நரிக்குறவர் பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதுக்கீடு.. சான்றுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

நரிக்குறவர் பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதுக்கீடு.. சான்றுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
நரிக்குறவர் பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதுக்கீடு.. சான்றுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
Published on

நரிக்குறவர் பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதிக்கீடு செய்ததோடு, வங்கி கடன்கள் வழங்குவதற்கான சான்றுகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும், நரிக்குறவ சமுதாய மக்களுக்கு கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதில் நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் என மொத்தம் 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும், 12 பயனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பூஞ்சேரி பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி என்பவர் முதல்வர் வழங்கிய முத்ரா கடனுதவி தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தங்களின் குடியிருப்பு பகுதியில் தனிநபர் கழிப்பறை உள்பட எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நேற்று மனு வழங்கினார்.

இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், நரிக்குறவ மக்களை சந்தித்து அவர்களின் குறைளை கேட்டறிந்தார்.

பின்னர், நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு வங்கி கடனாக ரூ.5 லட்சம் மற்றும் கடற்கரைக்கு செல்லும் வழியில் ஒரு கடை அமைத்து தர ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மூன்று பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வங்கி கடன் வழங்கவும் மற்றும் ஐந்துரதம் சிற்பம் அருகே அமைந்துள்ள, புதுநகர் வளர்ச்சி குழுமத்துக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 3 கடைகளும் வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டன.

இதற்கான சான்றுகளை, பேரூராட்சி அலுவலகத்தில் நரிக்குறவ பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சான்று வழங்கும் நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சார் ஷாஜீவனா, பேரூராட்சி தலைவர் வளர்மதி யஷ்வந்ராவ், செயல் அலுவலர் கணேசன் மற்றும் நரிக்குறவ மக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பேசினார். அப்போது பேசிய அவர், நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் அனைவரும் தனிநபர் கழிப்பறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நரிக்குறவ மக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 12 பயனாளிகளில் 4 பேர் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கவில்லை. 5 பயனாளிகளுக்கு ஒருவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் மற்ற நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரிரு நாட்களில் தொழில் தொடங்குவதற்கான கடன் தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள 3 பயனாளிகள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை வழங்கியதும், அவர்களுக்கும் வங்கி கடன் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கடற்கரைக்கு செல்லும் வழியில் ஒரு பயனாளிக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கடைக்கு பேரூராட்சி நிர்வாகம் வாடகை நிர்ணயம் செய்யும். ஐந்துரதம் சிற்பம் அருகே வழங்கப்படும் 3 கடைகளுக்கான வாடகையை புதுநகர் வளர்ச்சி குழுமத்துக்கு செலுத்த வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com