ஜூலை 25 பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு அதிகம்?

ஜூலை 25 பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு அதிகம்?
ஜூலை 25 பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு அதிகம்?
Published on

நாளை மறுதினம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் யாருக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை. 

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்படும் எந்த ஒரு அரசியல் மாற்றமும் இரு நாட்டு உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பாகிஸ்தான் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு தயாராகியுள்ளது. நாளை மறுதினம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முறை பாகிஸ்தான் தேர்தலில் இரு கட்சிகளுக்கு இடையில் தான் கடுமையான போட்டி நிலவுகிறது. ஒன்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் நவாஸின் முஸ்லிம் லீக். மற்றொன்று இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி.

இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் நவாஸ் ஷெரிப்பின் நவாஸ் முஸ்லிம் லீக் கட்சியும் போராடி வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரிப் ஆட்சி அமைத்து பிரதமர் பதவி ஏற்றார். ஆனால் பனாமா பேப்பர் விவகாரம் அவரது பதவியை பறித்தது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நவாஸ் ஷெரிப் கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தத் தகுதி நீக்கத்தில் இருந்தே அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்ற நோக்கில் நவாஸ் ஷெரிப் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தார். ஆனால் சமீபத்தில்தான் அவருக்கு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்சியினருக்குமே பேரிடியாக அமைந்தது. 

லண்டனில் இருந்து ஊர்த் திரும்பிய உடனேயே நவாஸ் ஷெரிப்பும் அவரது மகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபஸ் ஷெரீஃப், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் தலைமையில்தான் தேர்தல் பரப்புரைகளும் நடந்து வருகின்றன. இந்தத் தேர்தலில் நவாஸ் முஸ்லிம் லீக்கின் பிரதான குற்றச்சாட்டே, இவர்கள் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது என்பதுதான். ராணுவம் பின்னிருந்து செயல்படுவதாகவும் அரசியல் நோக்கத்துடன் தான் நவாஸ் ஷெரிப்பின் கைது நடவடிக்கைகள் அரங்கேறியதாகவும் இவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தங்களுக்கு எதிரான சதி என்ற நவாஸ் முஸ்லிம் லீக் கட்சியின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும். இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என இம்ரான் கான் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் நிலையில், இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால் ராணுவத் தரப்பும் இம்ரான் கான் தரப்பும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றன. 

சமீபத்தில் வெளியான தேர்தல் கருத்து கணிப்புகள் கூட இம்ரான்கானுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பதாகவே சொல்கின்றன. எனினும் இம்ரானின் கட்சிக்கும் நவாஸின் கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. பாகிஸ்தானில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை தீர்மானிக்கும் ஒரு மாநிலம் பஞ்சாப். தற்போது நடைபெற உள்ள 272 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் 141 இடங்கள் பஞ்சாப்பில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றன. இங்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதே உண்மை. கடந்த தேர்தலில் நவாஸ் ஷெரிப் ஆட்சி அமைக்க காரணமாக அமைந்ததும் இங்கு அவரது கட்சிக்கு கிடைத்த பெரும்பான்மையே. பஞ்சாப் என்பது நவாஸ் முஸ்லிம் லீக்கின் கோட்டையாகவே சொல்லப்படுகிறது. எனவேதான் இம்ரான் கான், பஞ்சாப்பை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். 

கடந்த தேர்தலில் பஞ்சாப்பில் சொற்ப எண்ணிக்கையிலான இடங்களையே இம்ரான் கானின் கட்சி கைப்பற்றியது. இந்த முறை அந்த எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என இம்ரான் திட்டமிட்டுள்ளார். அதே வேளையில் கோட்டையை கோட்டை விடக் கூடாது என நவாஸ் முஸ்லிம் லீக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் நவாஸின் கட்சிக்கும் இம்ரானின் கட்சிக்கும் இடையே போட்டி நிலவினாலும், பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மீண்டும் தங்களது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி எடுத்து வருகிறது. பெனாசிர் புட்டோவின் மகனான பிலாவல் புட்டோ ஜர்தாரி, அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார். சில பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். ஊழல், வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றை எதிர்த்து களத்தில் நிற்கும் சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். இவர்களில் மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வெளி வரும் போதுதான் தெரிய வரும். ஆனால் யார் பிரதமராக பொறுப்பேற்றாலும் பாகிஸ்தான் ராணுவமே முழு அதிகாரங்களையும் கொண்டதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.

பாகிஸ்தான் தேர்தல் நேர்மையாக தான் நடக்கிறதா என்ற சந்தேகம் பலராலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையமோ தேர்தல் நேர்மையாகவே நடத்தப்படுவதாக கூறிவருகிறது. இந்த முறை பாகிஸ்தான் தேர்தலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெரும் சவாலாக அமைந்துள்ளது. 4 நாட்களில் நடந்த மூன்று தாக்குதல்களில் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட 152 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் தேர்தல் நடைபெறும் நாளான ஜூலை 25ஆம் தேதி அன்று மூன்றே முக்கால் லட்சம் ராணுவ‌வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்கிறது தேர்தல் ஆணையம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com