'இந்தியாவின் வாரன் பபெட்' - ஷேர் மார்க்கெட் 'கில்லி' ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பின்புலம்!

'இந்தியாவின் வாரன் பபெட்' - ஷேர் மார்க்கெட் 'கில்லி' ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பின்புலம்!
'இந்தியாவின் வாரன் பபெட்' - ஷேர் மார்க்கெட் 'கில்லி' ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பின்புலம்!
Published on

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா... இவரது பெயரை சொல்வதை விட 'இந்தியாவின் வாரன் பபெட்' என்று சொன்னால் அனைவருக்கும் எளிதாக புரியும். தரமான நிறுவனங்களாகப் பார்த்து நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வார். 'போர்ப்ஸ்' தகவல்படி, இவரின் சொத்து மதிப்பு 460 கோடி டாலர்கள். ஜூன் மாத நிலவரப்படி இவரது போர்ட்போலியோவில் 38 பங்குகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறார்.

சிஏ முடித்தவர்: மும்பையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவுடன் சி.ஏ படித்தார். இவரது அப்பா வருமான வரித்துறை அதிகாரி. அப்பாவும் அவரது நண்பர்களும் பங்குச்சந்தை குறித்து தொடர்ந்து உரையாடவே, பங்குச்சந்தை குறித்த ஆர்வம் பிறக்கிறது. 1960-ம் ஆண்டு பிறந்தவர், 1985-ம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்குகிறார். ரூ.5000-ல் முதலீட்டை தொடங்கினார். ஆரம்பத்தில் டாடா டீ பங்கில் முதலீடு செய்கிறார். மூன்று மாதத்தில் இந்தப் பங்கு சுமார் 3 மடங்காக உயர்கிறது. இதனைத் தொடர்ந்து பல பங்குகளில் முதலீடு செய்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 20 லட்ச ரூபாய் வரை லாபம் சம்பாதித்திருக்கிறார். இந்த லாபத்தில் பெரும் பகுதி 'சேச கோவா' பங்கு மூலமாகவே கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பல பங்குகளில் பெரும் தொகையை முதலீடு செய்யத் தொடங்கினார் ராகேஷ். அரவிந்தோ பார்மா, பிராஜ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கிரிசல் உள்ளிட்ட பங்குகளில் பெரும் தொகையை முதலீடு செய்தார்.

இவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா. இவரது பெயர் மற்றும் மனைவி பெயரையும் சேர்த்து 'ரேர்' (RaRe) எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனம் தொடங்கி, இந்த நிறுவனம் மூலமும் நிறுவனங்களில் முதலீடு செய்தார்.

நாளடைவில் ராகேஷ் முதலீடு செய்தால் முதலீட்டாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து முதலீடு செய்வதும் நடந்தது. மார்ச் மாதத்தில் நஸாரியா டெக்னாலஜீஸ் என்னும் பங்கின் ஐபிஓ வெளியானது. இந்த நிறுவனத்தில் 2018-ம் ஆண்டு முதலீடு செய்து 10 சதவீத பங்குகளை வைத்திருந்தார் ராகேஷ். மூன்றே ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம் சம்பாதித்தார் ராகேஷ்.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் செயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் கனரா வங்கியில் கணிசமான தொகையை முதலீடு செய்தார். இதுவும் பேசுபொருளாக மாறியது.

சமூகப் பங்களிப்பு: தன்னுடைய சொத்தில் - ஆண்டு வருமானத்தில் 25 சதவீதம் சமூகத்துக்காக ஒதுக்கி இருக்கிறார் ராகேஷ். இந்தத் தொகையை இந்தியாவில் சமூக மேம்பாட்டுக்கு செலவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். "கடவுளிடம் எனக்கு அதிகம் பணம் வேண்டும் என்று கேட்பதை விட, அதிக பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்று கேட்பேன்" என ராகேஷ் தெரிவித்திருக்கிறார்.

மும்பையில் உள்ள கண் மருத்துவமனைக்கு 75 லட்சம் டாலர், அசோகா பல்கலைக்கழகத்துக்கு 1.7 கோடி டாலர் என பல திட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார். "என்னுடைய ஆயுள் காலத்தில் 75 கோடி டாலர் அளவுக்காவது சமூக மேம்பாடுக்கு செலவு செய்ய வேண்டும்" என விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

ஆகாசா: ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை ஒரு முதலீட்டாளராக மட்டுமே பார்க்க முடியாது. ஆப்டெக் மற்றும் ஹங்கமா உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநர் குழுத் தலைவராக இருக்கிறார். இதுதவிர பல நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் இருக்கிறார். தற்போது ஆகாசா என்னும் விமான நிறுவனத்தில் பெரும்பான்மையான முதலீட்டாளராக இருக்கிறார்.

இந்த நிறுவனத்தில் 40 சதவீத பங்கு ராகேஷ் வசம் உள்ளது. மிகவும் குறைந்த விலை விமான நிறுவனமாக இது இருக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து துறையில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் இதில் இணைய இருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் தூபே இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். இது தவிர விமானப் போக்குவரத்து துறையின் பல முக்கிய அதிகாரிகள் இணைய இருக்கிறார்கள்.

இதுவரை விமானப் போக்குவரத்து துறை என்பது சவால் நிறைந்த துறையாகவே இருக்கிறது. எந்த நிறுவனமும் நீடித்த வெற்றியை பெற்றதில்லை. இங்கு வெற்றி அடைந்ந்த நிறுவனங்களை விட தோல்வியடைந்த நிறுவனங்களின் பட்டியல் மிக அதிகம்.

ஜுன்ஜுன்வாலாவின் மிடாஸ் டச் விமானப் போக்குவரத்து துறையில் என்னவாகும் என்பதே சந்தையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com