தேனீயை வைத்து யானை விரட்டலாம்: ஆர்வத்தைக் கிளப்பும் ஆப்பிரிக்க நாட்டு ஐடியா

தேனீயை வைத்து யானை விரட்டலாம்: ஆர்வத்தைக் கிளப்பும் ஆப்பிரிக்க நாட்டு ஐடியா
தேனீயை வைத்து யானை விரட்டலாம்: ஆர்வத்தைக் கிளப்பும் ஆப்பிரிக்க நாட்டு ஐடியா
Published on

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் மனித – யானை எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல்வேறு காரணங்களினால் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்துவதோடு இதனை தடுக்க முயலும் மனிதர்களையும் தாக்கி கொன்றுவிடும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதே போல் இம்மோதலில் யானைகளும் மின்சாரம் பாய்ச்சப்படுதல், விஷ ஊசிகள் செலுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மனிதர்களால் கொல்லப்பட்டு வருகின்றன. இந்த மனித – யானை எதிர்கொள்ளலை கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் போதிய பலனை தரவில்லை என்பதால் பயிர் மற்றும் உயிர் இழப்புகள் தொடர்கின்றன. 

ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் ஊடுருவலை தடுக்க நடைமுறையில் உள்ள தேனீ வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், வனத்துறையும் முயற்சி எடுத்து வருகிறது. மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பணியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். இதன்படி விவசாய தோட்டங்களை சுற்றி போடப்பட்டுள்ள சோலார் மின் வேலியின் அருகில் சீரான இடைவெளியில் மரப் பெட்டிகளாலான தேன் கூடுகளை அமைத்து அதில் தேனீக்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பெட்டியிலும் ராணி தேனீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருப்பதாலும் இவை நாள் முழுவதும் தேன் சேகரிப்பு பணியில் சுறுசுறுப்புடன் இயங்கியபடி உள்ளதாலும் இவற்றின் இடைவிடாத ரீங்கார ஒலிகேட்டு யானைகள் இதன் அருகில் வருவதில்லை என்கின்றனர் விவசாயிகள். தேனீ பெட்டிகளின் அருகில் உள்ள தோட்ட வேலியினை தகர்த்து விளை நிலங்களுக்குள் யானைகள் புக முயலும் போது ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்று சேர்ந்து ஆக்ரோஷமாக கொட்டியபடி யானையை விரட்டியடிக்கும். 

ஐந்து டன் எடை கொண்ட பிரமாண்ட யானையின் துதிக்கையில் உள்ள மென்மையான பகுதியில் ஒரு கிராம் எடை மட்டுமே கொண்ட தேனீ கொட்டினால் அதனை யானைகளால் தாங்க இயலாது என்பதுடன் அவை தங்களது காதுகளுக்குள் புகுந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே அவை விலகி ஓடுகின்றன என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். குறிப்பாக யானைகளின் ஊடுருவல் அதிகமாக உள்ள மலையடிவார கிராம விவசாயிகள் இது போல தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுப்பது மட்டுமின்றி; தூய்மையான தேன் சேகரிப்பின் மூலம் கூடுதல் வருவாயும் கிடைக்கும், மேலும் தேனீக்களின் மகரந்த சேர்க்கையினால் மகசூலும் நாற்பது சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தேனீக்கள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முறையான பயிற்சியும் அளிக்கப்படுவதால் மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலரும் தற்போது தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முயற்சி பரவலாக்கப்பட்டு பலனளிக்க துவங்கும் போது மனித – யானை மோதல்கள் குறைந்து இதனால் ஏற்படும் இழப்புகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com