இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் சர்வதேச தொடர் ஜனவரி 11ம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கவிருக்கும் நிலையில், இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச டி20 தொடர் இதுதான். ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் அணிக்குத் திரும்பியிருக்கும் நிலையில், இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேசமயம் இந்திய அணி மீதான கேள்விகளும் அதிகமாகவே உள்ளன. மொஹாலியில் நடக்கும் முதல் போட்டியில் கூட ஒருசில நிலைப்பாடுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், ஷிவம் தூபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், முகேஷ் குமார், அவேஷ் கான், ஆர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்
பிசிசிஐ அறிவித்திருக்கும் இந்த அணியைப் பார்க்கும்போது முதல் போட்டியிலேயே மிகப் பெரிய கேள்வி பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அது, கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு ஓப்பனராகக் களமிறங்கப்போவது யார் என்பது. சுப்மன் கில், யஷஷ்வி ஜெய்ஸ்வால் இடையே பெரும் போட்டி இருக்கப் போகிறது. இருவருமே கடந்த ஒரு ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருவருமே இந்தியாவின் எதிர்காலம் என்றும் அடுத்த தலைமுறை அணியின் ஓப்பனிங் பார்ட்னர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்தப் போட்டியில் ஒருவருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. உலகக் கோப்பைக்கான இந்திய ஸ்குவாடிலும் கூட இவர்களுள் ஒருவருக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியொரு தருணத்தில் முதல் போட்டிக்கு முன் நிச்சயம் ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு பெரும் குழப்பம் இருக்கும். போட்டி நடப்பது கில்லின் சொந்த ஊரான பஞ்சாப்பில். அதேசமயம் அவரது சமீபத்திய ஃபார்ம், ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு எதிரான தடுமாற்றம் ஆகியவை பிரச்சனைகளாகக் கருதப்படுகின்றன. அதனால் யஷஷ்விக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அதிரடியான தொடக்கம் கொடுப்பதோடு, அணிக்கு வலது - இடது காம்பினேஷன் அமையவும் காரணமாக இருப்பார். இது அவருக்கு சாதகமான அம்சம். அதேசமயம் அவரும் பவர்பிளேவைத் தாண்டி ஆடுவதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அனைத்து போட்டிகளிலுமே அவர் முதல் 6 ஓவர்களில் ஆட்டமிழந்தார். இருவருக்குமே சாதகம், பாதகம் என அனைத்தும் இருப்பதால் இந்திய அணி யாருக்கு முன்னுரிமை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கிறது.
இந்திய அணிக்கு முன் இருக்கும் இன்னொரு மிகப் பெரிய கேள்வி, அணியின் முதல் சாய்ஸ் ஸ்பின்னர் யார் என்பது. கடந்த சில டி20 தொடர்களில் இந்திய அணி பெரும்பாலும் ரவி பிஷ்னாயைத் தான் பயன்படுத்தியிருக்கிறது. அவரும் அணியின் நம்பிக்கைக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். மிடில் ஓவர்கள் மட்டுமல்லாமல் பவர்பிளேவிலும் விக்கெட் எடுக்கிறார். அதேசமயம் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னரான குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அதனால் இந்திய அணியின் பிரதான ஸ்பின்னராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலுமே எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்வியை இன்னும் குழப்பமடையவைக்கிறது ஆல்ரவுண்டர் ஸ்லாட். இந்தியாவின் நம்பர் 7 ஸ்லாட்டுக்கு ஒருநாள் உலகக் கோப்பையைப் போலவே அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாடுவது யாராக இருந்தாலும் அவர்கள் இரண்டாவது ஸ்பின்னராக இருப்பார்கள். இன்னொருவரை ஸ்குவாடில் பேக் அப் வீரராகக் கூட சேர்க்கலாம். இந்தத் தொடரில் ஜடேஜா இல்லாததால் எப்படியும் அக்ஸர் தான் விளையாடுவார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் இருப்பது மேலும் குழப்பத்தை அதிகரித்திருக்கிறது. அவரை நம்பர் 7, நம்பர் 8 என இரு ரோல்களிலும் பொருத்திப் பார்க்கலாம். வேறு ஆஃப் ஸ்பின்னர் இல்லாததால், அவருக்கும் உலகக் கோப்பை ஸ்குவாடில் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இப்படி ஸ்பின்னர் + ஆல்ரவுண்டர் ரோலுக்கு பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களோடு களமிறங்க நினைக்கும். இருந்தாலும் குல்தீப், பிஷ்னாய், அக்ஷர், வாஷிங்டன் என அதற்கு 4 ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பரிசோதித்துப் பார்க்காத வாஷிங்டனை இந்தத் தொடரிலாவது பரிசோதித்துப் பார்க்க நினைப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் இந்திய நிர்வாகம் யாரை வெளியே அமரவைக்கும் என்ற குழப்பம் நிலவுகிறது.
இவைபோக இன்னும் பல குழப்பங்கள் இருக்கின்றன. ஆனால் உலகக் கோப்பை ஸ்குவாடுக்குத் தொடர்புடைய சிக்கல்கள் இவை என்பதால், இந்த மூன்று ஸ்லாட்கள் மீது அதிக கவனம் இருக்கும்.