பசிப்பிணிதான் மனிதனுக்கு பெரும்பிணி, ஆதலால் பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம் என்று நாள்தோறும் அணையாத அடுப்பெரிய செய்து காலமெல்லாம் அன்னதானம் அளிக்கும் அரும்பணியை தொடங்கிய அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று.
கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் 05/10/1823 அன்று இராமையா பிள்ளை, சின்னம்மையார் ஆகியோரின் மகனாக இராமலிங்கம் எனும் திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவர் பிறந்த ஆறாவது மாதத்திலேயே இவரின் தந்தை மரணமடைந்த காரணத்தால், தாயார் மற்றும் அண்ணன் சபாபதி அவர்களின் வளர்ப்பில் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தார் இவர். சிறுவயதிலேயே பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாத வள்ளலார், கந்தக்கோட்டம் முருகன் கோவிலுக்கு தினமும் சென்று மனமுருக பாடல்களை பாடத்தொடங்கினார்.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற தொடங்கும் பாடலை கந்தக்கோட்டத்தில் வள்ளலார் பாடுவதை கண்ட அவரின் ஆசிரியர் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், வள்ளலாரின் மெய்யாற்றல் உணர்ந்து மனமுருகினார், வள்ளலார் தான் கற்பிக்கும் கல்விக்கு அப்பாற்பட்டவர் என்று கூறினார். அதன்பின்னர் வள்ளலார் முழுவதுமாக இறைப்பணியில் தொண்டாற்ற தொடங்கினார். தனது ஒன்பதாவது வயதிலேயே அறிஞர்கள் நிறைந்த அவையில் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் மிகச்சிறந்த ஆன்மீக உரையாற்றினார் வள்ளலார். அதன்பின்னர் நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கும் சென்று இறைவனை வேண்டி வழிபட்டு பாடல்களை பாடினார். இவரது பாடல்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு, உருவ வழிபாடு எதிர்ப்பு, வேத ஆகம எதிர்ப்பு, பெண் விடுதலை, உயிர் நேயம் போன்ற கருத்துகள் பொதிந்து இருந்தது.
வேதம், ஆகமம், புராணம், சாத்திரம் , இதிகாசம் எதையும் நம்பவேண்டாம், அது எதுவுமே உண்மையை சொல்லவில்லை, பசிப்பிணி போக்குவதுதான் எல்லா அறங்களுக்கும் மேலானது என்று போதித்த வள்ளலார், 1867 ஆம் ஆண்டில் வடலூர் அருகே பார்வதிபுரம் என்னும் கிராமத்தில் மக்களிடம் 80 காணி நிலத்தை தானமாக பெற்று சமரச சுத்த சன்மார்க்க தரும சாலையை நிறுவினார். இங்கு மக்களிடம் தானமாக பொருட்களை வாங்கி ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்றுவேளையும் உணவு வழங்க தொடங்கினார், அந்த அன்னதான பணி இப்போதுவரையும் தொடர்ந்து நடந்து வருகிறது. 1867 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி நிறுவப்பட்டு எரியத்தொடங்கிய 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்ட அடுப்பு 153 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரிந்து, மக்களின் பசிப்பிணியை எரித்து வருகிறது.
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உயிர்களின் நேயம் பேசிய வள்ளலாரின் கொள்கைகள்…
வடலூரில் சத்திய தரும சாலைக்கு அருகில் 1871ஆம் ஆண்டு ஒளித்திருக்கோவிலை அமைக்கத்தொடங்கினார் வள்ளலார், அதன்பின்பு 1872 ஆம் ஆண்டு முதல் தைப்பூச நாளில் ஏழு திரைகள் விலகி இந்த கோவிலில் ஜோதி தரிசனம் நிகழ்ந்து வருகிறது, 1874 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் ஜோதி ஒளியாய் மாறினார் வள்ளலார்.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய கருத்துகள் அனைத்தும் முற்போக்கானதாக இருந்ததால் அவர் அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். வள்ளலார் எழுதிய திருவருட்பா பாடல்கள் சைவ சமயத்துக்கு எதிராக இருப்பதாகக்கூறி பல்வேறு விமர்சன நூல்கள் எழுதப்பட்டன, வழக்குகள் கூட நடந்தது. தமிழ் மண்ணில் சித்தர்களுக்கு பிறகு 19 ஆம் நூற்றாண்டிலேயே பரந்துபட்ட சமூக நீதி, சமத்துவ, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை, சாதியொழிப்பு கருத்துகளை முதன் முதலில் பேசியவர் வள்ளலார்தான்.
இவர் ஆன்மீக அறிஞர் என்பது மட்டுமல்ல சொற்பொழிவாளர், சித்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளர் என்ற பன்முக திறமை கொண்டவர், இவரின் மருத்துவ கருத்துகள் சிறப்பானதாக இன்றும் போற்றப்படுகிறது. இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது, இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
இவர் வளரும் குழந்தைகளுக்கு வழங்கிய அறிவுரைகள் அனைவருக்கும் ஏற்றது, அவை..