ஸ்டார்ட் அப் இளவரசிகள் 4: டோனா டபின்ஸ்கி - கையடக்க கம்ப்யூட்டர் நாயகி!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 4: டோனா டபின்ஸ்கி - கையடக்க கம்ப்யூட்டர் நாயகி!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 4: டோனா டபின்ஸ்கி - கையடக்க கம்ப்யூட்டர் நாயகி!
Published on

'ஆப்பிள்' தனது புகழ்பெற்ற 'மேக்' கம்ப்யூட்டரை அறிமுகம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன் டோனா டபின்ஸ்கி (Donna Dubinsky) அந்நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆப்பிள் நிறுவனத்தில் டோனா சேர்ந்த ஆண்டு மட்டும் அல்ல, நிறுவனத்தில் அவர் சேர்ந்த விதமும் சரி, பின் அங்கிருந்து வெளியேறிய விதமும் சரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

'இந்த நிறுவனத்தில் எனக்கு வேலை வேண்டும்' என விடாப்பிடியாக ஆப்பிளில் அவர் தனக்கான வர்த்தகப் பொறுப்பை கேட்டு பெற்ற விதத்தை அறியும்போது, அவரது ஆளுமை வியக்கவைக்கும். அடுத்த சில ஆண்டுகளில் 'இந்த நிறுவனம் எனக்குத் தேவையில்லை' என வெளியேறியபோது, அவர் காட்டிய உறுதியும், கம்பீரமும் இன்னும் வியக்கவைக்கும்.

ஆப்பிளில் இருந்து வெளியேறிய பிறகு தொழில்நுட்ப உலகில் அவர் காட்டிய வேகமும் உத்வேகமும் இன்னும் வியக்கவைக்கும். 'கையடக்க கம்ப்யூட்டர்' சந்தையை மீட்டெடுத்த பாம் பைலட் (PalmPilot), இந்த சந்தையை மேலும் வளர்த்தெடுத்த ஹாண்ட் ஸ்பிரிங், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கான நுமெண்டா என அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக சிலிக்கான் வேலியின் முன்னோடி நிறுவனங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். இதனிடையே, சிம்ம சொப்பனமாக கருதப்படும் ஆப்பிள் சி.இ.ஓ ஸ்டீவ் ஜாப்ஸை துணிச்சலுடன் எதிர்த்து நின்றிருக்கிறார்.

இப்படி டோனாவின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லாமும்தான் சிலிக்கான் வேலியின் வெற்றிகரமான பெண் அதிகாரியாக அவரை கொண்டாட வைத்திருக்கிறது. இந்த சாதனை பயணத்தில் வர்த்தக அதிகாரியாக அவரது தொலைநோக்கையும், தனித்திறமையையும் உணர்ந்துகொள்ளலாம்.

டோனாவின் தொழில் வாழ்க்கை ஹார்வர்டு எம்பிஏ பட்டத்துடன் துவங்குகிறது. அதற்கு முன் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பட்டம் பெற்றிருந்தார். பட்டப்படிப்பின்போதே அவர் தன் சகாவுடன் சேர்ந்து வேகமாக டைப் செய்து தரும் சேவையை அளித்து வந்தார். அவரது தொழில்முனைவு ஆர்வத்தின் வெளிப்பாடாக இது அமைந்தாலும், பட்டம் பெற்ற பிறகு வங்கி வேலைக்கு சென்றுவிட்டார். வங்கிப் பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டவர், வர்த்தக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். மிகவும் இளம் வயதில் இந்தப் பொறுப்புக்கு வந்தவர் எனும் சிறப்பை மீறி, அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கத் துவங்கினார்.

ஹார்வர்டில்தான் டோனாவுக்கு எதிர்கால வாழ்க்கைப் பாதை தொடர்பான தெளிவு உண்டானது. பெரும்பாலான எம்பிஏ பட்டாதாரிகளைப்போல கைநிறைய சம்பளத்தை அள்ளித் தரும் சேவைப் பிரிவு பதிவுக்கு செல்ல விரும்பாமல் சவாலான பொருட்களை உருவாக்கும் பிரிவில் ஈடுபடுவதிலேயே தனக்கு விருப்பம் இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

'சேவைப் பிரிவில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. என்னால் தொட்டு உணரக்கூடிய ஒரு பொருளை, இதை நான் உருவாக்கினேன் என்று சொல்லக்கூடிய ஒரு பொருளை உருவாக்க கனவு கண்டேன்' என இதுபற்றி அவர் பேட்டி ஒன்றில் உற்சாகமாக கூறியிருக்கிறார்.

இந்த காலகட்டத்தில்தான் ஆப்பிளின் இரண்டாம் பிசிக்காக உருவாக்கப்பட்ட விசிகால்க் (VisiCalc) மென்பொருள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டார். இதுவே எதிர்காலம் என உணர்ந்தவர், 'ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்' என தீர்மானித்தார். ஹார்வர்டு எம்பிஏ முடித்ததும் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்தார்.

1980களில் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஆப்பிள்' வளர்ச்சி பாதையில் இருந்தது. அப்போதுதான் உருவாகி கொண்டிருந்த பிசி எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவில் நிறுவனம் தனி அடையாளத்துடன் வளர்ந்து கொண்டிருந்தது. கம்ப்யூட்டர் உலகில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஐபிஎம் நிறுவனத்திற்கு சவால் விடக்கூடிய ஒரே நிறுவனமாக ஆப்பிள் கருதப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் மீது டோனாவுக்கும் ஓர் ஈர்ப்பு இருந்தது. நிறுவனத்தின் ஆப்பிள் II கம்ப்யூட்டரை பார்த்திருந்தவர், 'இதுதான் எதிர்காலம்' என நினைத்தார். இந்த காலகட்டத்தில் 1981-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக எம்பிஏ பட்டதாரிகளை நியமிக்க தீர்மானித்து அதற்கான நேர்காணலை நடத்திக்கொண்டிருந்தது.

ஆப்பிள் கம்ப்யூட்டரால் கவரப்பட்டு அந்நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த வாய்ப்பு உற்சாகத்தை அளித்தது. அதே உற்சாகத்துடன் விண்ணப்பிக்கவும் செய்தார். ஆனால் தொழில்நுட்ப பின்புலம் இல்லாததால் அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.

வேலைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் சூழலில் மற்றவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள், என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், டோனா நிராகரிப்பால் அசரவில்லை. ஆப்பிளில் தான் பணியாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர், நேர்காணல் தினத்தன்று நிறுவனத்திற்கு நேராக சென்றுவிட்டார்.

நேர்காணல் நடத்திக்கொண்டிருந்த ஜெனிபர் பாஸ்டர் என்பவரின் அறைக்கு வெளியே அழையா விருந்தாளியாக காத்திருந்தார். அவர் வெளியே வரும்போதெல்லாம் தான் காத்திருப்பதை மென்மையாக நினைவூட்டி பேசுவதற்கு நேரம் கேட்டார். அவரது விடாமுயற்சியை பார்த்த ஜெனிபர் அன்றைய தின இறுதியில், 'உங்கள் கதையை சொல்லுங்கள்' என்றார்.

இதற்காக காத்திருந்த டோனா, "பாருங்கள், தொழில்நுட்ப திறமை கொண்டவர்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் தொழில்நுட்ப திறமை இல்லை. எனக்குப் புரிகிறது. ஆனால், உங்கள் தயாரிப்பை வாங்கக் கூடியவர்களில் நானும் ஒருவர். இந்த தயாரிப்பால் வர்த்தக உலகிற்கு கிடைக்கும் பலனை புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராகவும் இருக்கிறேன். நான் வாடிக்கையாளர்களை சந்திக்க விரும்புகிறேன். வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை" என்று அவர் துணிச்சலாக கூறினார்.

இந்த பதில் ஆப்பிள் நிர்வாகத்தை கவரவே டோனா பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அன்று நேர்காணல் செய்யப்பட்டவர்களில் தேர்வு செய்யப்பட்டவர் டோனா ஒருவர் மட்டுமே என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அதுமட்டும் அல்ல, ஆப்பிளில் தேர்வான முதல் எம்பிஏ பட்டதாரி எனும் சிறப்பையும் இதன்மூலம் பெற்றார். அது மட்டும் அல்ல, எதிர்த்து பேச முடியாத ஆளுமையாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கருத்துக்கு எதிராக துணிவுடன் கருத்து சொன்னவராகவும் அவர் அறியப்படுகிறார்.

ஜாப்ஸின் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் துணிவில் டோனா, இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்த ஜோனா ஹாப்மனுக்கு நிகராக அமைகிறார் என்றாலும், ஜாப்ஸுடன் அவர் மல்லுக்கட்டிய விதம் வர்த்தக உலகின் புகழ்பெற்ற ஆய்வுகளில் ஒன்றாக கருதப்படுவதில் இருந்தே அவரது திறமையை ஊகித்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிய டோனா, விற்பனை மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்தினார். ஆப்பிள் புகழ்பெற்ற மேக் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்த அடுத்த ஆண்டு, ஸ்டீவ் ஜாப்ஸ் விநியோக அமைப்பில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்தார். கம்ப்யூட்டர்களை கையிருப்பு வைத்து விற்பதற்கு பதிலாக ஆர்டர் வருவதற்கு ஏற்ப தயார் செய்து விற்கலாம் எனும் முறையை கொண்டு வர தீர்மானித்தார்.

ஆனால், டோனா இதை ஏற்கவில்லை. ஆப்பிளின் விநியோக அமைப்பு சிறப்பாக இருந்த நிலையில், இந்த மாற்றம் தேவையில்லை என நினைத்தார். மேலும், விற்பனை மேலாளராக தனது பொறுப்பை இது குறைத்துவிடும் என்றும் நினைத்தார். எனவே, இந்த முடிவை செயல்படுத்தக் கூடாது என்று ஜாப்ஸிடம் வாதிட்டார். அதோடு ஒரு படி மேலே சென்று, இந்த மாற்றம் நிகழ்ந்தால் வேலையை விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.

இந்த மோதலில் ஒருவிதமாக சமரசம் ஏற்பட்டு டோனா பணியில் தொடந்தார். அதோடு அவருக்கும் ஜாப்ஸுக்கும் இடையிலான மோதல் ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ பத்திரிகையில் ஆய்வு செய்யப்பட்டு பிரபலமானது.

இதனிடையே, ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிளாரிஸ் எனும் நிறுவனத்தில் அவர் முக்கிய பொறுப்பு வகித்தார். மென்பொருளில் கவனம் செலுத்திய கிளாரிஸ் நிறுவனத்தை தனி நிறுவனமாக ஆக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த யோசனை ஏற்கப்படாத நிலையில், 1990-ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகினார்.

பணியில் இருந்து விடுபட்ட கையோடு அவர் பிரான்ஸ் சென்றுவிட்டார். அங்கு பிரெஞ்சு மொழி மற்றும் ஓவியம் கற்பதில் ஓராண்டை செலவிட்டார். 1992-ல் அவர் மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியா திரும்பினார்.

அடுத்து என்ன செய்வது எனும் கேள்வி இருந்தாலும், சி.இ.ஓ ஆக பதவி வகிக்க வேண்டும் எனும் விருப்பம் கொண்டிருந்தார். ஒரு நிறுவனத்தை தலைமையேற்று தன்னால் திறம்பட நடத்த முடியும் என அவர் நினைத்தார். ஆக, எந்த நிறுவனம் தன்னை சி.இ.ஓ-வாக ஏற்றுக்கொள்ளும் என வாய்ப்பு தேடத் துவங்கினார். இந்த நம்பிக்கை அவரது எதிர்காலத்திற்கு மட்டும் அல்ல; கையடக்க கம்ப்யூட்டர்களின் எதிர்காலத்திற்கும் தேவையானதாக இருந்தது.

உண்மையில் கையடக்க கம்ப்யூட்டர் சந்தையும் அவரைப் போன்ற ஒருவருக்காகத்தான் காத்திருந்தது. ஏனெனில் கையடக்க கம்ப்யூட்டர்கள் அப்போது புதுமையாக கருதப்பட்டதே தவிர, நடைமுறை சாத்தியம் கொண்டதாக அமைந்திருக்கவில்லை. இந்த காலகட்டத்தில்தான் பரஸ்பர நண்பர் மூலம் ஜெப் ஹாகின்ஸ் (Jeff Hawkins) என்பவரை டோனா சந்தித்தார்.

ஹாகின்ஸ் சாதாரணமானவர் இல்லை. கையடக்க கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த நோக்கத்துடன் பாம் கம்ப்யூட்டிங் எனும் நிறுவனத்தை துவக்கியிருந்தார். ஹாகின்ஸ் தொழில்நுட்ப திறன் கொண்டவர். ஆனால், நிறுவனத்தை நடத்துவதில் தனக்கு வழிகாட்டுதல் தேவை என நினைத்தார். ஆக, டோனாவின் அறிமுகம் கிடைத்ததும், அவரை இணை நிறுவனராக இணைத்துக்கொண்டு நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

ஹாகின்ஸ் தான் உருவாக்கி கொண்டிருந்த கையடக்க சாதனத்தின் மாதிரியை டோனாவிடம் காண்பித்தார். அந்த சாதனத்தை பார்தத்துமே டோனா உற்சாகமானார். கையடக்க கம்ப்யூட்டர் சாதனம் மீது அப்போது பரவலாக இருந்த அவநம்பிக்கைக்கு மாறாக, டோனா அந்த சாதனம்தான் எதிர்காலம் என நினைத்தார்.

பர்சனல் கம்ப்யூட்டர்களை அடுத்து எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் அப்போது பிரபலமாகத் துவங்கியிருந்தன. இதன் அடுத்த கட்டமாக, கம்ப்யூட்டரை சின்னதாக்கி பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வகையில் கையடக்க சாதனம் எனும் கருத்தாக்கம் அமைந்தது. இந்த வகை சாதனம், தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளர் (பிடிஏ) என அழைக்கப்பட்டன. ஆனால் உள்ளங்கை அளவு சாதனத்தில் கம்ப்யூட்டரின் திறனை கொண்டு வருவது எளிதாக இருக்கவில்லை. இவற்றில் போதாமையே அதிகம் இருந்தன.

ஆப்பிள் நிறுவனமே 'நியூட்டன்' எனும் பெயரில் கையடக்க டிஜிட்டல் சாதனத்தை கொண்டு வந்து பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் அதை கைவிட்டது. வேறு சில நிறுவனங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில்தான் ஹாகின்ஸ், கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கும் கனவுடன் பாம் கம்ப்யூட்டிங் நிறுவனத்தை துவக்கியிருந்தார்.

கையடக்க சாதனத்தில் செயல்படக்கூடிய கையெழுத்தை உணரும் திறன் கொண்ட மென்பொருள் ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார். ஆனால், ஜப்பானின் கேசியோ நிறுவனத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ஜூமர் (Zoomer) எனும் கையடக்க சாதனம் தோல்வியை தழுவியது. இந்த சாதனத்தின் செயல்திறன் சொற்பமாக இருந்த நிலையில் அதன் விலையோ மிகவும் அதிகமாக இருந்தது.

ஆனால், டோனா கையடக்க சாதனத்தின் பிரச்னைகளை விட, அதனால் ஏற்படக்கூடிய சாத்தியங்களையே பெரிதாக நினைத்தார். இந்த நம்பிக்கையோடு ஹாகின்ஸ் கனவுக்கு நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

இதனிடையே, கையடக்க சாதனத்தை உருவாக்க மற்றவர்களை நம்புவதை விட தாங்களே சொந்தமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் எனும் முடிவுக்கும் வந்திருந்தார். இதன் விளைவாக ஹாகின்சே கையடக்க சாதனத்தை வடிவமைத்து உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இப்படி தான் 'பாம் பைலட்' கையடக்க சாதனம் உருவானது.

1996-ல் 'பாம் பைலட்' சாதனம் சந்தையில் அறிமுகமானபோது மகத்தான வரவேற்பை பெற்றது. பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அதன் கையடக்க தன்மையோடு, வர்த்தக நிறுவன அதிகாரிகளுக்கு தேவையான அடிப்படை அம்சங்கள் பலவற்றை அதில் குறித்துக்கொள்ள முடிந்ததும், முக்கிய அலுவல்களை மேற்கொள்ள முடிந்ததும் கவர்ந்திழுத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்டைலஸ் டிஜிட்டல் குச்சி மூலம் அதன் திரையில் எழுதவும் முடிந்தது. அறிமுகமான முதல் மாதத்திலேயே 10,000 சாதனங்கள் விற்பனை ஆகின.

'பாம் பைலட்' பெரும் வரவேற்பை பெற்றதோடு, கையடக்க சாதன சந்தைக்கு புத்துயிர் கொடுத்தது. இதனிடையே, நிறுவனத்திற்கு யுஎஸ் ரோபோடிக்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதில் வெற்றி பெற்றிருந்த டோனா, 'பாம் பைலட்' சாதனத்தை சந்தைப்படுத்துவதிலும் முனைப்புக் காட்டினார்.

ஒருகட்டத்தில் யுஎஸ் ரோபோடிக்ஸ் நிறுவன ஆதிக்கம் அதிகரிக்கவே, டோனாவும், ஹாகின்ஸும் பாம் கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஹாண்ட்ஸ்பிரிங் எனும் நிறுவனத்தை துவக்கி 'வைசர்' எனும் மேம்பட்ட கையடக்க சாதனத்தை அறிமுகம் செய்தனர். ஒருகட்டத்தில் அமெரிக்காவில் வேகமாக வளரும் நிறுவனமாக உருவானது. எனினும் கையடக்க சாதன பிரிவில் அதிகரித்த போட்டியின் காரணமாக நிறுவனம் பின்னடைவை சந்தித்தது. அதன் பிறகு டோனாவும், ஹாகின்ஸும் நுமெண்டா எனும் ஏ.ஐ நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.

இன்று ஐஃபோன், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களில் கேம் ஆடுவது, வீடியோ எடுப்பது, கணக்குப் போடுவது எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கிறது. ஸ்மார்ட்ஃபோன்களின் ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள் கையில் இருக்கும் நவீன கம்ப்யூட்டர்கள் என்பதை கூட பலரும் உணர்வதில்லை.

ஆனால், ஸ்மார்ட்ஃபோன் எனும் அற்புதம் சாத்தியமானதில் 'பாம் பைலட்' எனும் கையடக்க கம்ப்யூட்டருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உள்ளங்கையில் உலகை கொண்டு வர முடியும் என்பதை முதலில் தெளிவாக உணர்த்திய சாதனம் அது. எப்போதும் கையில் ஒரு சாதனத்தை வைத்திருக்கலாம் எனும் எண்ணத்தை இயல்பாக்கிய 'பாம் பைலட்' போன்ற சாதனத்தின் ஏதிர்கால தேவையை புரிந்து கொண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற வைத்ததை டோனாவின் தனிப்பெரும் சாதனையாக கொண்டாடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com