'இந்திய ஹாக்கி அணியின் பெருஞ்சுவர்' - ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரனின் வியத்தகு எழுச்சி!

'இந்திய ஹாக்கி அணியின் பெருஞ்சுவர்' - ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரனின் வியத்தகு எழுச்சி!
'இந்திய ஹாக்கி அணியின் பெருஞ்சுவர்' - ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரனின் வியத்தகு எழுச்சி!
Published on

‘தி கிரேட் வால் ஆப் இந்தியா’ என்றால் விளையாட்டு பிரியர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்தான். ஆடுகளத்தில் நிலைத்து நிற்கும் அவரது தன்மைக்காக அப்படி சொல்வது வழக்கம். தற்போது இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் பெருஞ்சுவர் என எல்லோரும் போற்றும் அளவிற்கு தனது ஆட்டத்தின் மூலம் வானுயர உயர்ந்து நிற்கிறார் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரிட்டன் அணிக்கு எதிரான காலிறுதியில், துடிப்புடன் செயல்பட்டு கோல் போஸ்டை நோக்கி வந்த ஷாட்களை கோலாக மாற்ற விடாமல் சேவ் செய்து இந்திய அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினார் ஸ்ரீஜேஷ். அதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒலிம்பிக்கில், ஹாக்கி பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. 

ஆட்டத்திற்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் “காலிறுதியில் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தினார் ஸ்ரீஜேஷ். அதனால்தான் அவரை ‘தடுப்பு சுவர்’ என அழைக்கிறோம்” என பாராட்டியிருந்தார். 

யார் இவர்?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர். பாரம்பரிய மிக்க விவசாய குடும்பம் அவருடையது. பள்ளி படிப்பை படித்தபோது நீளம் தாண்டுதல், ஸ்பிரிண்டிங் மாதிரியான தடகள விளையாட்டுகளிலும், வாலிபாலும் ஆர்வமுடன் விளையாடி வந்துள்ளார். அவரை ஹாக்கி விளையாட்டின் பக்கமாக மடை மாற்றியது அவரது பயிற்சியாளர் சொன்ன வார்த்தைகள். 

‘நீ ஹாக்கி விளையாடு’ என பயிற்சியாளர் சொல்ல, அதன்படி அதில் முறையான பயிற்சி பெற்று கோல் கீப்பராக தேறியுள்ளார் ஸ்ரீஜேஷ். அதன்பிறகு நடந்தது அனைத்துமே மேஜிக். இன்று உலகின் தலைசிறந்த ஹாக்கி கோல் கீப்பர்களில் அவரும் ஒருவர் என்ற அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். 

இந்தியாவுக்காக சர்வதேச களத்தில் என்ட்ரி! 

கடந்த 2004 வாக்கில் ஸ்ரீஜேஷ் இந்திய ஜூனியர் அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். அவரது அற்புதமான கோல் கீப்பிங் திறனை நிரூபிக்க இரண்டே ஆண்டுகளில் சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். இருப்பினும் சீனியர் வீரர்களின் இருப்பால் அணியில் முழு நேர கோல் கீப்பராக தொடர முடியாமல் பல போட்டிகளில் மாற்று வீரராக மட்டுமே பங்கேற்றுள்ளார். 

நட்சத்திர வீரராக எழுச்சி!

சுமார் 5 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் பிரதான கோல் கீப்பரானார் ஸ்ரீஜேஷ். 2011-இல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் பாகிஸ்தான் வீரர்களின் நான்கு முயற்சிகளில் இரண்டை தடுத்து இந்திய அணியை சாம்பியனாக்கினார். 

தொடர்ந்து 2013 ஆசிய கோப்பைக்கான போட்டியிலும் அணியில் முக்கிய பங்காற்றி இனகயாவை இறுதி போட்டி வரை கொண்டு சென்றிருந்தார். அதோடு அந்தத் தொடரில் சிறந்த கோல் கீப்பர் விருதையும் அவர் வென்றிருந்தார். 2014-இல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் ஸ்ரீஜேஷின் பங்கு இருந்தது. அதே ஆண்டில் ஆசிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணியிலும் அவர் இருந்தார். 

லண்டன், ரியோ மற்றும் டோக்கியோ என மூன்று ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். இதில் ரியோ ஒலிம்பிக்கில் அவர் கேப்டனாக அணியை வழிநடத்திச் சென்றார். 

இந்தியாவுக்காக 242 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இதுவரை ஸ்ரீஜேஷ் விளையாடி உள்ளார். பலமுறை எதிரணியின் கோல் போடும் இலக்கை தவிடு பொடியாக்கி உள்ளார். 

நான் என் பணியை செய்தேன்!

குரூப் போட்டிகளில் இந்திய அணியின் தடுப்பு அரணாக நின்று செயல்பட்ட ஸ்ரீஜேஷ், நாக்-அவுட் சுற்றான காலிறுதியில் 4 சேவ் மற்றும் 4 பெனால்டி கார்னர் வாய்ப்பில் மூன்றை தடுத்தார். அதன் மூலம் அவரை இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். 

“இது எனது கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம். பல மெடல்களை குவித்துள்ளேன். இருந்தாலும் உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் பதக்கத்தை நான் வென்றதில்லை. அதை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். 

களத்தில் நான் எனது பணியை மட்டும் தான் செய்கிறேன். அணியின் மூத்த வீரனாக ஒவ்வொரு சேவும் சக அணி வீரர்களுக்கு எந்த அளவிற்கு எனர்ஜி கொடுக்கும் என்பதை நன்கு அறிந்தவன் நான். அதனால் ஷாட்களை சேவ் செய்கிறேன். நாங்கள் ஒவ்வொருவரும் ஆட்டத்துடன் எங்களை 100 சதவிகிதம் அர்பணித்துக் கொள்கிறோம். இது மாதிரியான சேவ்கள் நிச்சயம் எங்களது இலக்கை விரட்ட உந்து சக்தியாக அமையும்” என்கிறார் ஸ்ரீஜேஷ். 

இந்தியா பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது உறுதியாகும். அதற்கு இந்திய அணி மேட்ச் வின்னிங்க் பர்ஃபாமென்ஸை  கொடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com