கிறான் இன்னொரு பொண்ணு போலீஸ் ட்ரைனிங் எடுத்துக்குது. என்ன ஒன்னு வேலை இருந்தாலும் இல்லாட்டாலும் நம்மளால செய்ய முடியும் என்கிற நம்பிக்கை தாங்க. ஆனா வேலை நிரந்தரம் இல்லை. இடையில வேலை இல்லாத காலத்தில் வேற வேலை செய்யலாம்னு நானும் நிறைய வேலைக்கு போனே. ரொம்ப நாள் இந்த வேலையிலேயே பழகிட்டதால  வேற  வேலை நமக்கு ஒத்து வரலை. மூட்டை தூக்கறவங்கதான அப்படின்னு நிறைய நேரம் நம்மள கேவலமாப் பாக்கிரவங்க இருக்கிறாங்க. நம்மள மதிச்சி வேலை வாங்குறவங்களும் இருக்காங்க. அதெல்லாம் சகஜம் தானே அப்படி நினைச்சி கிட்டு கடந்து போய்கிட்டேயிருக்கிறது'' என்றார் பாலு.

''சுமை தூக்குவது எவ்வளவு சிரமம் என்பதை சுமை தூக்கியவர்கள் சொன்னால்தான் தெரியும். சுமை மட்டுமே அவர்களுக்கு சுமையாக இருப்பதில்லை வாழ்க்கையும் சுமையாகத்தான் இருக்கிறது. பத்து பேராக இருந்தாலும் ஐந்து பேராக இருந்தாலும் குடுக்குற கூலியை சமமாக பிரித்து எடுத்துக் கொள்வோம்'' என்கிறார் வானவில்.

தொடர்ந்து வானவில் கூறுகையில், ''எனக்கு தெரிஞ்சி 15 வருஷத்துக்கு மேல லோடு இறக்கிறேன். அப்ப என்ன கூலி கொடுத்தார்களோ அதையேதான் இன்னும் கொடுக்கிறாங்க. பெட்ரோல் விலை, டீசல் விலை, காய்கறி விலை, அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் ஏறிடிச்சு. ஆனா எங்க கூலி உயர்வு மட்டும் இன்னும் அப்படியே தான் இருக்கு. ஒரு டன்னுக்கு 500 ரூபா  கொடுப்பாங்க 5 பேர் இருந்தாலும் சரி பத்து பேர் இருந்தாலும்  அதைதான் பிரித்து எடுத்துக் கொள்ளுவோம். ஒரு ஐநூறு ரூபா ஒரு மாமூ கொடுப்பாங்க  

சென்னையிலேயே வேற எங்கேயோ இருந்து ஒரு நிறுவனத்தில் அவங்க குடுக்குற பணம் அது. ஆனால் அந்த பணத்தை டிரைவர் டன்னுக்கு எவ்வளவு எங்ககிட்ட கொடுத்துடுவாங்க. அதையெல்லாம் ஏமாத்த மாட்டாங்க. காலை 4 மணிக்கு லோடு இறக்க வந்தா லாரியை துரத்துவதே வேலையா இருக்கும். ஒவ்வொரு லாரிகளிலும் விதவிதமான சுமை வரும். சிமெண்ட் மூட்டை, அரிசி, பருப்பு, உரம், கம்பி அப்படின்னு வர எல்லா சுமையையும் இறக்கி கொடுப்போம். ஆனாலும் எங்க வாழ்க்கையில இருக்கிற சுமையே எங்களால இன்னும் இறக்க முடியாமல் இருந்திக்கிட்டே இருக்கு. கஷ்டத்தோடு தான் வாழ்ந்துட்டு இருக்கிறோம்'' என்கிறார் வானவில்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com