இந்தியாவில் கொரோனா கொஞ்சம் கொஞ்சம் குறையத் தொடங்கிவிட்டது. ஆனால், அது ஏற்படுத்தி சென்றிருக்கும் தாக்கம் மட்டும் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் மத்தியிலும் மறையாமல் இன்றளவும் அப்படியே உள்ளது. அந்த பாதிப்புகளில் முக்கியமானது உடல்பருமன். வீட்டிலிருந்தபடி உட்கார்ந்த இடத்திலேயே பள்ளி வகுப்புகள் நடக்கும், நினைத்த நேரத்தில் உணவு - தூக்கம் - நொறுக்குத்தீனிகள் கிடைக்கும் போன்ற காரணங்களால் உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை போன்றவை ஏற்பட்டு அதன் விளைவாய் குழந்தைகள் பலருக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது.
குழந்தைகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லக் காரணம், உடல்பருமன் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். டெல்லியில் சமீபத்தில் (கொரோனாவுக்குப் பின்) நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், 51% குழந்தைகளுக்கு பி.எம்.ஐ எனப்படும் உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. அதாவது, இரண்டில் ஒரு குழந்தை ஆரோக்கியமற்ற உணவுமுறையை பின்பற்றுகின்றார்களாம். அந்த ஆய்வின் முடிவில் நிபுணர்கள் குறிப்பிட்ட விஷயம், 'குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதைவிடவும் கொடியது, உடல்பருமனால் பாதிக்கப்படுவது' என்பது.
இந்த கொரோனா கால மாணவர் நலன் அத்தியாயத்தில் நாம் பார்க்கவிருப்பது, 'கொரோனா' காலத்தில் கொரோனாவைவிடவும் பல குழந்தைகளையும் கூடுதல் இன்னலுக்கு உள்ளாக்கிய 'உடல்பருமன்' பற்றிதான்.
இந்த அளவுக்கு குழந்தைகள் மத்தியிலான உடல்பருமனை ஆபத்தாக நிபுணர்கள் கூறுவதன் காரணம், அதனால் ஏற்படும் பிற பிரச்னைகள். உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில், 'அதிக உடல்பருமனோடு இருக்கும் குழந்தைகள் வருங்காலத்தில் வளர்ந்த பின் தொற்றா நோய்களான இதயப் பிரச்னை, சர்க்கரை நோய், ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ் எனப்படும் மூட்டு தொடர்பான பிரச்னைகளை மிக எளிதாக எதிர்கொள்ள நேரிடும்' எனக் கூறியுள்ளது.
சமீபத்திய மயோ கிளினிக் என்ற மருத்துவ தளமொன்றின் அறிக்கைபடி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர் என தெரியவருகிறது. 2017-ம் ஆண்டு நடந்த ஆய்வொன்றின்படி உலகளவில் 14.4 மில்லியன் உடல்பருமன் பிரச்னையுள்ள குழந்தைகளை கொண்டு 'அதிக உடல் எடை அதிகமுள்ள நாடு' என்ற பட்டியிலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது என அறிவித்தது நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ். முதல் இடத்திலுள்ளது, சீனா. இந்த எண்ணிக்கைகள் தற்போது கொரோனா காலத்துக்குப்பின் இன்னும் கூட அதிகரித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அமித் என்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் தனது சமீபத்திய பேட்டியொன்றில், “குறைவான உடலுழைப்பு - அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல் என்பதையே இன்றைய குழந்தைகள் அதிகமாக பின்பற்றுகின்றனர். அதுவும் கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவிடுவதால், இதை அவர்கள் வாடிக்கையாக்கி விட்டார்கள். இந்த மாறிய உணவுமுறைதான் குழந்தைகள் மத்தியில் உடல்பருமன் அதிகரிக்க முக்கியமான காரணம். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மரபணு, மனஅழுத்தம் போன்றவையாவும் உள்ளன” என்கிறார்.
சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சுந்தர ராமனிடம் இதுகுறித்து பேசினோம். “குழந்தைகள் மத்தியிலான உடல்பருமன் என்பது, நிச்சயம் பிரச்னைக்குரிய விஷயம்தான். குறிப்பாக வளரிளம் பருவத்திலுள்ள குழந்தைகளுக்கு, உடல்பருமனால் அவர்களின் வளர்ச்சியே பாதிப்புக்குள்ளாகும். ஹார்மோன் சிக்கல்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். ஆகவே உடல்பருமனாக இருக்கும் குழந்தைகள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மூலமாக தங்களின் உடல் எடையை குறைத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
கொரோனா காலத்தில் குழந்தைகள் மத்தியில் உடல்பருமன் அதிகரித்திருக்க, வீட்டுக்குள்ளேயே முடங்குதல் ஒரு காரணமென்றால், இன்னொரு முக்கியக் காரணம் இடமாற்றம். இந்த காலகட்டத்தில் பல குடும்பங்கள் கிராமங்களிலிருந்து முழுவதுமாக நகரத்துக்கும்; நகரத்திலிருந்து முழுவதுமாக கிராமத்துக்கும் மாறியுள்ளன. இதனால் உணவுமுறை தொடங்கி பல விஷயங்களில் அவர்களுக்கு மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் விளைவாக உடல்பருமன் ஏற்பட்டுள்ளது.
மரபணு காரணமாக உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எடை குறைப்பு என்பதை தாண்டி ஆரோக்கியமான வாழ்வியல் என்பது மிக மிக முக்கியம். எடை குறைப்புக்கும், ஆரோக்கியமான வாழ்வியலுக்கும் பின்பற்றப்பட வேண்டியவை:
* ஆரோக்கிய உணவு: காய்கறிகள், பழங்கள், கெட்ட கொழுப்புகள் அற்ற - புரதச்சத்து மிகுந்த உணவுகள், கொழுப்புச்சத்து அற்ற அல்லது குறைவான கொழுப்புச்சத்துள்ள பால் சார்ந்த பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குழந்தைகளின் சாப்பாட்டில் சரிபாதி பழங்களாகவும், காய்கறிகளாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் மிக மிக நல்லது. இவை இந்த நோய்த்தொற்று காலத்தில் அவர்களை நோய்த்தாக்கங்களிலிருந்து காக்கும்.
* விளையாட்டு: தினமும் கட்டாயம் ஒரு மணி நேரமாவது குழந்தைகள் வெளியிடங்களில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதய நலன் காக்கப்படும். மேலும் தசைகளும் வலுப்பெறும். உடல் வளர்ச்சியின்போது எலும்புகளும் வலிமையுறும். தினசரி விளையாடும் குழந்தைகளுக்கு, மன அழுத்தம் வருவதில்லை என்கிறது ஆய்வொன்று. கொரோனா நேரத்தில் வெளியில் வர வேண்டாமென சொல்லப்பட்டதை காரணம் கூறி, நம்மில் பலரும் குழந்தைகளை விளையாட அனுமதிக்கவே இல்லை. ஆனால் இப்போது கொரோனா வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே முடிந்தவரை அவர்களை வெளியில் விளையாட அனுமதிக்கவும். இதன்மூலம் குழந்தைளின் உடல் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு பழகும்.
* சர்க்கரையை குறைக்கவும்: பழச்சாறு, ஃப்ளேவர்ட் பால், சோடா, குளிர்பானங்கள் குடிப்பது என நேரடியாகவோ மறைமுகமாகவோ குழந்தைகளின் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு இன்று பன்மடங்காக அதிகரித்துள்ளது. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, சர்க்கரை தரப்படவே கூடாது. 2 வயதுக்குப்பின், 10%-க்கும் குறைவான அளவில் தரப்படலாம். 'சர்க்கரையை எப்படி குறைப்பது' எனக் கேட்கும் பெற்றோருக்கு, என்னுடைய மிகச்சிறந்த பரிந்துரை, தண்ணீர் அதிகம் கொடுங்கள் என்பதுதான். 'பழச்சாறு மூலம் சத்து கிடைக்குதே... தண்ணீரில் அப்படி கிடைக்காதே' எனக் கேட்பவர்களுக்கு, ஒரு தகவல். பழத்தை அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள முழுச் சத்தும் நமக்கு கிடைக்கும். சாறாக மாற்றப்படும்போது அது குறையும். ஆகவே பழத்தை அப்படியே கொடுக்கவும். மற்றபடி நிறைய தண்ணீர் குடிக்கும்படி குழந்தைகளை பழக்கப்படுத்தவும். இதன்மூலம் சர்க்கரையால் உண்டாகும் உடல்பருமன், எடை அதிகரித்தல், டைப் 2 சர்க்கரை நோய், இதயப் பிரச்னைகள், ரத்த அழுத்தம் சீரற்று போவது, கொலஸ்ட்ரால் கட்டுப்பாடின்றி போவது உள்ளிட்டவையாவும் தடுக்கப்படும்.
* டிஜிட்டல் திரைக்கான நேரத்தை குறைக்கவும்: டிஜிட்டல் திரைகளை விடவும், இயற்கை காட்சிகளை பார்க்க குழந்தைகள் பழக்கப்படுத்தப்பட வேண்டும். அதேபோல மொபைலோடும் கார்ட்டூனோடும் பேசாமல், உங்களுடன் பேசும்படி அவர்களை மாற்றவும். விளையாட்டிலேயே, அவர்களின் மூளையை தூண்டிவிடும்படியான டிஜிட்டல் அல்லாத கண்கவர் விளையாட்டுகள் இன்று வந்துவிட்டன. ஆகவே டிஜிட்டல் விளையாட்டுகளில் குழந்தைகள் செலவிடும் நேரத்தை குறைக்கவும். இதன்மூலம் கண் சார்ந்த பிரச்னைகளை தடுக்கலாம்; மேலும் குழந்தைகள் மத்தியில் உடலுழைப்பை மறைமுகமாக அதிகப்படுத்தலாம்.
* தூக்கம் முக்கியம்: தினமும் குழந்தைகள் குறைந்தது 7 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். படுக்கைக்கு 10 மணிக்கு செல்கின்றனர் என்றால், 8 மணிக்கு பிறகிருந்தேவும் மொபைலை அவர்கள் கைக்கு கொடுக்க வேண்டாம். அந்த இரண்டு மணி நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவது - அன்று நடந்த நிகழ்வுகளை விவாதிப்பது - ஏதேனும் புத்தகம் / நாளிதழ் வாசிப்பது போன்ற வாசிப்பு பழக்கங்களுக்கு குழந்தைகளை உட்படுத்தவும். தூக்கம் முறையாக கிடைக்காதபட்சத்தில் அவர்களுக்கு குறட்டை, ஸ்லீப் ஆப்னியா எனப்படும் தூக்கம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.
இவற்றை செய்யும்போது, குழந்தைகளின் வருங்காலத்தை நம்மால் பாதுகாப்பாக காக்க முடியும். இன்றைய தேதிக்கு பருமனாக இருக்கும் குழந்தைகள் மத்தியில் 'நான் குண்டாக இருக்கிறேனே' என்ற மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. மேற்சொன்ன வழிமுறைகளை குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தி திணிக்கும்போது அந்த மன அழுத்தம் அதிகரித்து, தன் உடலை தானே நேசிக்காமல் போகும் சூழல்கூட ஏற்படலாம். ஆகவே பெற்றோர் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். குழந்தைகள் எந்தச் சூழலிலும் 'என் உடலில் நோய் உள்ளது, குறைபாடு உள்ளது' என்று நினைக்காமல் இருக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் 'நீ ஆரோக்கியமாக இருக்கிறாய். இனியும் ஆரோக்கியமாக இருக்கவே இவற்றை செய்ய சொல்கிறோம்' எனக் கூறி, அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் அனைத்து விஷயங்களையும் செய்வது அவசியம். அப்போதுதான் குழந்தைகளுக்கு தாங்கள் எந்தவகையிலும் பிரச்னைக்குரியவர்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கும்” என்றார் விரிவாக.
முந்தைய அத்தியாயங்கள்: