வெள்ளித்திரையில் அப்பாவை பாராட்டி பல பாடல்கள் வந்துள்ளன. ‘அன்புள்ள அப்பா..என்னப்பா? உங்கள் காதல் கதையைக் கேட்டால் தப்பா?’ என சிவாஜியும், நதியாவும் பாடும் பாடல் காலத்தால் மறக்க முடியாத எவர்கிரீன் படல். அதேபோல் பாக்யராஜின் ‘மெளன கீதங்கள்’ படத்தில் ‘டாடி டாடி ஓ மை டாடி’ பாடல். சில வருடம் முன்பு வெளியான அஜித்தின் என்னை அறிந்தால்’ படத்தில் வரும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடல். ‘தங்க மீன்கள்’ படத்தில் வரும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’ பாடல் காலத்தால் கரைக்க முடியாத அப்பாக்களுக்கன அஃமார்க் அடையாளமாகி போய் விட்டது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் வரும் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ பாடல் வரிகைகளை கேட்கும், கல்நெஞ்சம் கூட கண்ணீர் வடிக்கும். ‘தவமாய் தவமிருந்து’படத்தில் வரும் ‘ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா’பாடலும் இதே ரகம்தான். இந்தளவுக்கு அப்பாக்களின் வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது தமிழ் சினிமா. ஆன் த ஸ்கிரினில் தெரியும் அப்பாக்களை போலவே, ஆப் த ஸ்கிரினில் பல உன்னதமான அப்பாக்களை கொண்டுள்ளது தமிழ் சினிமா. இன்று அப்பாக்கள் தினம் என்பதால் அந்த அன்பான தகப்பன்களை பற்றி சில தகவல்கள்.
டேவிட் கிருபாகரன் தாஸ். தமிழ் சினிமா உள் வட்டாரத்தினர் மட்டுமே அதிம் அறிந்த பெயர் இது. இசைத்துறையில் மாபெரும் சாதனையாளராக இன்று ஒரு இசையமைப்பாளரின் தந்தை. தலைக்கு சின்னதாக ஒரு தொப்பி. கையில் எப்போதும் ஒரு குட்டி ஹேண்ட் பேன். எந்தத் தர்ம சங்கடமான நேரத்திலும் சிரிப்பை மறக்காத முகம். இவர்தான் டேவிட். இவரது மகனை பொறுத்தவரை இவர் அப்பா இல்லை. தெய்வம். அப்பாவை பற்றி பேச ஆரம்பித்தால் அவரது கண்களில் கண்ணீர் ததும்ப ஆரம்பித்துவிடும். அந்தளவுக்கு தன் மகனின் வளர்ச்சிக்காக அவரது ஆசிரியர் வேலையையே தானம் செய்த அப்பா இவர். இவ்வளவு பெருமைக்குரிய தந்தைக்கு யார்தான் மகன் என்கிறீர்களா? வேறு யார்? இசையமைப்பாளர் டி. இமான். இன்று உச்ச நட்சத்திரம் இவர். ஆனால் ஒரு காலத்தில் நம்மை யாராவது பாராட்ட மாட்டார்களா? என மனம் வெதும்பி வாழ்ந்து வந்தவர். ‘அதற்கான ஆசிர்வாதத்தை ஆண்டவன் கொடுத்தான்’ என்பார் இமான்.
இமான் தனது பழைய வாழ்க்கை பற்றி சொன்ன வார்த்தைகள் வளரும் தலைமுறைக்கு மகத்தான டானிக். “என் அம்மா கிட்னி சரியில்லாமல் படுத்தப்படுக்கையாய் கிடந்தக் காலத்தில் நான் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தேன். அப்போது எனக்கு நிறைய பணம் தேவை. வரும் வாய்ப்பில் நல்லது எது? கெட்டது எது? என யோசிக்ககூட நேரமில்லை. அம்மாவை காப்பாற்றியாக வேண்டும். அதற்காக என் விருப்பத்திற்கு எதிரான கதைகளைகூட கேட்டு இசையமைத்தேன். ‘உனக்கு இது பிடிக்காதேடா.. நீ எனக்காகதானே இத ஒத்துக்கிட்ட’னு என் அம்மாவே என்ன கேட்டிருக்காங்க.
சாதாரண குடும்பத்தில் இருந்து இசையமைக்க வந்தவன் நான். அப்பா சாதாரண வாத்தியார். நான் மியூசிக் டைரக்டராக வர வேண்டும் என்பதற்காக வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து உபகரணங்களை வாங்கிக் கொடுத்தவர் என் அப்பா. நான் நல்ல இசையை அப்போது போட்டேனா இல்லையா என எனக்கு முக்கியமில்லை. என் அம்மாவுக்கு ஒரு உண்மையான மகனாக இருந்து செய்ய வேண்டிய கடமையை செய்திருக்கிறேன். அவர் இன்று என்னோடு இல்லை. அவர்தான் என் தேவனிடம் சென்று பிரார்த்தனை செய்து எனக்கானதை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அப்படிதான் நம்பிக்கொண்டிருகிறேன்.” என்று ஒரு முறை கூறியிருந்தார் இமான். தாய்ப் பறவையைப்போல அவர் தன் இறகுக்குள் வைத்து தன் மகனை தாங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி பட்ட அப்பாவை இந்த உலகம் அதிகம் அறியாது.
எடிட்டர் மோகன். பெயரை சொன்ன உடனேயே பலருக்கும் நினைவில் வரும் முகம். ஜெயம் ரவி, இயக்குநரின் மோகன் ராஜா தந்தை. தனது மகன்களை சினிமாவில் வளர்த்து மேலே கொண்டு வரவேண்டும் என்பதற்காக முழு நேரமாக உழைத்தவர். ஜெயம் ரவி தனது ஒவ்வொரு பேட்டியிலும் அப்பாவை பற்றி புகழாமல் இருக்கவே மாட்டார். அவர் திட்டமிட்டதை போலவே தனது மகன்கள் இருவரையும் சினிமாத்துறையில் ஒரு உயரத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.
அடுத்தவர் மகனின் வளர்ச்சிக்காக மணிக்கணக்காக இல்லை, வருடக் கணக்காக உழைத்தவர். இவரது மகனை இவர் சினிமாவிற்குள் கொண்டு வந்த போது ஏகப்பட்ட எதிர்ப்புக்கள். அவரது மகனின் முகத்தை வைத்து சிலர் தரக் குறைவாக விமர்சித்தனர். ஆனாலும் இந்த அப்பா சளைக்கவில்லை. தொடர்ந்து போராடினார். அதன் பலன்; அவரது மகன் இன்று சினிமாவில் ஒரு உச்சநட்சத்திரம். இந்தக் கதையை படிக்கும்போதே யாரை சொல்கிறோம் என்பதை பலரும் ஊகித்திருப்பீர்கள். ஆம்! இளைய தளபதி விஜய்தான். அப்பாவால் அறிமுகமானாலும் அவரது உழைப்பால் அவர் உச்ச நட்சத்திரமானார். டான்ஸ், ரொமான்ஸ் என ஆரம்பக்கட்டத்தில் இருந்த விஜய், பிறகு ஆக்ஷன் கில்லியாக களம் இறங்கி இன்று ஒரு மாஸ் ஹீரோவாக வந்து நிற்கிறார்.
விஜய் நடிகரானது பற்றி அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருமுறை சொன்னதை என்றும் மறக்க முடியாது. “பலரையும் நடிகனாக பார்த்த நான் வீட்டுக்குள்ளயே ஒரு நடிகர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்கவில்லை. ஒருநாள் என்னிடம் வந்து ‘நான் ஹீரோவா நடிக்கப் போகிறேன்’னு விஜய் சொன்னார். ‘சினிமானா சும்மா இல்லைப்பா.. உனக்கு நடிப்பை பத்தி என்ன தெரியும்னு கேட்டேன். அதற்கு அவர் ரஜினியின் பழைய பட டயலாக்கை பேசிக்காட்டி தொடையை தட்டினார். நான் அசந்து போய்விட்டேன். ஆனாலும் தயக்கம். யோசிக்கிறேன்னு சொன்னேன். உடனே கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார். நாங்க தேட ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் உதயம் தியேட்டர்ல இருந்து போன் வந்தது. உங்க மகன் இங்க படம் பார்த்துகிட்டிருக்கார்னு. உடனே அங்கபோய் டிரைவரை விட்டு பார்க்க சொன்னேன். அவர் படம் பார்த்துகிட்டு இருந்தார். படம் முடியும் வரை காத்திருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தோம்” என்றார். அந்தளவுக்கு இந்த அப்பா மகனின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்.
இதை படிப்பவர்கள் என்னப்பா சிவக்குமாரை விட்டுவிட்டீர்களே என யோசிக்கலாம். அந்தளவுக்கு அஃமார்க் சினிமா குடும்பம். சேல்ஸ் ரெப் ஆக வேலை பார்த்த சூர்யாவை, சினிமா உலகம் தட்டி அழைத்த போது அவருக்கு இருந்த முதல் அடையாளம் சிவக்குமார் மகன். அந்தச் சீட்டை எடுத்து கொண்டு உள்ளே வந்த சூர்யா இன்று தனது உழைப்பால் ஒரு உச்ச நடிகராக முன்னுக்கு வந்திருக்கிறார். அடுத்து சூர்யா தம்பி கார்த்தி. இவருக்கு இரண்டு பலம் இருந்தது. ஒன்று அண்ணன் சூர்யா. மற்றொன்று அப்பா சிவக்குமார். தனது மகன்களை நடிகர்களாக மட்டுமல்ல, சிறந்த சமூக சேவகர்களாகவும் மாற்றிக் காட்டியவர் இந்தப் பொறுப்பான தந்தை.
இவர் அளவுக்கு பொறுப்பான இன்னொரு தந்தையும் இருக்கிறார். பிஞ்சுலேயே தனது மகனை பெரிய நடிகனாக மாற்றிக்காட்டியவர் இவர். அவர் யாரு? வேற யாரு, நம்ம டி.ஆரு. இப்படி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு படங்களில் டைட்டில் போட்டாலே தியேட்டரே அலறும். அந்தளவுக்கு சிம்புவை ஒரு நடிகராக உருவாக்கிய தகப்பன் இந்தத் தகப்பன். ஆகவேதான் அப்பாவின் அஃமார் அடையாளமாக அப்படியே இருக்கிறார் சிம்பு. நடை, உடை, பாவனை என சகலத்திலும் லிட்டில் டி.ஆர். இந்த எஸ்.டி.ஆர்.
அடுத்து பிரபு. அவரது மகனை ஒரு நடிகராக மாற்ற இன்றும் முதுகெலும்பாக விக்ரம் பிரபு பின்னால் நிற்பவர். விக்ரம் கதை கேட்பதில் இருந்து. அவருக்கு சினிமாவை புரிய வைப்பதில் இருந்து பிரபுவின் உதவி பெரியது. அப்பா இல்லாமல் அவைக்கு வரவே மாட்டார் விக்ரம். அந்தளவுக்கு அப்பா வளர்த்த பிள்ளை.
இவர்கள் அளவுக்கு இந்த அப்பாவை பலருக்கு ஞாபகம் இருக்காது. ஆனால் ‘செம்பருத்தி’ தொடங்கி ‘ஜீன்ஸ்’ வரை பெரிய நடிகராக வளர்ந்து வந்த பிரசாந்த் தமிழ் சினிமாவில் ஒரு ஆணழகனாக வலம் வந்தார். இந்த ஹீரோவை செதுக்கியதில் அப்பா தியாகராஜனின் பணி பல மடங்கு ஒளிந்துள்ளது.
இறுதியாக இரு தந்தைகள். இவரது இருமகள்கள் இன்று பெரிய நட்சத்திரம். பிக் பாஸ் ஆன இவர் இன்று அரசியல் களத்திலும் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். ஒன் அண்ட் ஒன் ஒன்லி உலகநாயகன் கமல்ஹாசன். இன்று ஸ்ருதியும் அக்ஷ்ராவும் அவரது நிழலில்தான் நிற்கின்றார்கள்.
இவரை குறிப்பிட்டால் இன்னொருவரையும் கூறியே ஆக வேண்டும். அவரை பலரும் ஊகித்திருப்பீர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது இரண்டு மகளின் வளர்ச்சிக்காக இவர் இழந்தது அதிகம். அந்தளவுக்கு சினிமா உலகில் மகள்களை உருவாக்க அவர்கள் பின்னால் ஆலமரமாக உயர்ந்து நிற்பவர் ரஜினி. மேற்கூறியவர்கள் போக அதர்வாவின் அப்பா முரளி, பாக்யராஜின் மகன் சாந்தணு, சத்யராஜின் மகன் சிபிராஜ் என பல அப்பாக்கள் தமிழ் சினிமாவில் தியாகத்தின் அடையாளமாக வலம் வருகிறார்கள்.